ஆன்மிகக் கதை - துணிவே துணை!

Spiritual Stories!
Spiritual Stories!

போஜ மகாராஜனைப் பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். போஜராஜன், ஒருமுறை வேட்டையாடச் சென்றபோது, விக்கிரமாதித்தனின் சிம்மாசனத்தைக் கண்டதாகவும், அதன் ஒவ்வொரு படியில் இருந்த ஒவ்வொரு பதுமையும் அந்த ராஜாவுக்கு ஒவ்வொரு கதை சொன்னதாகவும் வரலாறு. மிகவும் பராக்கிரமசாலியான அந்த போஜராஜனிடம் அஷ்ட லட்சுமிகள் சேவகம் புரிந்து வந்தனராம்.

ஒருமுறை அவர்கள் மன்னனிடம் வந்து, “அரசே! இன்றுடன் உங்களிடம் நாங்கள் பணி செய்து வந்த காலம் நிறைவடைகிறது. நாங்கள் திரும்பவும் எங்கள் இருப்பிடம் செல்ல வேண்டும். ஆனால் உங்களது மகத்தான பண்புகள் கருதி, நாங்கள் ஒன்று செய்ய உத்தேசித்துள்ளோம்.

நீங்கள் எங்களில் யாராவது ஒரு லட்சுமியை உங்களுடன் வைத்துக் கொள்ளலாம். யாரை வைத்துக் கொள்ளுகிறீர்கள்?” என்று கேட்டனர்.

அங்கிருந்த லட்சுமிகளைப் பார்த்த அரசன் அவர்களில் ‘தைரியலட்சுமியை’ மட்டும் வைத்துக் கொள்வதாகக் கூறவும், மற்றவர்கள் சென்றுவிட்டனர். அடுத்த நாள் காலை அரசன் எழுந்து பார்க்கையில், வழக்கம்போல் அத்தனை பேரும் வந்து பணிவிடை செய்து கொண்டிருந்தனர். அரசனுக்கோ ஒரே ஆச்சர்யம். “நீங்கள்தான் நேற்று விடைபெற்றுச் சென்றுவிட்டீர்களே!” என்று ஆச்சர்யத்துடன் கேட்டான். அதற்கு அவர்கள், “நேற்று நாங்கள் சென்றுவிட்டது என்னவோ உண்மைதான். ஆனால் எங்களுக்குள் ஒரு கட்டுப்பாடு - ஒரு விதி - இருக்கிறது. அதாவது எங்கே தைரியலட்சுமி இருக்கிறாளோ அங்கே நாங்கள் அனைவரும் இருப்போம். இருக்க வேண்டும். எனவே திரும்ப வந்துவிட்டோம்” என்று கூறினார்கள். போஜ மகாராஜன் மிகவும் மனம் மகிழ்ந்தான்.

இதையும் படியுங்கள்:
பயனில்லாத அற்புதங்கள் அற்பமே!
Spiritual Stories!

குழந்தைகளே! இதிலிருந்து என்ன தெரிகிறது? ஒரு மனிதனிடம் தைரியம் இருந்தால் அவனிடம் எல்லாச் செல்வங்களும் இருக்கும் என்பதே. ஆகவே நீங்கள் எப்போதும் துணிச்சலைக் கைவிடக்கூடாது. மகாபாரதத்தில் கூட ‘ஒரு மனிதன் எப்போது துணை உடையவன் ஆகிறான்’ என்ற கேள்விக்கு, ‘அவன் எப்போதும் தைரியத்தைக் கைவிடாமல் இருக்கும்போது துணை உடையவன் ஆகிறான்’ என்று தருமபுத்திரர் பதில் கூறுவது போல் வருகிறது. எனவே துணிவே எப்போதும் துணை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com