உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்!

உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்!
Published on

நாய், பூனை, எலி, காகம் போன்ற விலங்கு மற்றும் பறவைகள் ஆங்காங்கே இயற்கையாக இறந்து கிடப்பதைப் பார்த்திருப்போம். ஆனால், முருகப்பெருமானின் வாகனமான மயில் எங்காவது இயற்கையாக இறந்து கிடப்பதைப் கண்டிருக்கிறீர்களா? விஷம் வைத்து மற்றும் வேட்டையாடப்பட்டு இறந்து கிடக்கும் மயில்களை பார்த்திருப்போம். ஆனால், இயற்கையாக இறந்து கிடக்கும் மயில்களை கண்டிருக்க முடியாது. மயில்களுக்கு இயற்கையாக வயதாகி இறப்பதற்கு மிகச் சரியாக 48 நாட்களுக்கு (ஒரு மண்டலம்) முன்பே அவற்றுக்கு தனது இறப்பு நாள், நேரம் மற்றும் நொடி அனைத்தும் துல்லியமாகத் தெரிந்துவிடுமாம். தெரிந்த அந்த நொடியில் இருந்து அந்த மயில் மலை மீதுள்ள ஏதாவதொரு முருகன் கோயிலில், ஒரு மறைவான இடத்தைத் தேர்ந்தெடுத்து ஒரு வேளை உணவும், சிறிது நீரூம் மட்டும் அருந்தி, ‘மயில்துயில்’ எனும் விரதத்தைக் கடைபிடிக்குமாம்.

கடைசி ஒரு வாரம் எதுவும் உண்ணாமல், அருந்தாமல் அமைதியாக அமர்ந்துவிடுமாம். அது இறப்பதற்கு முதல் நாள் மட்டும் ஒரு கோமாதாவின் கோமியத்தை ஏழு சொட்டுகள் அருந்தும் என சொல்லப்படுகிறது. அப்போது மயிலின் கண்கள் வேர்த்து ஆறு சொட்டு கண்ணீர்த் துளிகளை பத்திரமாக ஒரு பாறைப் பிளவுக்குள் விடும் என்று கூறப்படுகிறது. அடுத்த நொடி அந்தப் பாறை பிளந்துகொள்ள மயில் அதனுள் அமர்ந்து தோகையை விரிக்க பாறை அதை நெருக்க அந்த முழு நாளும் மயில், ‘ஓம் முருகா’ என்று சொல்லிக்கொண்டே தனது உயிரை விடும் எனச் சொல்லப்படுகிறது.

தோகை இல்லாத பெண் மயில்கள் தங்கள் கண்ணீரை வேல மரத்தில் விட்டு, அது பிளந்ததும் இதேபோல அமர்ந்து உயிர் துறக்குமாம்‌. வெள்ளை நிற மயில்கள் மட்டும் அந்தக் கோயிலிலுள்ள வேலவன் கையில் இருக்கும் வேலில் பறந்து வந்து விழுந்து தம்மை மாய்த்துக் கொள்ளும் என்று கூறுகிறார்கள்! அப்படி வேலில் இறக்கும் மயில்கள் அடுத்த நொடியே செவ்வரளி மலர் மாலையாக மாறி முருகன் காலில் விழுமாம்! இந்த அரிய உண்மைகளை எல்லாம் படிக்கும்போது, 48 தினங்கள் - 1 மண்டலம், 7 சொட்டு கோமியம் - ஓம் சரவணபவ ஏழெழுத்து, 6 சொட்டுக் கண்ணீர் – அறுபடை வீடு, செவ்வரளி – முருகப்பெருமானுக்கு உகந்த பூ, வேல மரம் - வேலுண்டு வினையில்லை, வேலில் மரணம் - யாமிருக்க பயமேன் என்பதை உணர்த்துகிறது. அதனால்தான் தெய்வ அம்சம் பொருந்திய மயில் முருகனுக்கு வாகனமாக மட்டுமின்றி, நம் நாட்டின் தேசியப் பறவையாகவும் இருக்கிறது. இப்படி தனது மரண காலத்தில் கூட மிகவும் அமைதியாக எந்த உயிரினங்களுக்கும் இடையூறு செய்யாமல் முருகன் கோயிலேயே நோன்பிருந்து உயிர் துறக்கின்றன மயில்கள்.

விபத்து மற்றும் வேறு பிற காரணங்களால் இறக்கும் மயில்களை மற்ற மயில்கள் பாம்புப் புற்றின் அருகே இழுத்துச் சென்று விட்டுவிடும்! அந்த சரவணனடி வாழ் சர்ப்பமும் மயில் உடலைப் புற்றுக்குள் தள்ளி அந்த உடலை மூடிவிடும். இது முற்றிலும் உண்மை. இது குறித்து, மயிலாடுதுறை மயில்சாமி சித்தர் எழுதிய, ‘மயில் அகவல்’ என்னும் நூலில் இந்தத் தகவல்கள் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. மயில்சாமி சித்தர் பழனி மலையுச்சி பாறையில் ஒற்றைக் காலில் தவமிருந்து முருகனிடம் வேண்டிக் கொண்ட வரங்களில் மயில்கள் தாங்கள் இறக்கும் நிலையை அறிந்து நோன்பிருந்து இறக்க வேண்டும். அதன் உடல் யார் கண்ணிலும் படக்கூடாது என்பதாகும். தோகை விரிக்கும்போது மயில்களுக்கு உடல் சிலிர்ப்பது போல இதைப் படிக்கும்போது நமக்கும் மெய் சிலிர்க்கிறதல்லவா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com