

அழகான மருதூர் என்ற மலையடிவார கிராமத்தில் பசுமைப் படர்ந்திருந்தது. அங்கு எங்கு பார்த்தாலும் மரங்கள் காற்றை வாரி வழங்கி கொண்டிருக்கும்.
அந்த கிராமத்தில் வசிக்கும் ஒரு சிறிய பெண்ணான அமிர்தாதான் தலைவி! ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆம், தலைவியேதான்.
மக்களுக்கு அல்ல! அந்த கிராமத்தில் பறந்து படபடக்கும் பறவைகள், தாவி திரியும் அணில்கள், கிளிகள் எல்லாம் தங்களது குறைகளை அமிர்தாவிடம் முறையிடுவார்கள்.
ஏனென்றால், அமிர்தா அவற்றின் பாஷைகளை எளிதாக தெரிந்து வைத்து இருந்தாள். ஆதலால், அமிர்தாவை தலைவியாக மானசீகமாக ஏற்றுக் கொண்டன பறவைகள், அணில்கள், மற்றும் பச்சைக்கிளிகள்.
ஒரு நாள் காலைப்பொழுது.. அமிர்தா வீட்டின் முற்றத்தில் ஒரு பச்சைக்கிளி ”கீச்.கீச்..கீச்” என்று கத்தியது.
”என்ன? கிளியே! காலையிலேயே வந்துட்டே. என்ன விசேஷம்? பழம் ஏதாச்சும் சாப்பிடுறீயா?"
”பழம்ல்லாம் இருக்கட்டும்க்கா! முதல்ல நான்சொல்றதைக் கேளு!"
”சொல்லு! சொல்லு! எனக்கு நிறைய வேலை இருக்கு!"
"மாந்தோப்புல இருக்குற மாம்பழத்தை எல்லாம் ஒண்ணு விடாம கடிச்சு கடிச்சு வைச்சிருக்குக்கா!"
"மாந்தோப்புன்னா அப்படித்தான் இருக்கும்! யார் கடிச்சு வைச்சாங்க! என்னை மாதிரி சின்ன பசங்களா?"
”இல்லைக்கா! அணில் கூட்டம்தான். அதிலும் ஒரு குட்டி அணில்.. என்னம்மா அட்டகாசம். தாங்க முடியலைக்கா.. நீயே வந்து நியாத்தைக் கேளு” என்று புகார் தந்தது பச்சைக்கிளி.
”நீ பறந்து போ! நான் பின்னாடியே வந்துடறேன்!”
மாந்தோப்புக்குள் நுழைந்த அமிர்தா கண்ட காட்சி…
ஒரு குட்டி அணில் அங்குமிங்கும் தாவி மரங்களில் ஏறி ஒவ்வொரு பழத்தையும் கடிப்பது, கீழே போடுவது என்று செய்தது.
”அணிலே! அணிலே! என்ன பன்றே? நீ உணவை வீணாக்கலாமா?
”பஞ்சாயத்து அக்கா அமிர்தாவா? வந்துட்டியா? அக்கா நான் சொல்றதைக் கேளுக்கா!" என்றது குட்டி அணில்.
”ஒரு நாள் ஊருக்குள்ள தலைக்காட்டும் போது, 'டேய்! இந்த மாம்பழம் நல்லா ருசியா இருக்குடா! ஆனா ஒரு பக்கம் கடிச்சு இருக்கே!' என்றான் ஒரு சிறுவன்.
அதற்கு மற்றொரு சிறுவன்! டே'ய் அந்த மாம்பழம் அணில் கடிச்சதா இருக்கும்டா. அதனாலதான் அவ்வளவு ருசி.. எங்கம்மா எனக்கு சொல்லி இருக்காங்க' என்றான்.
ஒவ்வொரு பழமா கடிச்சு கடிச்சு வைச்சா இந்த மாம்பழம் எல்லாம் ருசியா இருக்குன்னு சிறுவர்கள் ஆசையா சாப்பிடுவாங்க.. அதனாலதான் இப்படி செய்யறேன்” என்று தனது தரப்பு வாதமாக எடுத்து வைத்தது.
"சரி.. சரி.. கீழே இறங்கி வா! மேலே இருந்துகிட்டே பதில் சொன்னா எப்படி?"
”இதோ இறங்கிட்டேன்! என்னக்கா சொல்லு கேட்டுக்கறேன்!" என்றது அணில்.
“இந்த பச்சைக்கிளி உன் மேல புகார் கொடுத்திருக்கு!”
“என்ன புகார்க்கா?"
”ஒரு மரத்துல இருக்குற மாம்பழத்தை மட்டும் கடிச்சு தின்னாம எல்லா மரத்து மாம்பழத்தையும் கடிச்சு வீணாக்கி விடுறீயாம்! அதான் புகார்."
”அக்கா! இவ்வளவு பெரிய தோப்புல எத்தனை மரங்கள் இருக்கு! நான் சில மரத்துல மாம்பழத்தை கடிச்சா.. அதை விட்டுட்டு வேற மரத்துல இருக்குற மாம்பழத்தை இந்த பச்சைக்கிளி சாப்பிடாம்ல!"
”ஆமாம்ல்ல! நீ சொல்றது சரிதான்! கிளியே உனக்கு பறக்க முடியும் எவ்வளவு தொலைவுன்னாலும் பறந்து போகலாம். மரத்துல இருக்கிற மாம்பழத்தைச் சாப்பிடலாம். ஆனா இந்த சின்ன அணில் எல்லா மரத்து மேலேயேயும் தாவி தாவி ஏற முடியாதுல்ல! அதனால இந்த சின்ன அணில் இருக்குற மரத்தை விட்டுட்டு வேற மரங்கள்ல இருக்கிற மாம்பழத்தைச் சாப்பிட்டுக்கோ! செல்லம்” என்றாள் அமிர்தா!
”சரிக்கா நீ சொல்றபடியே கேட்டுக்கறேன்” என்று கூறியபடியே வேறொரு மரத்தில் இருக்கும் மாம்பழத்தைப் பார்த்து கடிக்க பார்த்தது.
அந்த மாம்பழம். ஏற்கனவே கடிக்கப்பட்டிருந்தது.
”அக்கா! இந்த மரத்துல இருக்கிற மாம்பழமும் கடிச்சுதான் இருக்கு!" என்ற மரத்தில் இருந்தவாறு குரல் கொடுத்தது.
”ஹா ஹா!ஹா... அந்த மரத்துல இருக்குற மாம்பழத்தையும் நாந்தான் கடிச்சு வைச்சேன். அணில் கடிச்ச மாம்பழம் ருசியா இருக்கும்ல... சாப்பிடலாம்ன்னு சொல்லுக்கா” என்றது சின்ன அணில் சிரித்தபடியே...
”சரி ! சரி என்று கூறி விட்டு மாம்பழத்தைக் கொத்தி சாப்பிட்டது பச்சைக்கிளி.
”அட! அணில் கடித்த மாம்பழம் ருசியாத்தான் இருக்குக்கா!" என்றது பச்சைக்கிளி!
”எப்படியோ! சந்தோஷமா இருந்தா சரி” என்று சொல்லி விட்டு வீட்டிற்கு திரும்பினாள் அமிர்தா!.