

ஜார்ஜியாவின் காகசஸ் மலைத்தொடர்கள் வீரத்திற்கும், அநீதியை எதிர்க்கும் ஆக்ரோஷத்திற்கும் புகழ்பெற்றவை. அந்த மலைகளின் உச்சியில், மேகங்கள் உரசிச் செல்லும் உயரத்தில் அமைந்திருந்தது ஒரு பழைய கிராமம். அங்கே ரேஸோ என்ற இரும்புக்கொல்லன் வாழ்ந்து வந்தான்.
ரேஸோவின் பட்டறையில் எரியும் தணல் ஒருபோதும் அணைந்ததே இல்லை. அவன் வடித்த அரிவாள்களும், கத்திகளும், வாள்களும் அந்தப் பகுதி முழுவதும் பேசப்பட்டன. ஆனால், அவன் யாரிடமும் காட்டாமல் மறைத்து வைத்திருந்த ஒரு பொக்கிஷம் இருந்தது - அது அவனது முன்னோர்கள் அவனுக்கு விட்டுச் சென்ற 'நீல எஃகு வாள்'.
அந்த வாளின் கைப்பிடியில் கழுகுச் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். வாள் மர்மமான மெல்லிய நீல ஒளியை உமிழ்ந்துகொண்டிருக்கும். அந்த வாளுக்கு ஒரு குணம் உண்டு. அது போர் வீரர் அல்லாதவர்கள் எடுத்தால் உறையிலிருந்து வெளியே வராது. அநியாயக்காரர்கள் அதைத் தொட்டால், அது சுட்டெரிக்கும் தணலாக மாறும்.
அந்தப் பகுதியை ஆட்சி செய்த பிரபு லெவன் கொடூரமானவன். மக்களின் உழைப்பைச் சுரண்டுவதிலும், அதிகாரத்தைக் காட்டி எளியவர்களைத் துன்புறுத்துவதிலும் இன்பம் கண்டவன். ரேஸோவிடம் இருக்கும் விசித்திரமான வாளைப் பற்றிக் கேள்விப்பட்ட அவன், அதைத் தன் தர்பாரின் அலங்காரப் பொருளாக்கத் துடித்தான்.
ஒரு நாள் தனது வீரர்களுடன் ரேஸோவின் பட்டறைக்கு வந்தான்.
"ரேஸோ! அந்த நீல வாளை என்னிடம் கொடுத்துவிடு. அதற்கு ஈடாக உனக்கு நிலங்களும் பொன்னும் தருகிறேன்," என்றான்.
ரேஸோ நிமிர்ந்து நின்று சொன்னான், "பிரபு, இது விற்கப்பட வேண்டிய பொருள் அல்ல. நீதியைக் காப்பவர்களின் கைகளுக்காகக் காத்திருக்கும் புனித ஆயுதம். அநீதி இழைக்கும் கைகள் அதைத் தொட்டால், அது சாபமாக மாறும். எனவே, அதை இப்போதே மறந்துவிடுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது.”
இந்த பதில் பிரபுவின் கர்வத்தைச் சீண்டியது.
"சாதாரண இரும்புக்கொல்லன் எனக்கு அறிவுரை சொல்வதா?" என்று கத்திய அவன், தனது வீரர்களை ஏவி ரேஸோவைச் சிறையில் அடைத்தான். அவனது பட்டறையைச் சூறையாடி, அந்த வாளைப் பலவந்தமாக எடுத்துச் சென்றான்.
அரண்மனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நீல எஃகு வாள், அங்கே விசித்திரமான மாற்றத்தை அடைந்தது. பிரபு லெவன் அந்த வாளைத் தொடும்போதெல்லாம், அது கரகரப்பான ஒலியை எழுப்பியது. அது ஒரு போர் வீரன் வலியால் முனகுவதைப் போல இருந்தது. பிரபு எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், அந்த வாளை உறையிலிருந்து ஓர் அங்குலம்கூட வெளியே இழுக்க முடியவில்லை.
அன்று இரவு, நீல வாளைத் தனது படுக்கைக்கு அருகே வைத்துக்கொண்டு உறங்கினான். பயங்கரமான கனவு வந்தது. அந்த வாள் தானாகவே உறையிலிருந்து வெளியேறி, காற்றில் மிதந்து, அவனது மார்புக்கு நேராக, பாயத் தயாராக நின்றது. கைப்பிடியில் உள்ள கழுகுச் சின்னம் உயிர் பெற்றுச் சிறகடித்து, பெரிதாகி, ஆவேசத்தோடு அவனது கண்களைக் கொத்தப் பாய்ந்து வந்தது. அவன் அலறியடித்துக்கொண்டு விழித்தெழுந்தான்.
