

ஒரு நகரத்தின் மையத்தில் அழகிய மலர் பூங்கா ஒன்று இருந்தது. அங்கு தினமும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வந்து மலர்களைப் பார்த்து ரசித்துவிட்டுச் செல்வர்.
ஒருநாள், குழந்தைகள் கூட்டம் கூட்டமாக வந்து பூங்காவை ரசித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அக்குழந்தைகளைப் பார்த்தவுடன் மலர்களுக்கும் மகிழ்ச்சி தாங்கவில்லை. "என்னைப் பார்! என்னைப் பார்!" என்று ஒவ்வொரு மலரும் காற்றில் தலைசாய்த்துத் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தன. எல்லா மலர்களையும் பார்த்துவிட்டுச் செல்லும்போது, ஒரு குழந்தை மட்டும், "எனக்கு ரோஜா பூக்களைத்தான் பிடிதிருக்கிறது!" என்று சொல்லிவிட்டுச் சென்றது.
இதைக் கேட்டவுடன் மற்ற பூக்களுக்கு வருத்தம் வந்துவிட்டது; ரோஜா பூவுக்கோ மகிழ்ச்சி தாங்கவில்லை. "பார்த்தீர்களா, நான் எவ்வளவு அழகானவன் என்று இப்போது தெரிந்து கொண்டீர்களா?" என்று மற்ற மலர்களைப் பார்த்து அது கேட்டது. மற்ற பூக்கள் எல்லாம் வருத்தத்தில் தலைகுனிந்து கொண்டன.
இப்படி ஒவ்வொரு நாளும் வருபவர்கள் ஏதோ ஒரு மலரை மட்டும் 'அழகு' என்று சொல்லிவிட்டுச் சென்றனர். இதனால் மலர்களுக்குள் ஒரு போட்டியும், பொறாமையும் ஏற்பட்டது.
அந்தப் பூங்காவில் மலர்ச் செடிகளைப் பராமரிக்கும் பெரியவர் ஒருவர் இருந்தார். அவர் தினமும் செடிகளுக்கு மண் அணைத்து, தண்ணீர் ஊற்றிப் பராமரித்து வந்தார். நாள்தோறும் அவர் அந்த மலர்களோடு இருப்பதால், அவற்றால் பேச முடியாவிட்டாலும், அவற்றின் தோற்றத்தை வைத்தே அவை எப்படி இருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்துவிடுவார். ஏதோ ஒரு மலர்ச் செடி மட்டும் செழுமையாகவும், மற்றவை வாடிப்போயும் இருப்பதை அவர் கவனித்தார்.
ஒருநாள் அவர் ஒரு செடிக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு கூட்டம் பக்கத்தில் இருந்த சூரியகாந்தி மலர்களை ரசித்தது. அவர்கள் செல்லும்போது, "இந்தச் சூரியகாந்தி மலர்கள்தான் இங்குள்ளவற்றிலேயே அழகு!" என்று சொல்லிவிட்டுச் சென்றனர். இது அவர் காதில் விழுந்தது. அவர் கவனித்துக் கொண்டிருந்த அந்த மலர்ச் செடி சட்டென வாடுவதையும் அவர் பார்த்தார். மற்ற மலர்ச் செடிகளும் வாடியிருக்க, சூரியகாந்தி மட்டும் பிரகாசமாக இருப்பதை வைத்து அவருக்கு உண்மை புரிய ஆரம்பித்தது.
மறுநாள் ஒரு கூட்டத்தினர் பூங்காவிற்கு வந்தனர். அவர்கள் எல்லா மலர்களையும் ரசித்துப் பார்த்தனர். அவர்களுக்கு அங்குள்ள அனைத்து மலர்களுமே பிடித்துப்போனது. "இங்குள்ள எல்லா மலர்களும் எவ்வளவு அழகாக இருக்கின்றன! அதைவிட, இந்த மலர்களைத் தாங்கி நிற்கும் செடிகளும், செடிகளைத் தாங்கி நிற்கும் வேர்களும் கூட எவ்வளவு உறுதியாக இருக்கின்றன! தண்டு, இலை, வேர் என எல்லாமே அழகுதான்!" என்று பாராட்டிவிட்டுச் சென்றனர்.
இதைக் கேட்ட மலர்கள், "அவர்கள் கூறியது போல மண், தண்டு, இலை, வேர் இல்லாவிட்டால் நாம் இல்லை" என்பதை உணர்ந்து கொண்டன.
இப்போது தினமும் பூங்காவிற்கு வருபவர்கள் எல்லாப் பூக்களையும், செடிகளையும் "அழகு" என்று சொல்லிவிட்டுச் சென்றனர். இதற்குக் காரணம் அந்தத் தோட்டக்காரப் பெரியவர்தான். பூங்காவிற்கு வருபவர்களிடம், "தயவுசெய்து எல்லா மலர்களையும் பாராட்டிவிட்டுச் செல்லுங்கள்" என்று அவர் முன்னாடியே கேட்டுக்கொண்டார். இதனால் மலர்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டி, பொறாமைகளை மறந்து மகிழ்ச்சியாக இருந்தன.
குட்டீஸ்... தெரிந்து கொண்டீர்களா?
இனி பூங்கா செல்லும்போது எல்லாப் பூக்களையும் பாராட்டுங்கள். அதேபோல் மற்றவர்களிடமும் போட்டி, பொறாமையை விட்டு, அனைவரையும் பாராட்டி நண்பர்களாகப் பழகி மகிழ்வாக இருப்பீர்கள் தானே!
பூக்களைப் போல எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்!