

"அப்பா, உனக்கொரு விஷயம் தெரியுமா? இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் ஞாயிறு முதல் சனி வரை எல்லாக் கிழமைகளும் நான்கு நாட்கள் வருமாம். இந்த அதிசயம் 800 வருடத்திற்கு ஒரு முறைதான் நடக்குமாம். வாட்ஸ்அப்பில் படித்ததாக என்னுடைய நண்பன் சொன்னான்," என்று சொல்லியபடியே வந்தான் சுந்து என்ற சுந்தர்.
சிவராமன் சிரித்தார். "என் கேள்விக்கு பதில் சொல். இந்த வருடம் பிப்ரவரிக்கு எத்தனை நாட்கள்?" என்று கேட்டார்.
"இது லீப் வருடமில்லையே... ஆகவே 28 நாட்கள்," என்றான் சுந்து.
"உனக்குத் தெரியும், வாரத்தின் நாட்கள் 7. எண் 28, எண் 7-ஆல் மிச்சமில்லாமல் வகுபடும். ஆகவே எல்லாக் கிழமைகளும் 4 நாட்கள் வரும், இல்லையா?"
"ஆமாம், அதிலென்ன சந்தேகம்?" என்றான் சுந்து.
"2024, 2025, 2026, 2027, 2028 ஆகிய வருடங்களில் பிப்ரவரிக்கு எத்தனை நாட்கள் இருக்கும்?" என்று கேட்டார் சிவராமன்.
"2024, 2028 இரண்டும் லீப் வருடங்கள். ஆகவே 29 நாட்கள். மற்ற வருடங்களில் பிப்ரவரிக்கு 28 நாட்கள். அப்படியானால், போன வருடமும் பிப்ரவரியில் எல்லாக் கிழமையும் நான்கு நாட்கள் இருந்தன; அடுத்த வருடமும் அப்படியே இருக்கும். வாட்ஸ்அப்பில் வந்த தகவல் தவறானது, இல்லையா?" என்றான் சுந்து.
தொடர்ந்து சுந்து கேட்டான், "அப்பா, இந்த வருடம் பிப்ரவரி 1 ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பித்து, 28 சனிக்கிழமையில் முடிகிறது. ஒருவேளை இதைப் போல மறுபடியும் வருவதற்கு 800 வருடங்கள் ஆகுமோ?"
"இதுவும் தவறான தகவல். 2032-ஆம் வருடம் பிப்ரவரி 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் வரும். அதைப் போல 2015-ஆம் வருடம் பிப்ரவரி 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையாக இருந்தது."
"கேலண்டர் உதவியில்லாமல் இதை எப்படி உங்களால் சொல்ல முடிகிறது அப்பா?"
"சாதாரண வருடத்திற்கு 365 நாட்கள்; அதாவது 52 வாரங்கள் மற்றும் 1 நாள். ஆகவே, அடுத்த வருடம் கிழமை 1 நாள் தள்ளிப் போகும். அதுவே லீப் வருடத்திற்கு 366 நாட்கள்; அதாவது 52 வாரங்கள் மற்றும் 2 நாட்கள். இதனால் அடுத்த வருடத்திற்கு கிழமை 2 நாட்கள் தள்ளிப் போகும்.
2026 பிப்ரவரி 1 ஞாயிறு என்றால், 2027 பிப்ரவரி 1 திங்கள், 2028 பிப்ரவரி 1 செவ்வாய். 2028 லீப் வருடம் என்பதால், 2029 பிப்ரவரி 1 வியாழன், 2030 பிப்ரவரி 1 வெள்ளி, 2031 பிப்ரவரி 1 சனி, 2032 பிப்ரவரி 1 ஞாயிறு. இதைப் புரிந்து கொண்டால், உன்னுடைய பிறந்த நாள் எந்தக் கிழமையில் வரும் என்பதை கேலண்டர் துணையில்லாமல் நீயே அறிய முடியும்."
சிவராமன் முடித்தார், "வாட்ஸ்அப்பில் வருவது எல்லாம் உண்மை என்று நம்பி விடாதே.
எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
என்றார் தெய்வப் புலவர் திருவள்ளுவர். எனவே, வாட்ஸ்அப்பில் வரும் செய்திகளை ஆய்ந்து அறிவதே அறிவுடமை."