குட்டீஸ் இந்த உலகத்தில் நம்ப முடியாத சில விஷயங்களும் உள்ளன. நம்ப முடியாததாக இருக்கும். ஆனால் நிஜத்தில் நடப்பதாக இருக்கும். இது எப்படி சாத்தியம் என்று நம்மை வியக்க வைத்துக் கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட சிலவற்றைப் பார்க்கலாமா குட்டீஸ் ?
ரஷ்யாவில் இருந்து அலாஸ்காவிற்கு நடக்கலாம் தெரியுமா? ரஷ்யாவிற்கும் அலாஸ்காவிற்கும் இடையில் பெரிங் ஜலசந்தி உள்ளது. குளிர்காலத்தில் இவை உறைந்து போகும். 3.8 கிலோமீட்டர் தொலைவு வரை பயணம் செய்து அலாஸ்காவை அடையலாம்.
நெதர்லாந்தில் தெருக்களே இல்லாத ஒரு கிராமம் உள்ளது தெரியுமா? நாம் நினைத்துக் கொண்டிருப்பதுபோல் படகில் சுற்றி வரும் ஒரே நகரம் வெனிஸ் அல்ல. நெதர்லாந்தில் உள்ள கீத்தோர்ன் கிராமத்திற்குள் தெருக்கள் இல்லை. 6 கிலோ மீட்டருக்கு மேல் கால்வாய்கள் மட்டுமே உள்ளன. எனவே இங்கும் படகில் தான் சுற்றிவர வேண்டும்.
தென்கொரியாவின் $ 1.1 டிரில்லியன் பொருளாதாரத்தில் 20% சாம்சங் மட்டுமே பொறுப்பு. samsung எலக்ட்ரானிக் பொருட்களை மட்டுமே உற்பத்தி செய்கிறது என்று பெரும்பாலானவர்கள் நினைக்கும்பொழுது, நிறுவனம் கவச வாகனங்கள், எண்ணெய் டேங்கர்கள், உபகரணங்கள், கதவு பூட்டுகள், மருத்துவ உபகரணங்கள் போன்ற பலவற்றையும் தயாரிக்கிறது.
ஜப்பான் ஒரு மோசமான பூகம்ப வரலாற்றைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1500 நிலநடுக்கங்கள் இங்கு ஏற்படுகின்றன.
உலகில் அதிக பிரமிடுகள் உள்ள நாடு எகிப்து அல்ல. சூடானில் உள்ள நுபியாவில் 255 பிரமிடுகள் உள்ளன. இவை எகிப்தில் உள்ளதை விட இரண்டு மடங்கு அதிகம்.
அர்த்தநாரீஸ்வரர் என்று சொல்லப்படும் ஆண் பாதி, பெண் பாதி கொண்ட "நார்தன் கார்டினல்ஸ்" என்று அழைக்கப்படும் பறவை அமெரிக்க மாநிலங்களில் காணப்படுகின்றன. ஆண் பறவைகள் சிவப்பு நிறத்திலும், பெண் பறவைகள் காக்கி நிறத்திலும் இருக்கும். ஆனால் பாதி ஆண் பாதி பெண்ணாக இருக்கும் பறவையின் உடல் பாதி சிவப்பு பாதி காக்கி நிறத்தில் காணப்படுகிறது.
ஆப்பிரிக்க காடுகளில் இருக்கும் பீட்டா மேண்ட்ரில் (Mandrills) எனப்படும் குரங்குகள் எந்த பாலூட்டி விலங்கும் கொண்டிராத அளவு வர்ணங்களை உடலில் கொண்டிருப்பது இதன் தனித்துவமாகும். தோல் சிவப்பு, நீல வர்ணங்களை கொண்டதாகவும், இவை பரவசப்படும் நிலையில் உடல் நிறம் பிரகாசமாய் ஒளிர்வதும் அதிசயமாகும். கங்காருகள் வயிற்றடியில் உள்ள பைகளில் குட்டிகளை வைத்திருப்பது போல் இவை இவற்றிற்கு கிடைக்கும் அதிக உணவை தங்களுடைய தாடையில் உள்ள பைகளில் சேமித்து வைக்கும் பழக்கம் கொண்டுள்ளது.
கிரேக்கர்கள் மணமக்களை பார்த்து துப்புவது நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வரும். கெட்ட ஆவிகளை விரட்டும் என்ற நம்பிக்கையில் திருமணம் மற்றும் விசேஷ நிகழ்வுகளில் விருந்தாளிகள் மணப்பெணைப் பார்த்து ftou ftou... என்று சொல்லிக் கொண்டே துப்புவது போல பாவனை செய்கிறார்கள். இந்த வழக்கம் மெதுமெதுவாக இப்பொழுது அவர்களிடமிருந்து அழிந்து வருகிறது.
இஸ்ரேல் பிரிட்டன் மற்றும் நியூசிலாந்து நாடுகளில் மட்டுமே எழுதப்பட்ட அரசியலமைப்பு இல்லாத ஜனநாயக நாடுகள் உள்ளன.
உலகில் எங்கும் காணக்கூடிய கோகோ கோலா வடகொரியா மற்றும் கியூபா நாடுகளில் தடை செய்யப்பட்ட ஒன்று என்பது தெரியுமா?
அலெக்சாண்டர், நெப்போலியன், ஹிட்லர் போன்றவர்களுக்கு Ailurophobia என்ற தாக்கம் இருந்தது. இவர்களுக்கு பூனைகளைக் கண்டால் மிகவும் பயமாம்!