கண்டது கனவுதான் என்பது தெரிந்து ஆசுவாசப்பட்டான்.
மறுநாள் காலையில் விழித்தெழுந்தபோது, அந்த வாள் வைக்கப்பட்டிருந்த இடத்தைச் சுற்றித் தரையில், ரத்த நிறத்தில் ஒரு வாக்கியம் எழுதப்பட்டிருந்தது: "நேர்மையற்ற கைகள் என்னை ஏந்த முடியாது. நான் நீதியைச் சுவைக்கப் போகிறேன்."
அதைக் கண்டு அவன் அச்சமும் ஆத்திரமும் அடைந்தான்.
ரேஸோவைச் சிறையிலிருந்து இழுத்து வரச் செய்தான்.
"இதோ பார் உன் வாள் செய்யும் வித்தையை! இதை இப்போதே உறையிலிருந்து வெளியே எடு. இல்லையெனில் இக்கணமே உன் தலை மண்ணில் உருளும்!" என்று மிரட்டினான்.
ரேஸோ அமைதியாக அந்த வாளைத் தொட்டான். அவனது விரல்கள் பட்ட மாத்திரத்தில், அதுவரை கல்லாகக் கிடந்த வாள், ஒரு மின்னலைப் போல உறையிலிருந்து வெளியே வந்தது. அதன் நீல நிற ஒளி இப்போது கனல் தெறிக்கும் ரத்தச் சிவப்பாக மாறியிருந்தது. அந்த வாள் ரேஸோவின் கைகளில் உயிருள்ள நாகத்தைப் போலத் துடித்தது.
"பிரபு, இந்த வாள் இப்போது பசியாக இருக்கிறது. அது உங்கள் அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறது. அமைதியாக இருந்த அதை, நான் எச்சரித்தும் கேட்காமல் நீங்கள்தான் சீண்டி, வெறிகொள்ள வைத்துவிட்டீர்கள்," என்றான் ரேஸோ.
அப்போது அந்த வாள் அவனது கையிலிருந்து நழுவி, தானாகவே காற்றில் சுழன்றது. அரண்மனை வீரர்கள் தங்கள் வாள்களால் அதைத் தடுக்க முயன்றனர், ஆனால் நீல வாள் ஒரு சூறாவளியைப் போலச் சுழன்று, தானாகவே வாள் சண்டையிட்டு, அவர்களின் வாள்களை உடைத்துச் சிதறடித்தது.
பிறகு பிரபு லெவனை நோக்கிப் பாய்ந்து வந்தது.
அவன் அலறியடித்து ஓடினான். அரண்மனையின் இருண்ட நிலவறைக்குள் புகுந்து, கதவைச் சாத்திக்கொண்டான். அங்கேதான் அவன் மக்களிடமிருந்து பறித்த செல்வங்களைப் பதுக்கி வைத்திருந்தான்.
நீல வாள் அவனைப் பின்தொடர்ந்தது. நிலவறையின் கனத்த கதவுகளைத் தவிடுபொடியாக்கிக்கொண்டு உள்ளே நுழைந்தது.
அங்கே குவிக்கப்பட்டிருந்த அநீதியான செல்வங்களின் மீது மின்னல் கீற்றைப் போலப் பாய்ந்தது. அடுத்த நொடி, அந்த நிலவறை முழுவதும் நீல நிறத் தீ பற்றி எரிந்தது. பிரபுவின் செல்வங்களும், அவனது கர்வமும் அந்தத் தீயில் கருகின. அவனது அதிகாரத்தின் அடையாளம் ஒரு நொடியில் சாம்பலானது.
மறுநாள் காலை, பிரபு லெவன் தனது பதவி, செல்வம், அரண்மனை அனைத்தையும் இழந்து, ஒரு சாதாரண மனிதனாக கிராமத்தைவிட்டு வெளியேறினான்.
நீல வாள் மீண்டும் ரேஸோவின் பட்டறையில் அமைதியாகக் கிடந்தது. ரேஸோ அதை மீண்டும் பழைய மரப்பெட்டியில் வைத்துப் பூட்டினான்.
ஜார்ஜியாவின் மலைவாழ் மக்கள் இன்றும் சொல்கிறார்கள்: "ஆயுதம் அல்ல, நேர்மைதான் உண்மையான பலம். அநீதி பெருகும்போது, ஜடப்பொருட்கள்கூட நீதிக்காகப் பேசும்; போராடும். உயிருள்ள மனிதர்கள் அநீதிக்கு எதிர்வினையாற்றாமல் வாய்மூடிக்கொண்டும் கைகட்டிக்கொண்டும் இருந்தால், அவர்கள் பிணத்துக்கு சமம்!”