

செய்யூரில் ஒரு விவசாயி இருந்தார். அவர் ஒரு நாயை வளர்த்து வந்தார். அந்த நாய் நல்ல பலசாலியாகவும், புத்திசாலியாகவும் இருந்தது. அந்த விவசாயியிடம் ஏராளமான மாடுகள் இருந்தன. இந்த மாடுகளை தினமும் மேய்ச்சலுக்கு விவசாயியும் அந்த நாயும் கூட்டிச் செல்வார்கள்.
தினமும் காலையில் கிளம்பி, அருகில் உள்ள மலைக்காடுகளுக்கு அழைத்துச் சென்று மாடுகளை மேயவிட்டு , மாலையில் வீட்டுக்குக் கூட்டி வருவார். விவசாயி மாடுகளின் பின்னால் நடந்து வர, நாய் இரு பக்கமும் மாறி மாறிச் சென்று, மாடுகளைக் கட்டுக்கோப்பாகக் காட்டுக்குக் கூட்டிச் செல்லும். இவ்வாறு தினமும் அவர்கள் சென்று வருவதை நரி ஒன்று கவனித்து வந்தது.
அந்த நரிக்கு மிகவும் வயதானதால், ஓடி ஆடி வேட்டையாட முடியவில்லை. அந்த மாடுகளைப் பார்த்ததும் அதற்கு நாவில் எச்சில் ஊறியது. ஆனால், நாயைப் பார்க்கப் பயமாக இருந்தது; ஏனெனில், நாய் நல்ல உயரமாகவும் பலசாலியாகவும் இருந்தது. நரி எப்படியாவது ஒரு மாட்டை வேட்டையாடச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தது.
அதே மலைக்காட்டில் வாழ்ந்து வந்த புலி ஒன்றுக்கும் வயதாகிவிட்டதால், காட்டிற்குள் சென்று வேட்டையாட முடியவில்லை. 'காட்டை விட்டு வெளியே வந்து மனிதர்கள் வளர்க்கும் விலங்குகளை வேட்டையாடலாம்' என்று கருதி அது காத்துக் கொண்டிருந்தது. அப்படி வரும்போது வயதான நரியைப் பார்த்தது. நரிக்கு ஒரு துணை கிடைத்த மகிழ்ச்சியில் மெல்லப் புலியிடம் வந்து, "புலி அண்ணா, சௌக்கியமா?" என்று கேட்டது.
"சந்தோஷத்துக்கு என்ன குறைச்சல்?" என்று சலிப்புடன் பதில் சொன்னது புலி.
"ஏன் புலி அண்ணா, ரொம்ப வருத்தமா பேசுறீங்க?"
"முன்ன மாதிரி வேட்டையாட முடியல, அதுதான். மனுஷங்க வளர்க்கிற ஏதாவது விலங்கு கிடைக்குமான்னு தேடி வந்தேன்," என்றது புலி.
நரிக்கு உடனே ஒரு திட்டம் தோன்றியது. "நான் ஒரு திட்டம் வச்சிருக்கேன். நீங்க மட்டும் சரின்னு சொன்னா நமக்கு நல்ல வேட்டை கிடைக்கும். நீங்க பாதி, நான் பாதி எடுத்துக்கலாம். என்ன சொல்றீங்க?" என்று கேட்டது நரி.
உடனே புலிக்குக் கோபம் வந்துவிட்டது. "இந்தத் திட்டமே வேண்டாம்! எனக்குச் சமமாக நீ பாதி உணவு கேட்கிறாயா?" என்றது. நரி உடனே, "அடடா... அவசரப்பட்டு விட்டோமே" என்று நினைத்து, "அப்படியெல்லாம் எனக்கு வேண்டாம். நீங்க சாப்பிட்டது போக மிச்சத்தைக் கொடுத்தால் போதும்," என்று சொல்லி புலியைச் சம்மதிக்க வைத்தது.
நரியின் திட்டப்படி, அந்தக்காட்டில் ஒரு பெரிய குழி இருந்தது. அந்த குழியை அங்கிருந்த இலை தழைகளைக் கொண்டு நரி மூடிவிட்டது. ஒரு பெரிய மரக்கிளையை இழுத்து வந்து பக்கத்தில் வைத்துக்கொண்டது. மறுநாள் மாடுகள் வருவதை நரி மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தது.
அதில் ஒரு மாடு தனியாக மேய்வதைப் பார்த்து, அதன் அருகில் வந்து, "நண்பா! இந்தக் காய்ந்த புல்லையாத் தினமும் மேய்கிறாய்?" என்று கேட்டது. உடனே அந்த மாடு நரியிடம், "என்ன செய்வது? இந்த இடங்களில் உள்ள புற்கள் காய்ந்துவிட்டன. தள்ளிப் போய் மேயலாம் என்றால் இந்த நாய் விடுவதில்லை. இப்பொழுது கூட உன்னிடம் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தால் ஓடி வந்துவிடும். 'இந்த இடத்தை விட்டு வேறு இடத்தில் மேய்ந்தால் ஆபத்து வரும்' என்று அது சதா கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது. என்ன செய்வது?" என்று அலுத்துக்கொண்டது.
