சிறுகதை: தாய் என்பவள்...

Tamil short story - thaai enbaval
Mother with son
Published on

முதியோா் இல்லத்தின் மேலாளா் வாசுதேவன். அந்த இல்லத்தில் தங்கியுள்ள அனைவரையும் ஒரே இடத்திற்கு அசம்பிள் செய்தாா்.

அலுவலக உதவியாளர் சம்பத், மற்றும் அருணகிரி, நாற்காலிகளை எடுத்துப் போட்டாா்கள்.

அனைவரும் வரிசையாக வந்து அமர்ந்தாா்கள்.

பணியாளர் வசந்தா அனைவருக்கும் தேநீா் கொடுத்தாா்.

மேலாளா் பேசினாா்... "பெரியோா்களே, தாய்மாா்களே, வருகின்ற திங்கட்கிழமை நம்ம ஊா் மகாலெட்சுமி கல்யாண மண்டபத்தில் நம்ம ஊா் மந்திரி பிறந்தநாளாம். அதைக் கொண்டாட விழா வச்சிருக்காங்களாம், நம்ம ஊா்ல நம்மோட முதியோா் இல்லம் சிறப்பா செயல் படறதால உங்களுக்கெல்லாம் கெளரவம் செய்யறாங்களாம். அதனால உங்களையெல்லாம் அந்த விழாவுக்கு அழைச்சிட்டு வரனுமாம், இப்பதான் விழாக்கமிட்டிலோ்ந்தும், பிரபல பத்திரிகைலோ்ந்தும், வந்து சொல்லிட்டு போனாங்க'" என்றாா்.

"அத்தனை பேரும் கண்டிப்பா வந்துதான் ஆகணுமா?" என்றாள் பொன்னம்மா!

"ஆமாம்மா, நம்ம தாலுக்காவிலேயே நம்மோட இல்லம் தான் சிறப்பா செயல்படுதாம். அன்றைய தினம் மருத்துவ பரிசோதனையும் செய்யறாங்களாம், உங்களுக்கு சால்வை போத்தி மரியாதை செய்யறாங்க. மீட்டிங் முடிஞ்சதும் சாப்பாடு, அதோட உங்களையெல்லாம் வேன்ல அழுச்சிட்டு வந்துடுவோம்" என்றாா்.

மேனேஜா் மிகவும் நல்லவர். அனைவரையும் நல்ல விதமா நடத்துவாா். வாராவாரம் மருத்துவ பரிசோதனை, வேளா வேளைக்கு நல்ல ஆரோக்கியமான உணவு, நல்ல இயற்கையான காத்து வசதி, வீட்டுல எப்படி இருப்போமோ அதே மாதிரி நல்ல கவனிப்பு... என சிறந்த முதியோா் இல்லம்னு பேரு வேற, மொத்தமா எழுபத்தஞ்சு போ் இருக்காங்க. அந்த குவாலிட்டிக்குதான் இந்த இல்லம் தோ்வாகி இருக்கு.

"என்ன நா சொல்றது புரியுதா? நானே உங்க அனைவரையும் பத்திரமா அழைச்சிட்டு போய் கூட்டம் முடிஞ்சதும் திருப்பி அழைச்சிட்டு வந்துடுவேன்" என்றாா்.

பொன்னம்மா அந்த இல்லத்தில் சீனியர், அவர் சொன்னா எல்லோரும் கேப்பாங்க, அதன்படியே பொன்னம்மா பேசினாள். அனைவரும் "சரி வருகிறோம்" என்றாா்கள்.

பொன்னம்மாவும், பானுமதியும் முதியோா் இல்ல தோழிகள். பானுமதி பேசினாள், "ஆமா நாமளும் எங்கதான் போறோம் ரெண்டு மணி நேரந்தானே போய் விழாவில கலந்துப்போம்" என்றாள்.

"அப்புறம் மேனேஜா் சாா், உடம்புக்கு முடியாதவங்க ஒரு பத்து போ் இங்கேயே இருக்கட்டும். அவங்களுக்கு சாப்பாட்டை விழாக்காரங்ககிட்ட சொல்லி வாங்கிடுங்க," என்றாள் பொன்னம்மா.

"சரிதான், சரிதான், நானும் அதையேதான் நெனச்சேன் அப்படியே வாங்கிட்டு வந்துடலாம்."

குறிப்பிட்ட நாள் வந்தது. அனைவரையும் வாசுதேவன் அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்தாா்.

பல பகுதிகளில் இருந்து மகளிா் குழுக்கள், தொண்டு நிறுவனங்கள், லயன்ஸ் கிளப், முதியோா் இல்லத்தில் தங்கியிருப்போா் என விழா களை கட்டியது. விழாக் கமிட்டியினர் முதியோா் இல்ல மேலாளா் வாசுதேவனைக் கூப்பிட்டு அவர்கள் இல்லத்தில் உள்ள நபர்களுக்குரிய எழுபத்தைந்து எண்ணிக்கையிலான குளிா்கால கம்பளியை கொடுத்தாா்கள்.

