

டெய்லர் பறவையின் விஞ்ஞானப் பெயர் ஆர்தோடோமஸ் சுடோரியஸ். ஆசிய நாடுகளில் இதைக் காணலாம். இவை மிகச் சிறிய பறவைகளாகும். இவை 10 லிருந்து 14 செ. மீ அளவு நீளமும் மற்றும் 6 லிருந்து 10 கிராம் எடையிலும் இருக்கும்.
நல்ல வண்ணத்துடன் இருக்கும் இவற்றின் மேல்பகுதி க்ரே அல்லது பச்சை நிறத்தில் இருக்கும். இவற்றிற்கு நிமிர்ந்து நிற்கக்கூடிய வால் இருக்கும். இந்த வகை பறவைகள் பெரும்பாலும் ஒரே இடத்தில் வசிக்கக் கூடியதாகும். இது அதிக அளவில் பறக்காவிட்டாலும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய பறவையாகும். இதை பாடும் பறவை என்றும் அழைப்பார்கள்.
மரங்கள் செடிகள் மற்றும் தரையில் அதிகம் காணப்படும். பழங்கள் பெர்ரி மற்றும் கொட்டைகளை ஆகாரமாக உண்ணும். பூக்களில் இருந்து தேனையும் உண்ணும். இதன் தலையில் சிறிய கொண்டை இருக்கும்.
டெய்லர் பறவை இலைகளை எப்படி தைக்கிறது?
இந்த பறவை தன் கூட்டை தைக்கக்கூடியதால் டெய்லர் பறவை எனப் பெயர் பெற்றது. இவை இலைகளை தைக்கும் முறை மிகவும் சுவாரசியமானதாகும். ஒரு கூட்டில் சுமார் 150லிருந்து 200 தையல்கள் இருக்கும் என அறியப்படுகிறது. தன் குஞ்சுகள் மிகவும் பாதுகாப்பான இடத்தில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும்.
டெய்லர் பறவை கூடு கட்டும் விந்தை:
கூடுகளை இலைகள் கொண்டு தைக்கும் வேலையை பெண் பறவையே செய்கிறது. நல்ல பெரிய இலைகளை தேர்வு செய்யும். இந்த இலைகள் நடுவில் மிகவும் அழுத்தமாக இருப்பதையே இவை தேர்ந்தெடுக்கும். இதன்மூலம் குஞ்சு அதில் இருந்து வெளியே தெரியாது. முதலில் இலையை தன்மீது சுற்றிவளைத்து வெளியே தெரியாதபடி இருக்கிறதா என்பதை உறுதிபடுத்திய பிறகே, இலைகளைத் தேர்ந்தெடுக்கும். இரண்டு அல்லது மூன்று பெரிய அகலமான இலைகளைத் தேர்ந்தெடுத்து, தன் கூறிய ஊசி போன்ற அலகினால் இலைகளின் ஓரங்களில் சிறுசிறு துளையிடும்.
இந்த துளைகள் மிகச் சிறிய அளவிலேயே இருக்கும். பெண் பறவையானது பஞ்சு மற்றும் பட்டுப் பூச்சிகளிலிருந்து பெறப்படும் சில்க் நூல்களை இந்த துளையில் தன் அலகினால் அழகாக தைக்கும். மிக நெருக்கமாக தைக்கப்படுவதால் இந்த கூடு உறுதியாக இருக்கும். இந்த கூடுக்கு மேல் கூரை போன்ற அமைப்பையும் இது இலையைக் கொண்டே ஏற்படுத்துகிறது. இது கிழிந்தாலும் பெண் பறவை மிகப் பொறுமையாக தையல் மூலம் அதை சரிசெய்கிறது. இந்த கூடு கட்டும் வேலையை மதியம் அல்லது காலை வேளைகளில் இந்த பறவை செய்கிறது.
தைக்கும் வேலையைப் பெண் பறவை செய்தாலும், கூடு கட்டுவதற்கு தேவையான பொருட்களை சேகரித்து கொடுக்கும் வேலை ஆண்பறவையினுடையது ஆகும்.
ஏன் டெய்லர் பறவை இலைகளைத் தேர்வு செய்கிறது?
இந்த கூடு இலையைப் போன்ற அமைப்பை ஒத்துள்ளதால், இதை மிகக் கூர்ந்து கவனித்தால்தான் இது கூடு என்பதை அறியமுடியும். ஒரு கப் போன்ற அமைப்பில் பஞ்சுகள் மற்றும் இறகுகளை உள்ளே வைத்து குஞ்சுகளுக்கு மெத்து மெத்தென்று இருக்கும் வகையில் டெய்லர் பறவை கூடு அமைக்கிறது.
கூடு உள்ளே பச்சைநிற இளம் செடிகளும் குஞ்சுகளுக்கு பாதுகாப்பான குளிர்ச்சியான சூழலையும் அளிக்கின்றன. இப் பறவைகள் சுமார் 3லிருந்து 5 முட்டைகள் இடுகின்றன. இந்த முட்டைகள் 12 நாட்கள் அடைகாக்கப் படுகின்றன. பழைய கூடுகளை பிற பறவைகள் பயன்படுத்துகின்றன.