சிறுவர் சிறுகதை : குரங்கு பங்கிட்ட நெய்யப்பம்!

பழைய கதை புதிய சிந்தனை:
Ghee appam shared by monkey!
Children Story
Published on

ரண்டு பூனைகள் நண்பர்கள் தங்களுக்கு எந்த உணவு கிடைத்தாலும் அதை சரிசமமாகப் பங்கிட்டு சாப்பிடும் வழக்கத்தை வைத்திருந்தன.

ஒருநாள் ஓரிடத்தில் நெய் அப்பத்தைப் பார்த்தன. அதை உடனே முழுவதுமாக சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் ஒரே சமயத்தில் அந்த இரண்டு பூனைகளின் மனதிலும் எழுந்தது.

ஒரு பூனை ஓடிச்சென்று அந்த அப்பத்தைக் கைப்பற்றி அதைச் சாப்பிட முனைந்தது. மற்றொரு பூனையோ அந்த அப்பத்தைத்தானே முழுவதுமாக சாப்பிட விரும்பி “அப்பத்தை நான்தான் முதலில் பார்த்து உனக்கு சொன்னேன். அது முழுவதும் எனக்குத்தான் சொந்தம்” என்றது.

அப்பத்தைக் கைப்பற்றிய பூனையோ “நீ முதலில் பார்த்திருக்கலாம். ஆனால் ஓடிச்சென்று அதை முதலில் கையில் எடுத்தது நான்தான். அதனால அப்பம் எனக்கே சொந்தம்” என்றது.

இப்படியே இரண்டு பூனைகளும் அந்த நெய் அப்பத்திற்காக மாறி மாறி வாதம் செய்து சண்டையிட்டுக் கொண்டிருந்தன.

அப்போது அந்தப் பக்கமாக ஒரு குரங்கு வந்தது.

“என்ன ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிற மாதிரி இருக்கே ?”

மத்தியஸ்தம் செய்ய ஒரு ஆள் தேவை என்பதை உணர்ந்த பூனைகள் இரண்டும் நடந்த விஷயத்தை அந்த குரங்கிடம் தெரிவித்தன.

இதைக்கேட்ட அந்த குரங்கு ‘ஆஹா இன்னைக்கு நமக்கு நல்ல யோகம்’ என்று மனதுள் நினைத்துக்கொண்டு “கவலையேபடாதீங்க. நீங்க ரெண்டு பேருமே என் ப்ரெண்ட்ஸ்தான். ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பிடிவாதம் பிடிச்சா இந்த அப்பத்தை ரெண்டு பேராலேயுமே சாப்பிட முடியாம வேஸ்ட்டா போயிடும். நான் உங்க ரெண்டு பேருக்கும் சரிசமமா இந்த அப்பத்தைப் பங்கிட்டுத் தர்றேன்” என்றது.

குரங்கு சொன்னதை பூனைகள் யோசித்துப் பார்த்தன. உண்மைதான். அப்பத்திற்காக இருவரும் சண்டையிட்டுக் கொண்டால் கடைசியில் யாருமே அப்பத்தை சாப்பிட முடியாமல் போய்விடும் என்பது புரிந்தது.

இதையும் படியுங்கள்:
Short Story: The Proud Peacock!
Ghee appam shared by monkey!

இரண்டு பூனைகளுக்கும் வேறு வழியில்லை. குரங்கிடம் சரியென்று சொல்ல அந்த குரங்கு இதுதான் சமயமென்று ஓடிச்சென்று ஒரு தராசை எடுத்துக்கொண்டு வந்தது. இரண்டு பூனைகளும் நாவில் எச்சில் ஊற குரங்கு பங்கிட்டுத் தரப்போகும் அப்பத்தை ருசி பார்க்கக் காத்திருந்தன.

குரங்குத் தன் வேலையைத் தொடங்கியது. வேண்டுமென்றே அப்பத்தை சரிசமமாகப் பங்கிடாமல் ஒன்றைப் பெரிதாகவும் மற்றொன்றை சிறியதாகவும் பங்கிட்டது.

