ஹாய் குட்டீஸ்,
உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களுக்கும் ஒரு பலம், பலவீனம் உண்டு. யானையின் பலம் தும்பிக்கையிலே, மனிதனின் பலம் நம்பிக்கையிலே என்கிற மாதிரி இவனின் பலம் முட்களிலே! யார் அவன் என்று கண்டுபிடிச்சிட்டீங்களா குட்டிஸ்? அவன் தான் முள்ளம்பன்றி. முள்ளம்பன்றியை பற்றிய சில சுவாரசியமான தகவல்களை இப்பதிவில் காணலாம்.
முள்ளம்பன்றிகள் சுமார் 11 முதல் 18 கிலோ வரை எடையுள்ள தாவரங்களை உண்ணக்கூடிய ஒரு சிறிய விலங்கு. உலகின் பல்வேறு இடங்களிலும் பல வகையான முள்ளம்பன்றிகள் இருப்பதாக கூறப்படுகிறது. பார்ப்பதற்கு உருவத்தில் சிறியதாக இருந்தாலும், அவ்வளவு சீக்கிரம் எந்த விலங்கும் இதனை நெருங்குவதில்லை. காரணம் அதன் உடம்பில் உள்ள முட்கள். ஒரு முள்ளம்பன்றியின் உடலில் கிட்டத்தட்ட 30,000 முட்கள் வரை இருக்குமாம்!
முள்ளம் பன்றி தன் எதிரி விலங்கை கூட அவ்வளவு சீக்கிரத்தில் முட்களை கொண்டு தாக்குவதில்லையாம். எதிரியிடமிருந்து தப்பிப்பதற்கு வேறு வழி இல்லை என்ற நிலை வரும் போது மட்டுமே தனது தற்காப்புக்காக முட்களை பயன்படுத்துமாம். எதிரியை தாக்குவதற்கு முன், முள்ளம்பன்றி தன் உடலில் உள்ள முட்களை அசைத்து ஒருவித எச்சரிக்கை ஒலியை ஏற்படுத்துமாம். அப்பொழுதும் எதிரி பின்வாங்காத சமயத்தில் வேறு வழியின்றி தன் உடலை அசைத்து முட்களை எதிரியின் உடலினுள் செலுத்தி விடுகிறது. முள்ளம் பன்றியின் வால் 8 சென்டிமீட்டர் முதல் 10 சென்டிமீட்டர் வரை நீளமுடையது.
ஊசி முனையுடைய நீண்ட முட்களால் ஆன தோலினை உடைய முள்ளம்பன்றிகள் எதிரிகளால் ஆபத்து வரும்போது மட்டுமே (மயில் தன் தோகை விரிப்பது போன்று) தன்னுடைய முட்களை விரித்து தன்னை தற்காத்துக் கொள்கிறது. மற்ற சமயங்களில் முள்ளம்பன்றியின் முட்கள் இயல்பாகவே பின்னோக்கி இருக்கும்.
முள்ளம்பன்றியின் கழுத்து மற்றும் தோள் பகுதிகளில் உள்ள முட்களே மிக நீளமுடைய முட்களாகும். இவை கிட்டத்தட்ட 15 சென்டிமீட்டர் முதல் 30 சென்டிமீட்டர் வரை நீளம் உடையவை.
முள்ளம்பன்றி இரவில் மட்டுமே வேட்டையாடக் கூடிய ஒரு விலங்கு. பகல் நேரங்களில் குகைகள், பாறை இடுக்குகள், மற்றும் மண்ணுக்குள் வளைகளை தோண்டி அதில் பதுங்கிக் கொள்ளும். இவை மண்ணில் வளைகளை தோண்டுவதற்கு ஏதுவாக கைகள் மற்றும் பாதங்களில் நீண்ட நகங்களை பெற்றிருக்கின்றன. பழங்கள், தானியங்கள், தாவரங்களின் வேர்கள், கிழங்குகள், கொட்டைகள் போன்றவற்றை உணவாக உட்கொள்ளுகின்றன. சில நேரங்களில் நத்தைகளின் ஓடுகள் மற்றும் எலும்புகளை கூட உணவாக உட்கொள்ளும். ஏனெனில் தனது உடலில் உள்ள முட்களின் வளர்ச்சிக்கு தேவையான கால்சியம் சத்து இவற்றில் கிடைப்பதால் இதனையும் சில நேரங்களில் உணவாக எடுத்துக் கொள்கின்றன.
வறண்ட நிலங்கள், புதர் பகுதிகளிலே முள்ளம்பன்றிகள் அதிகமாக வாழும். பனை மரங்கள் அதிகமாக இருக்கக்கூடிய பகுதிகளிலும் முள்ளம்பன்றிகள் வாழும் இயல்புடையவை.
முள்ளம் பன்றிகளின் கர்ப்ப காலம் 7 முதல் 9 மாதங்கள் வரை இருக்கும். ஒரு பிரசவத்தில் 2 முதல் 4 குட்டிகளை ஈனும் இயல்புடையவை. ஒரு குறிப்பிட்ட வயது வரை குட்டிகளை முள்ளம்பன்றிகளே கவனித்துக் கொள்ளும்.
முள்ளம் பன்றிகளுக்கு அதிகமாக ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய விலங்குகள் எதுவென்றால் சிறுத்தை, புலி, மற்றும் காட்டுப் பூனை தான். எதிரிகள் தாக்கும் போது முள்ளம்பன்றி தன் உடலில் உள்ள முட்களை உதிர்த்தால் சில நேரங்களில் அந்த முட்கள் எதிரியின் உடலுக்குள் சென்று முழுமையாக இறங்கிவிடும். இவை எதிரியின் உடலில் ஆழமான காயங்களை ஏற்படுத்துவதோடு சில நேரங்களில் மரணமடையவும் செய்து விடுகின்றன.
எனவே பலசாலியான புலி, சிறுத்தை போன்ற விலங்குகளாகவே இருந்தாலும் முள்ளம் பன்றியிடம் சண்டை போடுவதற்கு ஒரு நிமிடம் யோசிக்கவே செய்யும். முட்களை உதிர்க்கும் போது எதிரியின் வாயில் முட்கள் குத்திவிட்டால் அதன் வலியின் காரணமாக சில நேரங்களில் எதிராளி சாப்பிட முடியாமல் மரணம் அடையக் கூட வாய்ப்பு உண்டு.
முள்ளம்பன்றியை விட பெரிய விலங்குகளான மான், மாடு போன்ற விலங்குகள் எல்லாம் கூட எதிரியிடம் எளிதில் மாட்டிக் கொண்டு மரணம் அடையும் போது தன்னிடம் உள்ள பலத்தை சரியாக பயன்படுத்தி எதிராளியிடம் சிக்காமல் எதிர்நீச்சல் போட்டு வாழும் முள்ளம்பன்றிகளை போல நீங்களும் உங்களுடைய பலம் என்ன? என்பதை சரியாக கண்டறிந்து எதிர்நீச்சல் போட்டால் வாழ்க்கையில் அடைய முடியாத இலக்குகளே இல்லை தானே குட்டீஸ்!