
சுந்தரி மிகவும் சந்தோஷமாக இருந்தாள். இன்னும் நான்கு தினங்களில் அவளுடைய பிறந்தநாள் வரப்போகிறது. ஆறாம் வகுப்புப் படிக்கும் அவள், தன் தோழிகள் அவரவர் பிறந்தநாளுக்கு விதவிதமாக அணிந்துவரும் உடைகளைக் கண்டு பிரமிப்பாள். இந்த வருடம், தானும் பிற தோழிகளைப்போல காஸ்ட்லியான உடை வாங்கிக் கொள்ள ஆசைப்பட்டு பெற்றோரிடம் சொன்னாள்.
ஒருநாள் மாலை தம் வீட்டிலிருந்து வெகு தொலைவிலிருந்த ஒரு பெரிய ரெடிமேட் கடைக்கு அழைத்துச் சென்றனர் அவளது பெற்றோர். அதுவும் தன் தோழி சொல்ல, சுந்தரி தேர்வு செய்திருந்த கடைதான்.
மூவரும் பஸ் பிடித்து, அரைமணி நேரம் பயணம் செய்து அந்தக் கடையை அடைந்தார்கள். முகப்பிலேயே கடையின் ஆடம்பரம் பளிச்சிட்டது. வெளியே, ஏராளமாக வாடிக்கையாளர்களின் கார்கள் நின்றிருந்தன. இந்தச் சூழ்நிலையைப் பார்த்ததும், அப்பாவும் அம்மாவும் மருண்டார்கள். ஆனால் விழிகள் பிரமிப்பால் விரிய, உற்சாகத்துடன் கடைக்குள் அடியெடுத்து வைத்தாள் சுந்தரி.
‘‘வாங்க சார், யாருக்கு டிரெஸ்? பாப்பாவுக்கா? நிறைய சாய்ஸ், முதல் மாடியில இருக்கு,’’ என்று கடை ஊழியர் அவர்களை வரவேற்றார்.
அலங்கார விளக்கொளியில் துணிகளும், ரெடிமேட் ஆடைகளும் மினுமினுத்தன. அப்பாவுக்குத் தலைசுற்றியது. அம்மாவுக்கும். இவர்களை லேசாக கவனித்த சுந்தரி முதல் மாடிக்குப் படியேறிப் போனாள். அவர்களும் பின் தொடர்ந்தார்கள்.
அலமாரியில் கண்ணைக் கவரும் வண்ணப் பெட்டிகளில் உடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தனியே பத்துப் பதினைந்து ஸ்டாண்டுகளில் உடைகள், ஹாங்கரில் மாட்டி வைக்கப்பட்டிருந்தன. ஷோ கேஸ்களில் பொம்மைச் சிறுவர்கள் உடையணிந்து போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். சுவர்களில் பல ஆடைகள், அவற்றின் முழுப் பரிமாணமும் தெரிவதுபோலப் பிரித்து அலங்காரமாக மாட்டப்பட்டிருந்தன.
‘‘வாங்க சார், வாங்கம்மா,’’ என்று இந்தப் பகுதி ஊழியர் வரவேற்றார். ‘‘பாப்பாவுக்கு டிரெஸ் பார்த்திடலாமா….? என்ன ரேஞ்சிலெ எடுத்துப் போடட்டும் சார், ஐந்தாயிரமா, ஆறாயிரமா?’’
அப்பாவும், அம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஊழியரோ பலவகை உடைகளை எடுத்துப் போட்டார்.
சுந்தரியின் கண்களில் பிரமிப்பு ஒளிர்ந்தது. இத்தனை வகைகளா! எதை எடுப்பது, எதை விடுவது! இவைபோன்ற தினுசுகளை அவள் இதற்குமுன் பார்த்ததில்லை என்பதால் அவள் பெரிதும் குழப்பமடைந்தாள்.
அப்பாவும் அம்மாவும் அப்படியே திகைத்துப்போய் நின்றிருந்தார்கள். ஒரு குறிப்பிட்ட உடையை எடுத்தாள் சுந்தரி.
‘‘த்ரீ பீஸ் டிரெஸ், பாப்பா. உனக்கு ரொம்பவும் மேட்சாக இருக்கும்’’ என்று சொன்ன கடைக்காரர் அந்த உடையைப் பிரித்துக் காண்பித்தார். உடையின் கைப்பகுதியில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரில் விலை பார்த்தாள் சுந்தரி. 5500 ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஓரக்கண்ணால் பெற்றோரைப் பார்த்தாள். அந்த உடையின் விலையை கவனித்துவிட்ட அவர்கள் தம் வேதனையைக் கண்களாலேயே பரிமாறிக் கொண்டார்கள். சுந்தரி சட்டென்று, ‘‘வேற கடைக்குப் போகலாம், வாங்கப்பா. இங்க எனக்கு ஒண்ணுமே பிடிக்கலே…’’ என்றாள்; பிறகு விடுவிடுவென்று படியிறங்க ஆரம்பித்தாள். ஒன்றும் புரியாமல் பெற்றோரும் இறங்கினார்கள்.
‘‘ஏம்மா, டிரெஸ் எடுத்துக்கலியா…?’’ அப்பா சற்றே குற்ற உணர்வுடன் கேட்டார். தன் குழந்தைக்குப் பிடித்த உடையை வாங்கிக் கொடுக்கத் தன்னிடம் போதுமான பணம் இல்லையே என்ற ஆதங்கம் அவருக்கு!
‘‘வேண்டாம்ப்பா…‘‘ சுந்தரி தீர்மானமாகச் சொன்னாள். ‘‘ரொம்ப காஸ்ட்லி. போனவாரம் தன்னோட பொண்ணுக்கு ஏதாவது டிரெஸ் இருந்தா கொடுங்கன்னு அம்மாகிட்ட வீட்டுவேலைக்கு வர்ர ஆன்ட்டி கேட்டாங்க. அம்மாவும், என்னோட பழசான, எனக்குச் சின்னதாகிப் போன ஆனா நல்ல நிலையில் இருந்த டிரெஸை ரெண்டு கொடுத்தாங்க. அது எனக்கு இப்ப ஞாபகம் வந்தது. இந்தப் பணத்துக்கு நாலைஞ்சு சாதாரண டிரெஸ் வாங்கினா கொஞ்ச நாளைக்கப்புறம், தேவைப்படும் யாருக்காவது, புதுசாகவே ப்ரஸன்ட் பண்ணலாமேன்னு யோசிச்சேன். அதான் வேண்டாம்னு தீர்மானிச்சுட்டேன். உங்களோட பட்ஜட்டுக்குள்ள வரவே வராத இந்த டிரெஸ் எனக்குத் தேவையா? இப்படி பிறந்தநாளைக் கொண்டாடணுமா? வாங்கப்பா போகலாம். அம்மா, வாங்க.‘‘
அம்மா அவளை அப்படியே அள்ளி அணைத்துக் கொண்டாள். அப்பா மனசுக்குள் பெருமைப்பட்டுக் கொண்டார்.