
ஹலோ குட்டீஸ்,
சந்திரனின் ஒளி மங்கி அமாவாசை என்றும் பிறகு ஒளிப்பொருந்திய பௌர்ணமி என்றும் மாறி மாறி வருவதற்கான காரணம் சந்திரன் கணபதியிடம் பெற்ற சாபம் தான் என்பது தெரியுமா? இதைப்பற்றிய கதை சொல்லட்டுமா?
ஒருமுறை கணபதி விருந்து ஒன்றில் நன்றாக வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு இரவு தன்னுடைய பெரிய தொப்பை தெரிய மூஷிக வாகனத்தில் வந்துக் கொண்டிருந்தார். அச்சமயம் சந்திரன் தன்னுடைய குளுமையான ஒளியை வீசிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு பாம்பு அவசரமாக குறுக்கே செல்வதற்கு முற்பட்டது. இதை பார்த்த மூஷிகன் பயந்து செல்வதை நிறுத்திவிட்டார். இதனால் கணபதி கீழே விழுந்தார். அவர் வைத்திருந்த மோதகங்களும் கீழே விழுந்தன. இதைப் பார்த்துக் கொண்டிருந்த சந்திரன் பயங்கரமாக சிரித்தார்.
கணபதி தான் கீழே விழுவதற்கு காரணமான பாம்பை பிடித்து அதை வைத்து மோதகம் இருக்கும் பையை இடுப்பில் கட்டிக்கொள்ள போவதாக கூறினார். இதனால் பாம்பு பயந்து ஓடியது. அதை பிடிக்க முயற்சிக்கும் போது மீண்டும் கீழே விழுந்தார் கணபதி. இப்போது சந்திரன் பயங்கரமாக சிரித்துவிட்டு கணபதியைப் பார்த்து, 'குண்டு கணபதியே, நீ கொழுக்கட்டைப் போல இருப்பதால் கீழே விழுந்துவிட்டாய்!' என்று கூறி சிரித்தார்.
இதைக்கேட்டு கோபம் அடைந்த கணபதி, ‘என் உருவத்தை பார்த்தா கேலி செய்கிறாய்? உன் ஒளிப்பொருந்திய மேனிதானே உன்னுடைய சிறப்பு. அந்த ஒளிப்பொருந்திய மேனி மங்கிப்போகட்டும்’ என்று சாபமிட்டார்.
இதைக்கேட்டு பயந்த சந்திரன், ‘நான் உங்கள் விளையாட்டை பார்த்து ரசித்தேனே தவிர உங்களை கேலி செய்யவில்லை’ என்றுக்கூறி மன்னிப்புக் கேட்டு தன்னுடைய சாபத்தை திரும்பப்பெறும்படி வேண்டிக்கொண்டார்.
இதைக்கேட்ட கணபதி சாந்தமடைந்து, ‘உனக்கு கொடுத்த சாபத்தை திரும்ப பெற முடியாது. ஆனால், உன்னுடைய ஒளி மங்கி திரும்ப பெருகட்டும். ஒளி மங்கி தெரியாமல் போவதை அமாவாசை என்றும் ஒளிப்பொருந்தி இருப்பதை பௌர்ணமி என்றும் அழைப்பார்கள் என்று கூறினார். இதன் காரணமாக தான் நிலவு அமாவாசை, பௌர்ணமி என்று மாறி மாறி தெரிகிறது.
செறுக்கு, பெருமை, கர்வம் ஆகியவற்றை அழித்து பணிவுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்ற பாடத்தை இது உணர்த்துவதாக சொல்லப்படுகிறது.