
மிக்கி மவுஸ் (Mickey Mouse) என்பது, ஒரு வேடிக்கையான விலங்கின் கேலிச்சித்திரக் (CARTOON) கதாப்பாத்திரமாகும். கேலிச்சித்திரமாக மட்டுமின்றி, கருத்துச் சித்திரமாகவும் விளங்கும் இது, அமெரிக்காவின் மகிழ்கலை வணிக நிறுவனமான, வால்ட் டிஸ்னி கம்பெனி எனும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வச் சின்னமாகும்.
உலக புகழ் பெற்ற அமெரி்க்கத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், ஓவியர், கேலிச்சித்திரக்காரர் என பன்முகத் திறமையாளரான வால்ட் டிஸ்னி, தனது அண்ணன் ராய் டிஸ்னியுடன் இணைந்து, வால்ட் டிஸ்னி என்ற பெயரில், சினிமா தயாரிக்கும் நிறுவனத்தை 1928 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் உருவாக்கினார்.
வால்ட் டிஸ்னியின் கனவுக் கதாபாத்திரம்தான், மிக்கி மவுஸ். முதலில் மிக்கிக்கு ‘மோர்டைமர்' என்றே டிஸ்னி பெயரிட்டார். ஆனால், அவரது மனைவி லில்லியன்தான், கணவரின் கனவு கேலிச்சித்திரக் கதாப்பாத்திரத்துக்கு ‘மிக்கி மவுஸ்' எனப் பெயர் வைத்தார்.
சிவப்பு நிறக் கால்சட்டையும், மஞ்சள் நிற காலணியும், வெள்ளை நிறக் கையுறையும் என பின்னாளில் மிக்கி மவுஸ், கார்ட்டூனாகவும், காமிக் புத்தகங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் பிரபலமாகி விட்டது.
மிக்கி மவுஸின் அதிகாரப்பூர்வமான முதல் படம் ‘ஸ்டீம் போட் வில்லி'. இது 1928 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் நாளன்று வெளியானது. எனவே, இந்த நாளையே மிக்கி மவுசின் பிறந்த நாளாக அவரது ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கி விட்டனர்.
மிக்கி மவுசின் ஸ்டீம் போட், மிக்கீஸ் ஆர்பன்ஸ், திரீ லிட்டில் பிக்ஸ் போன்ற படங்கள் மக்களிடம் பெரும் செல்வாக்கைப் பெற்ற படங்களாக இருக்கின்றன. அதே போல், ஓப்ரே ஹவுஸ், கிறிஸ்துமஸ் கேரல், வாலண்டைன், போட் பில்டர்ஸ் , ஹவுஸ் ஆப் மவுஸ் போன்ற படங்களும் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பெற்றன. அமெரி்க்காவின் பிரசித்தி பெற்ற வார்னர் நிறுவன தயாரிப்புகளுடன் கூட, மிக்கி மவுஸ் படைப்புகள் போட்டியிட்டு சாதனை படைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மிக்கி மவுஸ் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட பல்வேறு படைப்புகள் 26 ஆஸ்கார் உள்பட பல்வேறு உலக விருதுகள் பெற்றுள்ளன. இதில் ஒரே ஆண்டில் 4 ஆஸ்கார் பெற்றது, இன்றளவும் முறியடிக்கப்படாத சாதனையாக இருக்கிறது. 7 எம்மி விருதுகளும், இவரது படைப்புகள் பெற்றுள்ளன.
தொடக்கக் காலங்களில் வெளிவந்த படங்களில் மிக்கி மவுசிற்கு டிஸ்னிதான் பின்னனிக் குரல் கொடுத்திருந்தார். அதன் பின்னர், வெனி ஆல்வின் அந்தப் பொறுப்பைத் தனதாக்கிக் கொண்டு கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் மிக்கிக்காகப் பேசினார்.
மிக்கி மவுசின் காதலியாக மின்னி மவுஸ் என்ற செயற்கை கதாபாத்திரமும், அவருடைய நண்பர்கள் ஹார்ஸ் காலர், டொனால்ட் டக், ஹோப்பி ஆகியோரும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர்கள்.
மிக்கி மவுசை உருவாக்கிய வால்ட் டிஸ்னி, 1955 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் நாளில், கலிபோர்னியாவில் உள்ள அனாஹெய்ம் நகரில் ஒரு வேடிக்கைப் பூங்காவை அமைத்துத் திறந்தார். உலகின் முதல் பொழுதுபோக்குப் பூங்கவான இங்கு, வால்ட் டிஸ்னி மற்றும் டிஸ்னி கம்பெனியின் படைப்புகளின் அடிப்படையில் கதாபாத்திரங்கள், சவாரிகள் மற்றும் நிகழ்ச்சிகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக, இங்கு மிக்கி மவுஸ் வேடமணிந்த மனிதர்களை நேரில் சந்திக்க இயலும். கிட்டத்தட்ட அமெரிக்காவின் அனைத்து அதிபர்களுமே மிக்கி மவுசுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
'That sure is so well Mickey Mouse' - இது தான் மிக்கியின் பிரபலமான பாவனைகளில் ஒன்று. உலக அளவில் வர்த்தகத்தில் 9.2 பில்லியன் டாலர் எனும் அளவில் வணிகம் செய்த சிறப்பும் மிக்கிக்கு உண்டு.
மிக்கி மவுஸ் உருவாகி 96 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும், சிறு வயதினர்களிடம் மிக்கி மவுஸ்க்கு இன்னும் வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.