கல்வி என்பது மனத்தைத்தான் படிக்கும் விஷயத்தின் மீது ஒரு முகப்படுத்த கற்றுக் கொள்வதில்தான் இருக்கிறது.
மனத்தைக் கூர்மைப்படுத்துவதுதான் தவம் என்று சொல்லப்படும். எல்லா அறிவுக்கும் மையப்பொருளாக இருப்பது மனக்கூர்மைதான்.
ஒரு சாதாரண மனிதன் தன் சிந்தனை சக்தியில் தொண்ணூறு சதவிகிதத்தை வீண் செய்து விடுகிறான். அதனால் அவன் அடிக்கடி தவறுகளை அழைக்கிறான். பயிற்சி பெற்ற மனிதனின் மனம் தவறுகளை செய்யாது.
மனத்தை ஒருமுகப்படுத்தி உள் நோக்கி திரும்பினால் நமக்குள் இருப்பதெல்லாம் நம் அடிமையாகிவிடும்.
மனக்கூர்மை என்பது மனத்தை ஒரு சிறிய பொருளின் மீது நிறுத்திக் கட்டுப்படுத்துவது ஆகும்.
சுவாமி விவேகானந்தரின் மனக்கூர்மை
சுவாமி விவேகானந்தர் ஒரு வேலையை கையில் எடுத்து பணிபுரியும்போது அவருடைய சக்தி நமக்கு தெரியவரும். அவருடைய மனம் பேரற்புதமான சக்திகளை கொண்டது; கம்பீரமானது; பெருமை வாய்ந்தது; பேரொளி உடையது. அவருடைய மனம் பெரும் பேரறிஞர்களை விட கூர்மை வாய்ந்தது. அவருடைய கருத்துக்களில் தெளிவு, சக்தி, அனைத்தையும் தாண்டிய அகலம் இவற்றை பார்த்தால் ஒரு சாதாரண மனித மூளையில் இருந்தா இவ்வளவு சக்தி பிறந்தது! என்று ஆச்சரியமாக இருக்கும்.
மனக்கூர்மை பற்றி சுவாமி விவேகானந்தர் சொன்ன கதை...
புகழ் பெற்ற முனிவராகிய வியாசரின் மகன் சுகதேவன். அவன் ஜனக மன்னனிடம் பாடம் கற்க போனான். முதல் மூன்று நாட்கள் மன்னனோ, மந்திரிகளோ, வாயிர்காப்பாளர்களோ, சுகதேவனைப் பொருட்படுத்தவே இல்லை. நான்காம் நாள் திடீரென அமைச்சர்களும், அதிகாரிகளும் திரண்டு வந்து சுகதேவனை பெரும் மரியாதையுடன் வரவேற்றனர். அரண்மனைக்கு உள்ளே அழைத்துபோய் சுகமான அறையில் தங்க வைத்தார்கள். வாசனைத் தைலங்களைப் பூசிக் குளிப்பாட்டி சிறப்பான ஆடை அணிகலன்களை பூட்டினார்கள். எட்டு நாள் சிறந்த உணவை படைத்து ஆடம்பரத்தில் மூழ்கடித்தார்கள்.
தனக்கு கிடைத்த அலட்சியத்தைப் பார்த்து சுகதேவன் வருத்தப்படவும் இல்லை. ஆடம்பரத்தைப் பார்த்து மனம் பேதலித்து போகவும் இல்லை. அரண்மனை வாயிலில் காத்துக் கிடக்கும்போதும், ஆடம்பரத்தில் மூழ்கி கிடக்கும்போதும் அவன் மனம் ஒன்றுபோல் இருந்தது. பிறகு அவனை மன்னன் முன் அழைத்து வந்தார்கள். மன்னன் சிங்காசனத்தில் அமர்ந்திருந்தான் இசை, நடனம் முதலிய அரசவை நிகழ்ச்சிகள் நடந்த வண்ணம் இருந்தன.
மன்னன் சுகதேவனிடத்தில் ஒரு கிண்ணத்தில் வழிய வழியப் பாலை ஊற்றி கையில் கொடுத்தான். “அரசவை மண்டபத்தை ஏழு தடவைகள் சுற்றி வர வேண்டும். பால் ஒரு துளி கூட கீழே சிந்த கூடாது” என்று கட்டளையிட்டான்.
சுகதேவன் என்ற சிறுவன் கிண்ணத்தை கையில் எடுத்துக் கொண்டான். இசை முதலிய மனத்தை அலை கழிக்கும் நிகழ்ச்சிகளுக்கு இடையே மண்டபத்தை ஏழு தடவைகள் சுற்றி வந்தான். மன்னன் சொன்னபடியே ஒரு துளி கூடப் பால் சிந்த வில்லை. சிறுவனின் மனம் உலகத்தில் எதனாலும் மாற்றம் அடையவில்லை. அவன் எதில் மனதை ஈடுபடுத்தினானோ அதில் மட்டுமே மனம் சென்றது. இறுதியில் அவன் பால் கிண்ணத்தை மன்னனிடம் கொண்டு வந்து கொடுத்தான்.
மன்னன் சொன்னான்: உன் தந்தை உனக்கு எல்லாவற்றையும் கற்பித்திருக்கிறார், நீயும் தானே கற்றறிந்திருக்கிறாய். இதை விட நீ அறிவதற்கு வேறு ஒன்றும் இல்லை. உனக்கு சத்தியஞானம் பிறந்து விட்டது. நீ வீடு திரும்பலாம்” என்றார். சுகதேவனே பாரதம் கண்ட லட்சிய ஞானி ஆவான்.