
“நானொன்றும் அக்கா தங்கை, அண்ணன் இல்லாதவளில்லை. அநாதையில்லை”. குழந்தை மலர் அழுதது.
டீச்சர் நீலா மற்ற குழந்தைகளை திட்டினாள்.
“எட்டு வயசு தானாகுது உங்களுக்கெல்லாம்! அதுக்குள்ளே கூடப்படிக்கிற குழந்தையை கிண்டலடிக்கிற அளவுக்கு ஆயிட்டீங்களா? ஸாரி சொல்லுங்க எல்லாரும்.”
“ஸாரிடி மலர்...” என்று கோரஸ்ஸாய் சத்தமிட்டனர்.
“தட்ஸ் த ஸ்பிரிட்” என்ற டீச்சர், "மலருக்கு அண்ணன் அக்கா தங்கை இல்லாட்டாலும் மாமா, மாமி, பாட்டி இருக்காங்க,” என்றாள்.
“இல்லை. எனக்கு அக்கா தங்கை அண்ணன் இருக்காங்க,” என்றாள் மலர்.
“அப்படியா? குட்.“
“இல்லை. பொய். அக்கா தங்கை அண்ணன் இல்லை...” மற்ற குழந்தைகள் கத்த,
“இருக்காங்க...” மலரும் கத்தினாள்.
“அப்படின்னா அவங்க ஏன் ஒரு நாள் கூட ஸ்கூலுக்கு வரலை?”
“அவங்களாலே வர முடியாது.”
“ஏன் நொண்டியா? “
“இல்லை” குழந்தை அழ,
“பின்னே.. ஃபோனில் பேசச்சொல்லு”
“அவங்க பேசமாட்டாங்க”
“அப்ப, ஊமையா?”
“இல்லை“ மலர் அழ,
டீச்சர் வந்து “இன்னும் நிறுத்தலையா நீங்க?” கோபமாய் கேட்க,
“டீச்சர் இவளோட அக்கா, தங்கை, அண்ணன் நடக்கமாட்டாங்களாம், பேசவும் மாட்டாங்களாம்.”
“நீங்க நம்பலைனா எங்க வீட்டுக்கு வந்து பாருங்க.”
“சரி எப்ப வரட்டும்?”
“சாயங்காலமே வாங்க. டீச்சர் நீங்களும் வாங்க. எங்க அண்ணன் பழம் தருவார். அக்கா தங்கை பூ தருவாங்க.”
“ரொம்ப முக்யம்.”
“வாங்க டீச்சர். எங்க மாமா ரொம்ப நல்லவரு...” மலர் அழுது அடம் பிடிக்க, “சரி அழாதே! நானும் குழந்தைகளோட வரேன்.”
“ரொம்ப தேங்க்ஸ்.”
“மூஞ்சியை உம்னு வைச்சுக்காதே சிரி. அப்பத்தான் வருவோம்,” டீச்சர் சொல்ல,
“ஈஈஈஈஈஈஈ……………..” என்று சிரித்தது குழந்தை.
டீச்சர் நீலா குழந்தைகளுடன் வர, “வாங்க, வாங்க” என்று வாய் நிறைய வரவேற்றார் மாமா.
“என்ன சாப்பிடறீங்க? ஹார்லிக்ஸ், பூஸ்ட், போர்ன்விடா?”
“எது வேணா தாங்க” என்ற டீச்சர், “மலர் இப்படி வாம்மா” என்று ஸ்வீட் பாக்ஸை நீட்டினாள்.
“சொல்லுங்க. நான் உங்களுக்கு என்ன செய்யனும்?” மாமா கேட்டார்.
"நாங்க மலரோட அண்ணன், அக்கா, தங்கையை பார்க்க வந்தோம். அவங்க பேசமாட்டாங்களாம், எங்கேயும் வரமாட்டாங்களாம். ஆனால் பாசமா இருப்பாங்களாம். பூ, பழம் தருவாங்களாம். அவங்களை பார்க்கலாமா?” நீலா டீச்சர் கேட்க,
மெல்ல சத்தமின்றி நகைத்தார் மாமா.
மலர் மாமாவிடம் “ஓகே தானே?” என்று கேட்க,
“வாங்க பாக்கலாம்,” என்றார் மாமா.
தோட்டத்திற்கு கூட்டிவந்து “இந்த வாழை மரம், தென்னை மரங்கள் தான் மலரோட அண்ணன். பழம் தரும். ரோஜாச்செடி அக்கா பூக்களை தரும், மல்லிகைச் செடி மலர் தரும். ரொம்ப பாசமா இருப்பாங்க இதெல்லாம் மலரோட அம்மா வைச்சது. இதையெல்லாம் தன்னோட பிள்ளைகள்னு அடிக்கடி சொல்வா! வாழை மரம், தென்னை மரங்கள், ரோஜாச்செடி... மலர் பிறக்குமுன் வைச்சா... அதனாலே மலரோட அக்கா, அண்ணன். மல்லிகைச் செடியை மலர் ஒரு வயதா இருக்கும் போது வைச்சா. அதனால் தங்கைனு சொல்லிச்சொல்லி வளர்த்தா. மலருக்கு 2 வயசா இருக்கும்போது மலரோட அம்மா செத்துட்டா!” கண்கலங்கினார் மாமா.
“எவ்வளவு அழகா நம்ம வீட்டுத்தோட்டத்தில் இருக்கும் மரங்களும் செடிகளும்கூட நம் உடன்பிறப்புகள்தான்னு புரியவைச்சுட்டாங்க!” கண்கலங்கினாள் நீலா டீச்சர்.
“எங்க வீட்டிலும் இதேமாதிரி அக்கா, அண்ணன், தங்கச்சி உண்டே,” என குழந்தைகள் மகிழ,
ஒரே ஒரு குழந்தை கலாமட்டும் “எங்க வீட்டிலே தோட்டமே இல்லை,” என்று வருத்தப்பட்டது.
“இந்தா உனக்கும் ஒரு தங்கை...” என்று பூந்தொட்டி ஒன்றை பரிசளித்தார் மாமா.