பாலூட்டி இனத்தைச் சேர்ந்த அபூர்வமான உயிரினமான வால்ரஸ் அதிக அளவில் குளிர்ச்சி நிறைந்த ஆர்க்டிக் பகுதிகளில் வாழ்கின்றன. இவற்றின் உடலானது வெளிர் பிரௌன் நிறத்தில் அமைந்திருக்கும். இவற்றின் தோலுக்கு அடியில் பிளப்பர் எனும் கொழுப்புப் படலம் காணப்படுகிறது. குளிர்ச்சி நிறைந்த பகுதிகளில் இவை வாழ்வதால் இத்தகைய பிளப்பர் படலமானது அவற்றை குளிர்ச்சியிலிருந்து காப்பாற்றுகிறது.
வால்ரஸ்கள் யானைகளைப் போல கூரான தந்தங்களைப் பெற்றுள்ளன. யானை இனத்திலே ஆண் யானைக்கு மட்டும்தான் தந்தம் இருக்கும். ஆனால் வால்ரஸ் இனத்திலே ஆண் பெண் என இரண்டு பாலினங்களுக்கும் தந்தங்கள் அமைந்துள்ளன. இவற்றின் தந்தங்கள் சுமார் மூன்று அடி நீளமிருக்கும். பெண் வால்ரஸை விட ஆண் வால்ரஸின் தந்தங்கள் சற்று நீளமாக காணப்படும்.
ஆண் வால்ரஸ்கள் சுமார் 12 அடி நீளம் வரை வளர்கின்றன. இவற்றின் எடையானது சுமார் 1500 கிலோவாகும். பெண் வால்ரஸ்கள் சுமார் 9 அடி நீளம் வரை வளர்கின்றன. பெண் வால்ரஸின் எடையானது சுமார் 1200 கிலோவாகும். வால்ரஸின் தோலானது சுமார் நான்கு சென்டிமீட்டர் தடிமனானவை.
வால்ரஸ்களின் உணவுப் பழக்கம் சற்று வித்தியாசமானது. வால்ரஸ்கள் மென்மையான உடலைக் கொண்ட உயிரினங்களையே சாப்பிடும் வழக்கம் உடையன. நத்தைகள் நட்சத்திர மீன்கள் சீ குக்கும்பர் முதலானவற்றைச் சாப்பிடுகின்றன. சில சமயங்களில் இவை சில குறிப்பிட்ட மீன்களை மட்டுமே சாப்பிடுகின்றன. மற்றும் சீல்களையும் திமிங்கலக் குட்டிகளையும் இவை சாப்பிடுகின்றன. இத்தகைய உணவுகளை இவை தங்களுடைய தந்தம் போன்ற கூரிய பற்களால் கடித்துச் சாப்பிடுகின்றன. வால்ரஸ்கள் சீல் இனத்தில் ரிங்ட் சீல் மற்றும் பியர்டட் சீல்களை மட்டுமே சாப்பிடுகின்றன.
நன்கு வளர்ந்த வால்ரஸ்கள் ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் வயிறு நிரம்ப சாப்பிடுகின்றன. வால்ரஸ்கள் வாய் நிறைய தண்ணீரை நிரப்பிக்கொண்டு அதை மிக வேகமாக கடற்கரைப் பகுதிகளில் துப்புகின்றன. அப்பகுதிகளில் மணலுக்குள் வசிக்கும் நண்டு போன்ற உயிரினங்கள் இதனால் வெளியே வரும். அவற்றை இவை பிடித்து சாப்பிடும் வழக்கத்தை வைத்துள்ளன. இவை தங்களுடைய உணவை மென்று தின்பதில்லை. உணவை அப்படியே விழுங்கி விடுகின்றன.
வால்ரஸ்கள் நன்றாக நீந்தும் திறமையை உடையன. இவை மணிக்கு 35 கிலோமீட்டர் வேகத்தில் நீந்தும் ஆற்றலைப் பெற்றுள்ளன. வால்ரஸ்கள் கூட்டம் கூட்டமாக வசிக்கும் இயல்பை உடையன. ஒருசில வால்ரஸ் கூட்டங்களில் சுமார் 2000 வால்ரஸ்கள் கூட இருக்கும்.
பொதுவாக பாலூட்டிகள் குட்டிகளை வயிற்றுக்குள் சுமந்து அவற்றை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் ஈனும். பெண் வால்ரஸ் குட்டியை வயிற்றுக்குள் சுமார் பதினைந்து மாதங்கள் சுமந்து ஈனுகிறது. ஒரு சமயத்தில் ஒரே ஒரு குட்டியை மட்டுமே இவை ஈனுகின்றன. எப்போதாவது அரிதாக இரண்டு குட்டிகளை ஈனுகின்றன. பெண் வால்ரஸ் ஐஸ் தரையின் மீதே பிரசவிக்கின்றன. குட்டியானது பிறந்ததும் சுமார் மூன்று அடிகள் முதல் நான்கு அடிகள் வரை காணப்படுகின்றன. பிறந்த குட்டி வால்ரஸானது சுமார் ஐம்பது கிலோ எடையுடையதாக இருக்கிறது. தாயானது தனது குட்டியை சுமார் இரண்டு வருடங்களுக்கு கூடவே வைத்து பாதுகாக்கிறது. குட்டிக்கு தொடர்ந்து பாலைக் கொடுத்து வளர்க்கும். வால்ரஸின் பாலில் சுமார் முப்பது சதவிகிதம் கொழுப்புசத்தும் பத்து சதவிகிதம் புரதச்சத்தும் அடங்கியுள்ளன. குட்டி வால்ரஸானது ஒவ்வொரு மாதமும் சுமார் ஐந்து அங்குல அளவிற்கு வளரும். ஒரு மாதம் நிறைந்ததும் நன்றாக நீந்தும் ஆற்றலைப் பெற்று விடுகின்றன.
வால்ரஸ்கள் பொதுவாக பதினைந்து வருடங்கள் முதல் முப்பது வருடங்கள் வரை வாழ்கின்றன. துருவப் பகுதிகளில் வாழும் போலார் கரடிகள் வால்ரஸ் குட்டிகளை சாப்பிடுகின்றன. இவை இறந்த வால்ரஸ்களையும் சாப்பிடும் வழக்கம் உடையனவாக உள்ளன. கில்லர் திமிங்கலங்கள் வால்ரஸ் குட்டிகளை சாப்பிடுகின்றன. மேலும் இவை சில சமயங்களில் பெரிய வால்ரஸ்களையும் சாப்பிடுகின்றன.