“அடடா. சரி பாதியா கட் பண்ண நெனைச்சேன். ஆனா ஒண்ணு பெரிசாயிடுச்சி. இன்னொன்னு சின்னதாயிடுச்சி. ஒண்ணும் பிரச்சினை இல்ல. அதை இப்ப சரி பண்ணிடறேன்” என்று சொல்லி பெரிதாக இருந்த அப்பத்தை சற்று பிட்டு அதை வாயில் போட எத்தணித்தது.

இரண்டு பூனைகளும் குரங்கின் தந்திரத்தை அக்கணமே புரிந்துகொண்டன.

ஒரு பூனை குரங்கு வாயில் போட எத்தணித்த அப்பத்துண்டை சாப்பிட விடாமல் தடுத்து வாங்கி அதைத் தன் வாயில் கவ்விக்கொண்டு “இப்ப எடை போடுங்க குரங்கண்ணே” என்றது.

குரங்கு இதை எதிர்பார்க்கவில்லை.

தராசில் எடை போட்டபோது ஒரு தட்டு தாழ்ந்து மற்றொரு தட்டு உயர்ந்திருந்தது.

குரங்கு தாழ்ந்திருந்த தட்டிலிருந்த அப்பத்தை எடுத்து அதைச் சற்று பிட்டு மீண்டும் வாயில் போட எத்தணித்தது.

இப்போது மற்றொரு பூனை சாமர்த்தியமாக குரங்கு வாயில் போட எத்தணித்த அப்பத் துண்டை சாப்பிட விடாமல் தடுத்து வாங்கி அதைத் தன் வாயில் கவ்விக் கொண்டது.

இரண்டு பூனைகளிடம் இருந்த துண்டு அப்பங்கள் ஒரே அளவிலேயே இருந்தன.

ஒரு பூனை தன் அப்பத்தை மென்றபடி கண்ணசைக்க மற்றொரு பூனைத் தன் வாயிலிருந்த அப்பத்தை ருசித்து சாப்பிடத் தொடங்கியது.

“சரி குரங்கண்ணே. இப்ப இருக்கிறதை ரெண்டு துண்டு அப்பங்களையும் எங்ககிட்டேயே குடுங்க. நாங்க ப்ரெண்ட்ஸ்தானே. முன்னே பின்னே சாப்பிட்டுக்கறோம்”

தராசில் மீதமிருந்த இரண்டு துண்டு அப்பங்களையும் பூனைகள் ஆளுக்கொன்றாக எடுத்துக்கொண்டன.

இதையும் படியுங்கள்:
காஜலும், லிப்ஸ்டிக்கும் நீண்ட நேரம் அழியாமல் இருக்க டிப்ஸ்!
Ghee appam shared by monkey!

இரண்டு பூனைகளும் தன் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டன என்பதை அறிந்த குரங்கு “நீங்க ரொம்ப சாமர்த்தியசாலிங்க. உங்க சாமர்த்தியம் எனக்கு வராதுப்பா. நீங்களே நெய்யப்பத்தை சாப்பிட்டு சந்தோஷமா இருங்க. ஆளை விடுங்கடா சாமி” என்று தராசை அங்கேயே போட்டுவிட்டு ஓடிப்போனது.

இரண்டு பூனைகளும் தங்கள் தவறை உணர்ந்தன. தங்களிடமிருந்த மீதி அப்பங்களை பெரியது சிறியது என்று பாராமல் சுவைத்து முடித்தன.

“இனிமே நமக்குள்ளே எதுக்காகவும் சண்டையே வரக்கூடாது என்ன சொல்றே” என்று ஒரு பூனை கேட்க மற்றொரு பூனையும் “நிச்சயமா. நீ சொல்றது சரிதான்” என்று மகிழ்ச்சியாகக் கூறியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com