உடனே நரி மாட்டிடம், "நீ மட்டும் சரி என்று சொன்னால், இதைவிட அழகான பச்சை பசேல் என்ற புல்வெளியைக் காட்டுகிறேன்," என்றது. உடனே மாடு, "நாய் என்னை தனியாக மேய விடாதே!" என்றது. "அதைப்பற்றி கவலைப்படாதே! நாளை இதேபோல் வரும்போது, எல்லாரையும் போல மேய்ந்து கொண்டே இந்த இடத்திற்கு வா. உன்னை அங்கு அழைத்துப்போகிறேன். உனக்கு வேண்டியதை மட்டும் மேய்ந்துவிட்டு மாலைக்குள் வந்துவிடு," என்றது நரி. மாட்டுக்கு ஒரே மகிழ்ச்சி; 'நாளைக்கு பச்சைப்புல் சாப்பிடப் போகிறோம்' என்று நினைத்துக்கொண்டது.
அன்று மாலையே நரி புலியிடம் போய், "நீங்கள் அந்தக் குழியில் ஒளிந்து கொள்ளுங்கள். குழியை இலை தழைகளால் மூடிவிடுகிறேன். நாளை அந்த மாட்டை அழைத்து வருகிறேன். அது குழியில் விழுந்தவுடன் நீங்கள் அடித்துச் சாப்பிட்டுவிட்டு மேலே வாருங்கள். இந்த மரக்கிளையை உள்ளே போடுகிறேன், அதில் ஏறி வந்துவிடுங்கள். நான் அதே மரக்கிளை வழியாக உள்ளே சென்று மிச்சத்தைச் சாப்பிட்டுவிட்டு மேலே வந்துவிடுவேன்," என்று கூறியது. புலியும் அதற்குச் சம்மதித்துக் குழியில் படுத்துக்கொண்டது. நரியும் இலைகளால் குழியை மூடியது.
மறுநாள் வழக்கம் போல விவசாயி மாடுகளை அழைத்துச் செல்லும்போது, எப்போதும் இல்லாமல் அந்த ஒரு மாடு மட்டும் ஒதுங்கிப் போவதையும், வித்தியாசமாக நடந்து கொள்வதையும் நாய் கவனித்தது. தன் முழுப் பார்வையையும் அந்த மாட்டின் மீது வைத்தது. அப்போது பதுங்கியிருந்த நரி, அந்த மாட்டைச் சைகை காட்டி அழைத்துச் சென்றது. நரியுடன் மாடு செல்ல ஆரம்பித்தது.
பின்னாலேயே சென்ற நாய், நரி ஏதோ சதி செய்கிறது என்பதைப் புரிந்து கொண்டது. சிறிது தூரத்தில் ஒரு பெரிய குழி இருப்பது நாய்க்கு ஞாபகம் வந்தது. உடனே நாய் நரியைத் துரத்தியது. நாயைக் கண்டவுடன் நரி தலைதெறிக்க ஓட ஆரம்பித்து, அந்தத் தற்காப்பு ஏதுமின்றித் தான் வெட்டிய குழியிலேயே விழுந்தது.
குழியில் விழுந்தது யாரென்று தெரியாமல், புலி நரியை ஒரே அடியில் அடித்துக் கொன்றது. பரிதாபமாக நரி உயிர் நீத்தது. அதன் பின்தான் புலி கவனித்தது, 'ஐயோ! நரியைக் கொன்றுவிட்டோமே' என்று. மேலே பார்க்க அங்கே நாயும், நரியை நம்பி வந்த மாடும் நின்று கொண்டிருந்தன. மேலே வர மரக்கிளை இல்லாததால், புலி வெளியே வர முடியாமல் சுற்றிச் சுற்றி வந்து களைத்துப் படுத்துவிட்டது.
உடனே நாய் மாட்டிடம், "பார்த்தாயா? புதிதாக ஒருவன் வந்து உதவி செய்கிறேன் என்று சொன்னால், அதில் உள்ள ஆபத்துக்களை எண்ணிப் பார்க்க வேண்டும்," என்றது. உண்மையை உணர்ந்த மாடு நாயிடம் மன்னிப்பு கேட்டது.
நீதி: நாயைப் போல புத்திசாலித்தனமாகவும், பலசாலியாகவும் இருந்தால் எந்த எதிரியையும் வென்று வெற்றி பெறலாம்.