
பெரிய காட்டில், அழகான ஒரு மலைக்குப் பக்கத்தில், மான் குட்டிகள் தங்களுடைய பெற்றோருடன் ஜாலியாக வாழ்ந்துகொண்டிருந்தன. ஒரு மானுக்கு இரண்டு அழகான குட்டிகள் இருந்தன. அதில் ஒன்று ரொம்பவும் சுட்டியாக, எப்பொழுதும் ஏதாவது வம்பு பண்ணிக்கொண்டே இருக்கும்.
இருந்தாலும், அம்மா மான் அதை அவ்வளவாக கண்டிப்பதில்லை. காரணம், எவ்வளவு வால்தனம் பண்ணினாலும், மிகவும் புத்திசாலியாக இருந்ததால், அதைக் கண்டுகொள்ளாமல் இருந்தது. "இளம் கன்று பயமறியாது" என்பதுபோல், அந்தக் குட்டி மான் காட்டில் இங்கும் அங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தது.
"எந்த ஆபத்து வந்தாலும், அது தன்னுடைய புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தித் தப்பித்துவிடும்; அதனால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்" என்று எண்ணியது.
ஒரு நாள், இரையைத் தேடி காட்டுக்குள் சென்ற பெரிய மான், குட்டிகளிடம் ஜாக்கிரதையாக இருக்கும்படி சொல்லிவிட்டுச் சென்றது. சிறிது நேரத்திற்கெல்லாம், "நாமும் காட்டுக்குள் போய் பார்த்தால் என்ன?" என்று தோன்றியது அந்தக் குட்டி மானுக்கு. உடனே, மெதுவாக நடந்து காட்டுக்குள் போக ஆரம்பித்தது.
காட்டுக்குள் போனதும், குட்டிமான் இங்கும் அங்கும் பாறையில் ஏறிக்குதித்துச் சந்தோஷமாக விளையாடியது. அதற்குத்தான் பயம் என்றால் என்னவென்றே தெரியாதே! அதனால், எல்லாப் பாறைகளிலும் ஏறிக்குதித்து விளையாடியது.
அப்போது, திடீரென்று ஒரு உறுமல் சத்தம் கேட்டது. பயந்துபோன மான் குட்டி, சத்தம் வந்த திசையைப் பார்க்க, அங்கு ஒரு பெரிய புலி நின்றுகொண்டு குட்டி மானைப் பார்த்துச் சிரித்தது. பயந்துபோன மான் குட்டியோ, "என்ன வேண்டும்? ஏன் இங்கு வந்தாய்? என்னைச் சாப்பிடப் போகிறாயா?" என்று பயமில்லாமல் கேட்க, புலியோ, "கண்டிப்பாக உன்னைச் சாப்பிடத்தான் போகிறேன். ரொம்ப நாளாச்சு மான்கறி சாப்பிட்டு! அதனால், நீதான் எனக்கு இன்றைக்கு மதிய உணவு" என்று சொல்லியது. இதைக் கேட்டதும், மானுக்கு உள்ளூரப் பயம். இருந்தாலும், வெளியில் காட்டிக்கொள்ளாமல், தன்னுடைய புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தித் தப்பித்துவிடலாம் என்று தன் அம்மா சொன்னது ஞாபகம் வந்ததால், சிறிதும் கலங்காமல் இங்கும் அங்கும் பார்த்தது.
அப்போதுதான், அங்கு ஒரு பெரிய பாறை இருப்பதையும், பக்கத்திலேயே ஒரு சின்னப் பாறையில் அது முட்டிக்கொண்டு நிற்பதையும் பார்த்தது. "எப்படியாவது இந்தச் சின்னப் பாறையைப் பிடித்து இழுத்துத் தள்ளிவிட்டால் போதும்; பெரிய பாறை உருண்டுவிழுந்துவிடும்; நாம் தப்பித்துவிடலாம்" என்று கணக்கு போட்டது. ஆனால், அந்தச் சின்னப் பாறையைத் தன்னால் இழுக்க முடியாது என்று எண்ணிய மான், ஒரு ஐடியா பண்ணியது.
புலியைப் பார்த்து, "நீ ரொம்ப பலசாலியாமே! நிறைய பேர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். உனக்கு பலம் இருந்தால், இந்தச் சின்னப் பாறையைத் தள்ளிவிடு பார்ப்போம்" என்றது.
புலியோ, "இந்தக் காட்டிலேயே சிங்கத்திற்கு அடுத்தது எனக்குத்தான் பலம் அதிகம். இது என்ன, சின்னப் பாறைதானே! என்னால் ஈஸியாகத் தள்ளிவிட முடியும்; ஏன் கேட்கிறாய்?" என்றது.
"என்னை எப்படியும் நீ சாப்பிடத்தான் போகிறாய், இருந்தாலும் அதற்கு முன் எனக்கு உன் பலத்தைக் காட்டு பார்க்கலாம்" என்றது.
உடனே, அந்தப் புலி அந்தச் சின்னக் கல்லைத் தள்ளிவிடுவதற்காக அசைத்தது. அவ்வளவுதான், அந்தச் சின்னப் பாறையை முட்டிக்கொண்டு நின்ற பெரிய பாறை புலி மேல் விழுந்து, புலியை நசுக்கியது. வசமாகப் பெரிய பாறையின் அடியில் சிக்கிக்கொண்ட புலியைக் கண்டு சிரித்த மான், உடனடியாக அந்த இடத்திலிருந்து தப்பித்து ஓடியது.
தன்னிடத்திற்கு வந்ததும், நடந்த எல்லாவற்றையும் தன் அம்மாவிடம் சொல்லியது. நடந்த எல்லாவற்றையும் கேட்ட மான், தன் மகனுடைய புத்திசாலித்தனமான எண்ணத்தைப் பாராட்டியது. "நீ எங்கிருந்தாலும் பிழைத்துக்கொள்வாய். உன்னைப் பற்றி எனக்குக் கவலை இல்லை" என்று தட்டிக்கொடுத்தது.