

ஹலோ குட்டீஸ்!
முந்தைய பாடத்தில் முதலெழுத்துகள் மற்றும் சார்பெழுத்துகளில் உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை பற்றி பார்த்தோம். இந்தப் பதிவில் மீதமுள்ள சார்பெழுத்துக்கள் வகைகளான குற்றியலுகரம் மற்றும் குற்றியலிகரம் குறித்து அறிந்துகொள்வோமா?
குற்றியலுகரம்:
குழந்தை, வகுப்பு, பசு ஆகிய சொற்களைச் சொல்லிப் பாருங்கள். மூன்று சொற்களிலும் 'உ' என்னும் எழுத்தை உச்சரிப்பதில் வேறுபாடு இருப்பதை உணரலாம். அவ்வெழுத்து சொல்லின் முதலிலும் இடையிலும் வரும்போது முழுமையாக ஒலிக்கிறது. சொல்லின் இறுதியில் வரும்போது ஒரு மாத்திரைக்குப் பதிலாக அரை மாத்திரை அளவே ஒலிக்கிறது. கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுதியில் வரும்போது, ஒரு மாத்திரைக்குப் பதிலாக அரை மாத்திரை அளவே ஒலிக்கும். இவ்வாறு தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும்.
குறுமை + இயல் + உகரம் = குற்றியலுகரம்.
(எ.கா.) காசு, எஃகு, பயறு, பாட்டு, பந்து, சால்பு
குற்றியலுகரத்தின் வகைகள்:
குற்றியலுகரம் தனக்கு முன் உள்ள எழுத்தைக் கொண்டு ஆறு வகையாகப் பிரிக்கப்படும்.
1. நெடில்தொடர்க் குற்றியலுகரம்:
தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் 'நெடில் தொடர்க் குற்றியலுகரம்' எனப்படும். இவை ஈரெழுத்துச் சொற்களாக மட்டும் அமையும்.
(எ.கா.) பாகு, மாசு, பாடு, காது, ஆறு.
2. ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்:
ஆய்த எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் 'ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்' எனப்படும்.
(எ.கா.) எஃகு, அஃது
3. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்:
தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் 'உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்' எனப்படும்.
(எ.கா.) அரசு (ர = ர் + அ)
கயிறு (யி = ய் + இ)
ஒன்பது (ப = ப் + அ)
வரலாறு (லா = ல் + ஆ)
4. வன்தொடர்க் குற்றியலுகரம்:
வல்லின (க், ச், ட், த், ப், ற்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் 'வன்தொடர்க் குற்றியலுகரம்' எனப்படும்.
(எ.கா) பாக்கு, பேச்சு, பாட்டு, பத்து, உப்பு, பற்று
5. மென்தொடர்க் குற்றியலுகரம்:
மெல்லின (ங், ஞ், ண், ந், ம், ன்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் 'மென்தொடர்க் குற்றியலுகரம்' எனப்படும்.
(எ.கா.) பங்கு, மஞ்சு, பண்பு, பந்து, அம்பு, கன்று
6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்:
இடையின (ய், ர், ல், வ், ழ், ள்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் 'இடைத்தொடர்க் குற்றியலுகரம்' எனப்படும்.
(எ.கா.) எய்து, மார்பு, சால்பு, மூழ்கு
குற்றியலிகரம்:
வரகு+யாது - இந்த இரு சொற்களையும் சேர்த்து விரைவாக ஒலித்துப் பாருங்கள். வரகியாது என ஒலிப்பதை அறியலாம். முதல் சொல்லின் இறுதியில் உள்ள 'கு' என்னும் எழுத்து 'கி' என்று ஒலிக்கிறது. அதுவும் முழுமையாக ஒரு மாத்திரை அளவில் ஒலிக்காமல், அரை மாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கிறது. இவ்வாறு தன் ஒரு மாத்திரை அளவில் குறுகி ஒலிக்கும் இகரம் 'குற்றியலிகரம்' எனப்படும். குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம்.
குற்றியலிகரம் இரண்டு இடங்களில் மட்டும் வரும்.
முதல் இடம்:
குற்றியலுகரச் சொற்களைத் தொடர்ந்து யகரத்தை முதல் எழுத்தாகக் கொண்ட சொற்கள் வரும்போது குற்றியலுகரத்தில் உள்ள உகரம் இகரமாக மாறும். அந்த இகரம் தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும்.
(எ.கா.) கொக்கு + யாது = கொக்கியாது (க் + உ) (க்+ இ)
தோப்பு + யாது = தோப்பியாது (ப் + உ) (ப் + இ)
நாடு + யாது = நாடியாது (ட்+ உ) (ட் + இ)
எனப்படுவது + யாது = எனப்படுவதியாது (த் + உ) (த் + இ)
இரண்டாம் இடம்:
'மியா' என்பது ஓர் அசைச்சொல் (ஓசை நயத்திற்காக வருவது). இதில் 'மி' யில் (மி = ம் + இ ) உள்ள இகரம் குற்றியலிகரமாகும்.
இது சொற்களில் இடம்பெறும் போது தனக்குரிய மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும்.
(எ.கா.)
கேள் + மியா = கேண்மியா
செல் + மியா = சென்மியா
குற்றியலிகரம் தற்போது உரைநடை வழக்கில் இல்லை. இலக்கியங்களில் மட்டுமே உள்ளது.
குற்றியலுகரம், குற்றியலிகரம் இவைகளை தவிர்த்து புதிதாக முற்றியலுகரம் என்ற ஒன்றும் இருக்கிறது. இவற்றைப் பற்றி தெரிந்து கொள்வதும் நமக்கு கூடுதல் சிறப்பாக இருக்கும்.
முற்றியலுகரம்;
தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள் ஒரு மாத்திரை அளவுக்கு முழுமையாக ஒலிக்கும். வல்லினம் அல்லாத உகரங்கள் எப்போதும் முழுமையாகவே ஒலிக்கும். இவ்வாறு ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை முற்றியலுகரம் என்பர்.
(எ.கா.) புகு, பசு, விடு, அது, வரு, மாவு, எழு
எழுத்துகளை ஒலிக்கும் போது தனக்குரிய மாத்திரை அளவில் இருந்து குறுகி ஒலிப்பதால் குற்றியலுகரமும் குற்றியலுகரமும் பிறக்கின்றன என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
குட்டீஸ்! இன்று நாம் குற்றியலுகரம், குற்றியலிகரம் மற்றும் முற்றியலுகரம் பற்றிய பல சுவாரஸ்யமான விஷயங்களை அறிந்துகொண்டோம் அல்லவா? எழுத்துகள் ஒலிக்கும் விதத்தில் இருக்கும் சிறிய வேறுபாடுகளுக்குக் கூட தமிழில் தனிப்பட்ட பெயர்களும் விதிகளும் இருப்பது நம் மொழியின் சிறப்பு. இவற்றை சரியாகப் புரிந்துகொண்டால் தமிழை இனிமையாகவும் தெளிவாகவும் பேசவும் எழுதவும் முடியும்.
அடுத்த பதிவில் மீதமுள்ள சார்பெழுத்துக்களின் வகைகள் குறித்து விரிவாகப் பார்ப்போமா குட்டீஸ்?
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here