செல்லங்களா... கொஞ்சும் தமிழ் கற்போமா? பாடம் 1

Tamil grammar tips
Tamil grammar tips Img credit: AI Image
பெ. சிவக்குமார்

வணக்கம்!  என்னுடைய பெயர் பெ.சிவக்குமார். விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள குலசேகரநல்லூர் என்னும் குக்கிராமத்தில் இருந்து எழுதி வருகிறேன்.நான் பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே தமிழ் மொழியில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. கல்லூரிக்கு வந்த பிறகு தான் கவிதை, கட்டுரை, சிறுகதை போன்றவைகளை  எழுத சிறப்பாகக் கற்றுக் கொண்டேன்.  கவிதை, கட்டுரை, சிறுகதை போன்ற எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொண்டு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பல பரிசுகளைப் பெற்றுள்ளேன். என்னுடைய எழுத்துகள் எப்பொழுதும் வாசகர்களின் மனதில் “பசுமரத்தாணி போல” பதியுமாறுதான் எழுதுவேன்.  என்னுடைய படைப்புகள் அனைத்தும் கரிசல் மண் சார்ந்தவைகளாக இருக்கும். என்னுடைய படைப்புகளை வெளியிடும் கல்கி குழுமத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

Updated on

வணக்கம் குட்டீஸ்! உங்களுக்குத் தமிழில் கதை, கவிதை எழுதுவதில் ஆர்வம் உண்டா? அவ்வாறு எழுதும்போது எழுத்துப்பிழை ஏற்படுகிறதா? கவலைய விடுங்க! இந்தக் கட்டுரையில் தமிழைப் பிழையின்றி எழுதுவது எப்படி என தெரிஞ்சுக்கலாம் வாங்க..!

மரபுப் பிழை, சந்திப்பிழை, ஒற்றுப்பிழை, காலப்பிழை, ஒருமை பன்மை பிழை, மயங்கொலிப் பிழை போன்ற பலவிதமான பிழைகள் உள்ளன. மேலும், தமிழ் இலக்கணங்களில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்து வகை இலக்கணங்கள் இருக்கின்றன. இவற்றை முறைப்படி நாம் எழுத்துகளில் பயன்படுத்தி எழுதினால் நம்முடைய எழுத்து பிழையில்லாமலும் வாசிப்பதற்கு சிறப்பாகவும் இருக்கும். 

தப்பில்லாமல் எழுத சில வழிமுறைகளைக் கற்றுக்கொள்ளலாமா?

மயங்கொலிப் பிழைகள்:

மரம் - மறம் 

இந்த இரண்டு சொற்களுக்கும் இடையே பொருள் வேறுபாடு உள்ளது. 'மரம்' என்பதற்கு 'வீட்டில் இருக்கும் மரம்' என்பது பொருளாகும். மற்றொரு 'மறம்' என்பதற்கு 'வீரம்' என்பது பொருள். இவ்வாறு உச்சரிப்பில் சிறிதளவு மட்டும் வேறுபாடு உள்ள ஒலிகளை மயங்கொலிகள் என்று நாம் கூறுகிறோம். வாருங்கள்..! மேலும், சில மயங்கொலிப் பிழைகளைப் பார்க்கலாம். 

1. ண, ன, ந:

  • ண (டண்ணகரம்): 'ட' என்ற எழுத்துக்குப் பக்கத்தில் எப்போதும் 'ண' தான் வரும். எ.கா: வண்டி, கண்டம். நாவின் நுனி மேல் வாய் அண்ணத்தின் நடுப்பகுதியை தொடுவதால் 'ணகரம்' பிறக்கிறது.

  • ந (தநகரம்): 'த' என்ற எழுத்துக்கு முன்னாடி 'ந' வரும். எ.கா: பந்து, ஆந்தை. நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதியைத் தொடுவதால் 'நகரம்' பிறக்கிறது.

  • ன (றன்னகரம்): 'ற' என்ற எழுத்துக்கு முன்னாடி 'ன' வரும். எ.கா: கன்று, நன்றி. நாவின் நுனி மேல் வாய் அண்ணத்தின் முன் பகுதியைத் தொடுவதால் 'னகரம்' பிறக்கிறது.

2. ல, ழ, ள:

  • ல: இதைப் பேசும்போது நாக்கு பல்லின் அடியைத் தொடணும். எ.கா: பல்லி. இது எழுத்து ‘வ’ போன்று இருப்பதால் 'வகர லகரம்' என்று கூற வேண்டும். 

  • ள: நாக்கை மடித்து அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடணும். எ.கா: பள்ளி. இது 'எழுத்து பொது ளகரம்' என்றும் அழைக்கப்படுகிறது.

  • ழ: இதுதான் நம் தமிழின் 'சிறப்பு ழகரம்'. நாக்கை நன்றாக மடித்துச் சொல்ல வேண்டும். எ.கா: தமிழ், பழம்.

இதையும் படியுங்கள்:
விளையும் பயிர் முளையிலேயே தெரியும்! வல்லபாய் பட்டேலின் மாணவப் பருவம்!
Tamil grammar tips

பொருள் வேறுபாடுகள்: 

  1. விலை - ஒரு பொருளின் காசு.

  2. விளை - செடி வளர்வது.

  3. விழை - ஆசைப்படுவது.

3. ர, ற:

  • ர: இது 'இடையின ரகரம்'. லேசாகச் சொன்னால் போதும். நாவின் நுனி மேல் அண்ணத்தில் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் 'ரகரம்' தோன்றுகிறது. எ.கா: ஏரி - குளம்.

  • ற: இது 'வல்லின றகரம்'. கொஞ்சம் அழுத்திச் சொல்ல வேண்டும். நாவின் நுனி மேல் அண்ணத்தில் மையப் பகுதியை உரசுவதால் 'றகரம்' தோன்றுகிறது. எ.கா: ஏறி - மேலே ஏறுவது.

பொருள் வேறுபாடுகள்: 

ஏரி -  நீர் நிலை 

ஏறி - மேலே ஏறுதல் 

கூரை - வீட்டின் கூரை 

கூறை -  புடவை

இந்த எட்டு எழுத்துகளும் மயங்கொலி எழுத்துகளாகும்.

'ஒரு' வருமா? 'ஓர்' வருமா?: 

  • அடுத்த வார்த்தை அ, ஆ, இ, ஈ... போன்ற உயிரெழுத்தில் தொடங்கினால் 'ஓர்' போட வேண்டும். எ.கா: ஓர் ஊர், ஓர் அணில்.

  • அடுத்த வார்த்தை க, ச, த, ப... போன்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கினால் 'ஒரு' போட வேண்டும். எ.கா: ஒரு காடு, ஒரு சிங்கம்.

இலக்கணம் என்பது தமிழுக்கு ஒரு அழகான ஆபரணம் போன்றது. இந்தச் சின்னச் சின்ன விஷயங்களைக் கவனித்து எழுதினால், உங்கள் எழுத்துக்கள் முத்து முத்தாக ஜொலிக்கும். புரிந்ததா குட்டீஸ்..! இனி தமிழைத் தப்பில்லாமல் எழுதுவோம்...! தடையின்றிப் பேசுவோம்..!

logo
Kalki Online
kalkionline.com