
நாட்டில் டிஜிட்டல் பணப்பரிமாற்ற வசதி பயன்பாட்டிற்கு வந்த பிறகு, பண மோசடிகளும் அதிகரித்து விட்டன. டிஜிட்டல் கைது என்ற பெயரில் பல மோசடி கும்பல்கள், அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி கோடிக்கணக்கான பணத்தை சுருட்டியுள்ளனர். ஆன்லைன் மோசடிகள் குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருவதோடு, பொதுமக்களுக்கு அவ்வப்போது விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
ஆன்லைன் மோசடி தவிர்த்து ஒருசில மோசடி கும்பல் நிதி நிறுவனங்களை நடத்தியும் பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர். இதனைத் தடுக்கும் வகையில் 38 பேர் கொண்ட தனிப்படையை அமைந்துள்ளது தமிழக காவல் துறை.
பண மோசடி செய்யும் போலியான நிதி நிறுவனங்களைக் கண்டுபிடிக்கவும், கோடிக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய கும்பலை கைது செய்யவும் 38 பேர் கொண்ட நுண்ணறிவு பிரிவு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நிதி மோசடி குறித்த வழக்குகளை விசாரிப்பதோடு, மேலும் பண மோசடிகள் நடக்காத வகையில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவார்கள்.
நிதி நிறுவனங்கள் முதல் கூட்டுறவு சங்கங்கள் வரை நடக்கும் நிதி மோசடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க பொருளாதார குற்றப்பிரிவில் மொத்தம் 462 காவல் அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள். கடந்தாண்டில் மட்டும் 18,860 பேர் பண மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இவர்களிடம் கிட்டத்தட்ட ரூ.1,427 கோடி நிதி மோசடி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வரை 4.25 இலட்சம் நபர்களிடம் ரூ.13,295 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. நிதி மோசடி குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “ஆண்டிற்கு 200-க்கும் மேற்பட்ட பண மோசடியில் ஈடுபடும் நபர்களை கைது செய்து வருகிறோம். தற்போது 516 பண மோசடி வழக்குகள் விசாரணையில் உள்ளன. மோசடி செய்து சேர்த்து வைக்கப்பட்டுள்ள 4,133 கோடி சொத்துகளை முடக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
இதில் சிலர் வெளி நாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் தப்பியுள்ளனர். இவர்களில் 16 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், இவர்களை கண்டறிய விமான நிலையங்களில் ‘லுக் அவட் நோட்டீஸ்’ ஒட்டப்பட்டுள்ளது. இதுதவிர 2 குற்றவாளிகளை கைது செய்ய சர்வதேச காவல்துறையினர் உதவியை நாடியுள்ளோம். இதற்காக அவர்களிடம் ‘ரெட் அலர்ட் நோட்டீஸ்’ வழங்கி இருக்கிறோம்.
மோசடி நிதி நிறுவனங்களை கண்டறியவும், தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளைக் துப்பு துலக்கி கைது செய்யவும் நுண்ணறிவு பிரிவு காவல் அதிகாரிகள் 38 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இனி பண மோசடி குற்றங்கள் நிச்சயமாக குறையும். அதற்கேற்ப காவல் துறைக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.