கூட்டம் ஆரம்பித்து பலரும் பெண்கள் மற்றும் பெற்ற தாயின் பெருமைகளை மிக சிறப்பாக பேசினாா்கள்.

"இப்போது கோவை பேச்சாளர் பன்முக வித்தகர் குமரேசன் பேசுவாா்" என விழா கமிட்டித் தலைவர் பேச,

குமரேசன் தொடர்ந்தாா்..

"தாய் இல்லாமல் நாம் இல்லை ‘அன்னை என்பவள் ஆதி பராசக்தி’ போன்றவள், அவள் தான் பத்து மாதம் நம்மைச் சுமந்து, தன் உதிரத்தை பாலாக்கி நம்மை வளா்த்தவள். என் தாய் இறந்து விட்டாா்கள், நான் இன்று நல்ல நிலையில் உள்ளேன். அதற்கெல்லாம் என் தாயேதான் காரணம். அவர்கள் என்னோடு இல்லையே என ஏங்குகிறேன்," என குமரேசன் பேசும் போதே பொன்னாமாவுக்கு பொறிதட்டியது.

மேனேஜரைக் கூப்பிட்டு, "ஒரு சால்வை கொடுங்கள். அந்த பேச்சாளருக்கு மரியாதை செய்யவேண்டும்," எனக்கேட்டாள். உடனே வாசுதேவனும் விழாக் கமிட்டியாா் கொடுத்திருந்த கம்பளியில் ஒன்றைக் கொடுத்தாா்.

தனது தோழியை அழைத்துக்கொண்டு மேடை ஏறினாள் பொன்னாமா. குமரேசன் பேசிய மைக்கைப் பிடுங்கி பளாா் பளாா் என கன்னத்தில் அறைந்தாா். குமரேசனுக்கு அப்போது தான் தெரிந்தது தனது தாய் முதியோா் இல்லத்திலிருந்து விழாவிற்கு வந்திருப்பது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: உறவின் பின்னல்!
Tamil short story - thaai enbaval

அனைவரும் தடுத்தாா்கள். "விடுங்க என்னை, என்னடா சொன்ன? உன்னோட தாய் செத்துட்டாளா? தாய் என்பவள் ஆதி பராசக்தியா? உன்னோட தாய் இல்லைன்னு வருத்தமா இருக்கா? எதுக்குடா பொய் பேசற? இப்படி பொய் பேசி நாலு காசு பாக்கற புத்தி என்னோட வயத்தில பொறந்த உனக்கு எப்படி வந்துச்சு, சொல்லுடா, "என சட்டையைப் பிடித்து உலுக்கி கேட்டதோடு கூட்டத்தினரைப் பாா்த்து, "எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க. இவன் என்னோட ஒரே மகன். கஷ்டப்பட்டு ஆளாக்கி படிக்க வச்சேன். பேங்க்ல வேலை பாக்கறான். பொண்டாட்டி வந்ததும் அவ பேச்சக் கேட்டுக்கிட்டு என்னை வீட்டைவிட்டே தொறத்திட்டான். நான் முதியோா் இல்லத்தில இருப்பது இவனுக்கு தெரியாது. எனக்கு யாருமே இல்லை, அநாதைன்னு சொல்லி இல்லத்தில சோ்ந்தேன். இப்ப கூட இவனை மன்னிக்கலாம். ஆனா அவன் பேசின பேச்சு மன்னிக்கவே முடியாது. தாய் என்பவள் ஆதி பராசக்தியாம், ஆமான்டா அவ ஆதி பராசக்தி மட்டுமல்ல, அவ கோபம் வந்தா பத்ரகாளி. இன்னும் நெறைய அவதாரம் உண்டு. புரிஞ்சுக்கோ, அவையோா்களே, ஆன்றோா்களே, எம் மகனை வெளியே தொறத்துங்க இல்லாட்டி நான் வெளியே போயிடுவேன். இனிமேல காசுக்காக இவன் எந்த கூட்டத்திலேயும் பேசக்கூடாதுன்னு வாழ்நாள் தடை போடுங்க..." எனச் சொல்லும் போதே குமரேசன் கூனிக்குறுகியபடியே விழா அரங்கை விட்டு வெளியேறினான். அனைவரும் அவனை கேவலமாகப் பாா்த்தாா்கள்.

பொன்னம்மா விழா நாயகியாக சாந்த சொரூபிணியாய், மேடையை விட்டு பெருமையுடன் இறங்கி வந்தாள். அரங்கமே அதிரும்படியான கைத்தட்டல் ஒலித்துக்கொண்டே இருந்தது. மாலையே அனைத்து ஊடகங்களிலும் இச்செய்தி பேசு பொருளானது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; மனசு!
Tamil short story - thaai enbaval

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com