
கோபால் என்ற சிறுவன் எப்பொழுதுமே யாரிடத்திலும் கோபப்பட்டுக் கொண்டே இருப்பான். பொறுமை என்பது அவனிடம் சிறிதும் கிடையாது. இதனால் தினமும் பள்ளியில் ஆசிரியரிடமிருந்து புகார்கள் வந்தவண்ணம் இருக்கும்.
இதனால் கவலை கொண்ட அவனது பெற்றோர்கள் அவனுக்கு நிறைய எடுத்துச் சொல்லியும் கேட்காமல், கோபத்தில் யாரையாவது அடித்து விடுவதும், திட்டி விடுவதுமாக இருந்தான். கோபாலின் அம்மா தினமும் அவனுக்கு இரவில் கதை சொல்லும் பொழுது, கோபத்தால் ஏற்படும் துன்பங்களை எடுத்துச் சொல்லிப் புரிய வைப்பாள். இருப்பினும் அவனால் கோபத்தை அடக்க முடியவில்லை.
ஒரு நாள் அவனுடைய அப்பா அவனிடம் ஒரு கட்டு ஆணியைக் கொடுத்து, "நீ கோபப்படும் பொழுதெல்லாம் ஒரு ஆணியை எடுத்து நம் வீட்டுத் தோட்டத்தில் உள்ள பெரிய மரத்தின் மீது அடி. அதேபோல், கோபப்படாமல் இருக்கும் சமயத்தில் ஒரு ஆணியை அந்த மரத்திலிருந்து பிடுங்கி எடுத்து விடு" என்று கூறினார். அவனும் சரி என்று ஒப்புக்கொண்டு அப்பாவிடம் இருந்து ஒரு கட்டு ஆணியை வாங்கிக் கொண்டான்.
நாட்கள் செல்லச் செல்ல கோபப்பட்டதால் அடித்த ஆணிகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருந்தது. இதைக் கவனித்த அவனுடைய அப்பா அவனைக் கூப்பிட்டு, "இவ்வளவு கோபப்படுவது உன் உடம்பிற்கு நல்லதல்ல. கோபத்தைக் குறைத்துக் கொள்" என்று அறிவுரை வழங்கினார்.
அவனும் கோபத்தைக் குறைத்துக்கொண்டு வாழப் பழகினான். இதனால் கோபப்படாமல் இருக்கும் சமயம், மரத்தில் இருந்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கிக்கொண்டு வரும் பொழுது, ஒரு சமயம் மரத்தில் இருந்த அனைத்து ஆணிகளையும் பிடுங்கிவிட்டான்.
கோபத்தால் நண்பர்களை இழந்ததும், ஆசிரியர்களிடம் திட்டுகளை வாங்கியதும் அவன் நினைவில் வந்து போனது. கோபம் என்னும் கொடிய அரக்கனால் தான் பட்ட கஷ்டங்களை எண்ணி மனம் வருந்தித் திருந்திய கோபால், தந்தையை ஆசையுடன் கட்டிக்கொண்டு நன்றி தெரிவித்தான்.
அப்பாவின் கடும் முயற்சியால்தான் கோபத்தை விட முடிந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்தான். இனிமேல் கோபப்படாமல் பொறுமை காப்பதாக தந்தையிடம் வாக்குறுதி தந்தான்.
"கோபம் எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதை இப்போது புரிந்துகொண்டாய் அல்லவா? உன்னுடைய கோபம்தான் உன் மீது நண்பர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வெறுப்பை ஏற்படுத்தியது. நண்பர்கள் யாரும் உன்னிடம் பேசாமல் ஒதுங்கிப் போய் உனக்குத் தனிமையை ஏற்படுத்தியது. உன் உடல்நலத்தையும் பாதித்தது. கோபப்படுவது எவ்வளவு மோசமானது என்பதை இப்போது தெரிந்துகொண்டாய் அல்லவா? இனிமேல் தேவையில்லாமல் கோபம் கொள்வதைக் கட்டுப்படுத்திக்கொள். பொறுமையாக இருந்ததால் உன்னால் எந்தக் கஷ்டத்தையும் சமாளிக்க முடிந்தது. 'பொறுத்தவர் பூமி ஆள்வார்' என்பதற்கேற்ப, எதற்கும் கோபப்படாமல் பொறுமை காத்ததால் நிறைய நண்பர்களையும் பெற்றுவிட்டாய்.
உன் கோபத்தைக் கண்டு புகார் அளித்த ஆசிரியர்களும் உன்னைப் புகழ்ந்து பேசுகிறார்கள். நேற்று நடந்த பெற்றோர் ஆசிரியர் சந்திப்பில் உன்னைப் பற்றித் தலைமை ஆசிரியரும் வெகுவாகப் புகழ்ந்து பாராட்டினார்."
என்ன குட்டீஸ், இனிமேல் தேவையில்லாமல் கோபப்பட மாட்டீர்கள் தானே? கோபாலைப் போல் நீங்களும் இனி நல்ல பிள்ளைகளாக நடந்துகொள்வீர்கள் தானே?