

விதி, மதி இருவரும் மிகச் சிறந்த நண்பர்கள். இருவரும் எட்டாம் வகுப்புப் படித்தார்கள். சேர்ந்தே பள்ளி செல்வார்கள். பள்ளி முடிந்ததும் சேர்ந்தே வீடு திரும்புவார்கள். அந்த அளவு பிரியமான நண்பர்கள்.
அன்று விடுமுறை. இருவரும் மாலை கோயில் சென்றனர். இறைவழிபாடு முடித்து வீடு திரும்பியபோது, ஒரு பர்ஸ் கீழே கிடக்கக் கண்டான் விதி.
"ஆகா! இன்று நமக்கு அதிர்ஷ்ட நாள். கோயில் சென்றோம். இறைவன் அருள் கொடுத்தார். அதில் என்ன இருக்கிறது என்று பார்ப்போம்," என்று கூறிய விதி பர்ஸைத் திறக்க இருந்தபோது, மதி தடுத்தான்.
"நண்பா, வேண்டாம்! அடுத்தவர் பொருளை நாம் தொடவே கூடாது. அதுவும் இது மணிபர்ஸ். நிச்சயம் இதைத் தவறவிட்டவர் மனசு என்ன பாடுபடும் என்பதை யோசித்துப் பார். வேண்டாம் விதி. இதை அது இருந்த இடத்திலேயே போட்டுவிடு. அதை இழந்தவர் நிச்சயம் தேடி வருவார்," என்று அறிவுறுத்தினான் மதி.
ஆனால் விதி கேட்கவில்லை. "இது நமக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு. இதை இழக்கமாட்டேன். நீ வேண்டாம் என்றால் போ. நான் பார்ப்பேன். இருப்பதை எடுப்பேன்," என்று பிடிவாதமாகக் கூறினான்.
"வேண்டாம், அது தவறு. வேணுமானால் கோயிலில் சென்று ஒப்படைப்போம். இது நமது உரிமைப்பொருள் அல்ல," என்று மதி எவ்வளவோ எடுத்துக்கூறியும் துளியும் அடங்காத விதி பர்ஸைத் திறக்க இருந்தபோது, மனம் வருந்திய மதி தன் நட்பை முறித்துக் கொள்வதாகக் கூறி அங்கிருந்து கோபத்துடன் சென்றுவிட்டான்.
"அப்பா, பெரும் தொல்லை ஒழிந்தது!" என்று மனம் மகிழ்ந்த விதி, மிகவும் ஆனந்தத்துடன் பர்ஸைத் திறந்தான். "ஆகா, பணம், பணம்! எவ்வளவு ரூபாய்கள்!" என்று மனம் மகிழ்ந்தபடி, இருந்த பணத்தை எண்ணினான். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் தேறியது. விதி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவன் மனம் ஆனந்தத்தில் துள்ளியது.
சினிமா, ஓட்டல், புது டிரெஸ், எல்லாம் எடுத்துக்கொள்ளலாம் என்று மனக்கணக்கிட்டவன், உடனே பர்ஸின் அடுத்த பிரிவைத் திறந்தான். அதில் ஒரு கலர் பேப்பர் இருந்தது. உள்ளே ஒரு தங்கக் காசு சுற்றி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டான். அவ்வளவுதான்! அவன் ஆனந்தம் உச்சம் தொட்டது. உடன் அதை பிரிக்க முயன்றபோது, "ஒய்... ஒய்..." என்று சத்தமிட்ட ஆம்புலன்ஸும், காவல்துறை ஜீப்பும் வந்து நின்றது.
"டேய், ஏதாச்சும் பர்ஸ் கீழே கிடந்ததைப் பார்த்தாயா?" என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.
அதை மறைத்து வைத்திருந்தவன், "ஐயா, சத்தியமாக நான் பார்க்கவில்லை," என்று கூறி அழவும் செய்தான்.
"சரி, சரி, அழாதே," என்றவர், உடன் ஏறி ஜீப்பில் செல்லவும், ஆம்புலன்ஸும் தொடர்ந்து சென்றது.
இப்போது மிகுந்த எச்சரிக்கையுடன், தங்கக் காசு சுற்றியிருந்த கலர் பேப்பரைப் பிரித்தான்.
"டமால்!" "டுமீல்!" என்ற பெரும் வெடிச் சத்தம்.
வெடிச் சத்தம் கேட்டு உடன் திரும்பி வந்தது போலீஸ் ஜீப்பும் ஆம்புலன்ஸும்.
அவசரமாகச் செயல்பட்ட இன்ஸ்பெக்டர், மயங்கி விழுந்திருந்த விதியை ஆம்புலன்ஸில் ஏற்றி, உடன் அவசர மருத்துவப் பிரிவில் சேர்த்தார்.
விஷயம் கேள்விப்பட்டதும் உடன் அழுதபடி ஓடிவந்தான் மதி.
அவன் இன்ஸ்பெக்டர் மூலம் முழு விவரம் அறிந்தான்.
"மர்ம நபர்கள் ஊடுருவல் செய்திருக்கிறார்கள். அவர்கள், மக்கள் கூடும் இடங்களில், அவர்கள் மனம் மயங்கும் விதமாக மணிபர்ஸ் போன்ற பொருட்களைப் போட்டு, அதன் வாயிலாக மக்களை அழிக்கத் திட்டம் தீட்டியிருக்கிறார்கள். அப்படி ஒரு உளவுச் செய்தி வந்ததும் நாங்கள் உடனே கோயில் வந்து அனைவரிடமும் விசாரித்து, அப்படி கீழே கிடந்தால் எதையும் எடுக்காதீர்கள் என்றும் எச்சரித்து, பிறகு உன்னைக் கேட்டிருக்கிறார்கள். ஆனால் நீ இல்லை என்று கூறி பர்ஸை முழுவதுமாகப் பிரித்தபோதுதான் அது வெடித்து உன் விரல் காயமடைந்தது. அதன் விளைவு, இப்போது சிகிச்சை செய்யப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் இருக்கிறாய்," என்று இன்ஸ்பெக்டர் விளக்கினார்.
"விதி, நான் சொன்னதை நீ கேட்டிருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்குமா? எப்பவுமே கோடிப் பணமாக இருந்தாலும், அது அடுத்தவர் உரிமை என்று தெரிந்தால், அதை நாம் கையால் கூடத் தொடக்கூடாது. மனதால்கூட நினைக்கக்கூடாது," இதைக் கூறிக்கொண்டே நண்பனின் கையைப் பிடித்து அழுதான் மதி.
"மதி, நீ சொல்வது சரியே. நீ நல்லவன். அத்துடன் புத்திசாலி. நானோ பேராசைக்காரன். அதன் விளைவை அனுபவித்து விட்டேன். இது என் விதி என்று மனம் வருந்துகிறேன். இனி நான் மதியுடன் செயல்படுவேன்," என்று கூறி அழுதான் விதி.