பொதுவாக அழகாக அலங்காரம் செய்து கொண்டு நம் உருவத்தை கண்ணாடியில் பார்த்து திருப்திப்பட்டுக் கொள்வோம். நமது உருவத்தை பிரதிபலிப்பதோடு கண்ணாடியின் வேலை முடிந்து விடுவதில்லை. தன் முன் அமர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு சுய விழிப்புணர்வு, தன்னம்பிக்கை, நினைவாற்றல், மேடைப் பேச்சுத் திறன் போன்றவற்றை கண்ணாடி மேம்படுத்துகிறது. மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும். மேலும் அவர்களுக்கு உளவியல் ரீதியான நன்மைகளையும் வழங்கும் ஒரு சக்தி வாய்ந்த கருவியாக கண்ணாடி விளங்குகிறது.
கண்ணாடி எவ்வாறு மாணவர்களுக்கு உதவுகிறது?
கண்ணாடியின் முன்பு அமர்ந்து படிப்பது என்பது ஒரு விசித்திரமான அசாதாரணமான அணுகுமுறையாக தோன்றலாம். ஆனால் இதில் பல உளவியல் ரீதியான நன்மைகள் உள்ளன.
ஞாபக சக்தி:
பாடப் புத்தகத்துடன் கண்ணாடியின் முன் அமர்ந்து படிக்கும்போது தனது சுய உருவத்தை மாணவர்கள் கண்ணாடியில் பார்க்கிறார்கள். படிக்கும் பாடமும் அது சம்பந்தமான விஷயங்களும் அவர்களின் நினைவாற்றலை தூண்டுகிறது. அவர்களின் உடல் அசைவுகள், முகபாவனைகள், போன்றவற்றை கற்றல் அறிவுடன் இணைக்கும் போது வலுவான நரம்பியல் இணைப்புகள் ஏற்படக்கூடும். இது படித்தது மறந்துவிடாமல் ஞாபகத்தில் இருக்கும். ஞாபகத்திறன் கூடும்.
மேடைப் பேச்சுத் திறன்:
பல மாணவர்களுக்கு மேடையில் ஏறி இரண்டு வார்த்தைகள் பேசுவதற்குள் வியர்த்து வழிந்து விடும். கை கால்கள் நடுங்கும். ஆனால் கண்ணாடியின் முன் அமர்ந்து படிக்கும் போது அல்லது வாய் விட்டு சொல்லிப் பார்க்கும் போது தனக்கு எதிரே பார்வையாளர்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்கிற எண்ணத்தை அது உருவாக்கும். உடல் மொழி, சைகைகள், பேசும் தொனி போன்றவற்றை கண்ணாடியில் பார்த்து அவர்கள் சரி செய்து கொள்ளலாம்.
தன்னம்பிக்கை:
மேடை பயத்தை வெல்ல கண்ணாடியின் முன் படிப்பது ஒரு பயனுள்ள நுட்பம் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். பாதுகாப்பான மற்றும் ஒரு ஒழுங்கான சூழலில் பயிற்சி செய்வதன் மூலம் மாணவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் பதட்டத்தை குறைக்கவும் முடியும். தொடர்ந்து பயிற்சி செய்தால், மேடையில் ஏறி நின்று நூற்றுக்கணக்கில் பார்வையாளர்கள் முன்பு பேசும்போதும் பய உணர்ச்சியே இருக்காது. தைரியமாக அசத்தலாக பேச முடியும்.
தெளிவு:
படிக்கும் பாடம் சரியாக புரியாவிட்டால் அந்த குறிப்பிட்ட பகுதியை, தன் உருவத்தை கண்ணாடியில் பார்த்துக் கொண்டே ஒரு மாணவர் தனக்குத்தானே விளக்கிக் கொள்ளும் போது அதில் இருந்த சந்தேகம் விலகி அந்த பாடம் நன்றாக அவருக்கு புரியும்.
அறிவுக் கூர்மை மேம்படுதல்:
கண்ணாடியில் தன்னையே பார்த்து பேசுவது, பேச்சின் ஒரு வடிவம் ஆகும். இது சுய கட்டுப்பாடு, விழிப்புணர்வு, தன்னம்பிக்கை அதிகரித்தல் போன்றவற்றைத் தரும். எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு சிறந்த வழியாகும். தன் உருவத்தை கண்ணாடியில் பார்த்துக் கொண்டே நடத்தும் சுய உரையாடல் மாணவர்களின் புரிதலை தெளிவுபடுத்தவும் அறிவுக் கூர்மையை மேம்படுத்தவும் உதவும்.
ஆனால் சிலருக்கு கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டே படிப்பது கவனச் சிதறலாக அமையக்கூடும். தங்கள் தோற்றத்தைப் பற்றிய அதிருப்தியும், தன்னையே மோசமாக விமர்சிக்கும் இயல்புடையவர்களும் இதைத் தவிர்க்கலாம். கண்ணாடியை படிக்கும் அறையில் வைத்திருப்பது சரியல்ல என்கிறது வாஸ்து. எனவே இது மாணவர்களின் தனிப்பட்ட படிப்புப் பழக்கத்தைப் பொறுத்தது.