

கை கழுவுதல் என்பது ஒரு சிறிய பழக்கமாகத் தெரிந்தாலும், அது ஏன் மிகவும் அவசியம் என்பதை இப்பதிவில் பார்ப்போம். கொரோனா காலத்தில் தீவிரமாக இருந்த இப்பழக்கம், தற்போது மக்களிடையே குறைந்துவிட்டது என்றே சொல்லலாம்.
அவசரமான உலகத்தில், கை கழுவுதல் போன்ற ஆரோக்கிய வழிமுறைகளைப் பின்பற்ற நாம் தவறுகிறோம். நம்மைச் சுற்றி எப்போதும் நோய்க்கிருமிகளும், தொற்று அபாயங்களும் இருப்பதால், நம்மை நாம் பாதுகாத்துக்கொள்வது மிக அவசியம்.
அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவுவதன் மூலம்:
30% வயிற்றுப்போக்கு ஏற்படுவது குறைகிறது.
20% சுவாசம் சம்பந்தமான தொற்று நோய்கள் பரவுவது தடுக்கப்படுகிறது.
அன்றாடம் பல் துலக்குதல் மற்றும் குளிப்பதைப் போன்றே, கை கழுவுதலையும் ஒரு பழக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். தொற்று என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கக்கூடியது.
குழந்தைகள் இயல்பிலேயே விளையாட்டு குணம் கொண்டவர்கள்; அதனால் அவர்களை நோய்க்கிருமிகள் எளிதாகத் தாக்கும். சாப்பிடும் முன்போ அல்லது விளையாடிவிட்டு வந்த பிறகோ அவர்கள் கைகளைக் கழுவத் தவறுவதால், அடிக்கடி நோய்வாய்ப்பட்டுத் துன்பப்படுகிறார்கள். ஆகவே, குழந்தைகளைக் கண்காணித்து அவர்களுக்குக் கை கழுவுவதன் அவசியத்தைக் கற்றுத் தர வேண்டும்.
உணவு: சமைப்பதற்கு முன்னும், சாப்பிடுவதற்கு முன்னும் கைகளை சோப்பு போட்டுத் துப்புரவாகக் கழுவ வேண்டும்.
வளர்ப்புப் பிராணிகள்: வீட்டில் வளர்ப்புப் பிராணிகள் இருந்தால், அவற்றுடன் வெளியில் சென்று வந்த பிறகு, அவற்றைக் குளிப்பாட்டிய பின் அல்லது அவற்றுடன் விளையாடி முடித்த பின் கைகளைக் கழுவுவது அவசியம்.
குழந்தைகள்: பிறந்த குழந்தைகளைப் பார்க்கச் செல்லும் போதோ அல்லது வீட்டில் உள்ள குழந்தைகளைத் தூக்கும் முன்போ கைகளைக் கழுவுவது கட்டாயம்.
கழிப்பறை: ஒவ்வொரு முறை கழிப்பறை சென்று வந்த பிறகும் சோப்பு போட்டு கை கழுவும் பழக்கத்தைச் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.
நோயாளிகள்: வீட்டில் நோயாளிகள் இருந்தால், அவர்களைத் தொடும் முன்பும் பின்பும் கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.
சளி மற்றும் இருமல்: சளி, இருமல் உள்ளவர்கள் வீட்டில் உள்ள பொருட்களை அல்லது மற்றவர்களைத் தொடும் முன் கை கழுவ வேண்டும்.
மற்றவை: வீட்டைச் சுத்தம் செய்த பின்பு மற்றும் தோட்ட வேலை செய்த பின்பு கைகளைக் கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்ள மறக்கக் கூடாது.
கை கழுவும் முறைகள்
கைகளைத் தண்ணீரால் நனைத்து, சோப்பு போட்டு குறைந்தது 20 விநாடிகள் தேய்த்துக் கழுவ வேண்டும். விரல் இடுக்குகள், உள்ளங்கையின் மேற்புறம் மற்றும் நகக்கண்கள் ஆகிய பகுதிகளில் நன்கு தேய்த்து, பின்னர் ஓடும் நீரால் (Running water) கழுவ வேண்டும். இப்படிச் செய்து வந்தால் நோய்த்தொற்றுப் பிரச்சினைகளை பெருமளவு குறைக்கலாம்.