சிறுவர் சிறுகதை: டெங்கு மன்னன் 65-ம் கொசு இராஜ்யம்!

சிறுவர் சிறுகதை: டெங்கு மன்னன் 65-ம் கொசு இராஜ்யம்! ஒரு நகைச்சுவையான சிறுகதை
சிறுகதை | Mosquitos
சிறுகதை | MosquitosImage credit: Chatgpt
கே. அசோகன்

கவிஞர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் . மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வழங்கிய சிந்தனை செம்மல் திருவிக பேச்சரங்க திருவிக விருது தமிழக ஜோக் எழுத்தாளர்கள் குழும விருது வெளியிட்டுள்ள நூல்கள் அம்மா , சின்னசைக்காலாஜி நீங்களும் அம்பானிதான் தமிழ் இந்துவில் சிறுவர் கதைகள் வெளியானது தொகுப்பு ஆந்தைக்குகையில் இளவரசி, பீட்ஸா சாப்பிட்ட காகம் மற்றும் காதல் முதல் கடவுள் வரை கவிதை ஆகிய நூல்களின் ஆசிரியர்

Updated on: 

டெங்கு மன்னன் 65-ம் கொசு இராஜ்யம்!.. மழைக்காலத்தில் கொசுக்களின் மாநாட்டில் நடந்த சுவாரஸ்யமான விவாதங்கள், புதிய சதித் திட்டங்கள் மற்றும் மாநகராட்சி நடவடிக்கையால் மாறிய கொசு ராஜ்யம் பற்றிய ஒரு நகைச்சுவையான சிறுவர் சிறுகதை.. படித்து மகிழுங்கள்..

முக்கியமான கூட்டத்தில் கலந்து கொள்ளவும். நம்மை அழிக்க திட்டம் போடுகிறார்கள். அதைக் கிள்ளியெறிய வேண்டும். ஆலோசனைகள் அள்ளி வழங்க தவறாமல் வரவும்.

பிட் நோட்டிஸ் விநியோகிக்கப்பட்டது.

கூட்டம் நடத்தும் அரங்கில் நாற்காலிகள் போடப்பட்டிருந்தது.

தலைமை விருந்தினராக; டெங்கு மன்னன் 64-ஆம் கொசு கம்பீரமாக மூக்கை முன்னால் துருத்திக்கொண்டு அமர்ந்திருக்கிறார்.

"ஹும், ஆலோசனைகளை அள்ளி வழங்குக...” மேடையில் அறிவிப்பு

ஒலிப்பெருக்கி வாயிலாக, கொய் சத்தத்துடன் ஒலிக்கப்பட்டது.

"சிறந்த ஆலோசனை வழங்குபவர்களுக்கு ஓ பாஸிட்டிவ் ரத்தம் இரண்டு பாட்டில்கள் வழங்கப்படும். அதை அப்படியே உறிஞ்சும் குடிக்கலாம். அல்லது ஸ்ட்ரா போட்டும் மெதுவாகவும் குடிக்கலாம்."

“இதுதான் நமக்கு சரியான காலம், மழைக்காலத்தில்தான் நம்மினத்தைப் பெருக்கிக்கொள்ள முடியும், சந்தர்ப்பத்தை வீணாக்கி விடக்கூடாது காலம் பொன் போன்றது; கடமை கண் போன்றது.  இந்தப் பழமொழி மனிதர்களுக்கு மட்டுமல்ல. நமக்கும்தான். எனவே, நாம் எல்லோரும், மழைப்பெருகி வெள்ளமாக வர வேண்டும். அப்படி வந்தால்தான், அங்காங்கே தேங்கி நிற்கும் வாய்ப்புள்ளதால், இனப்பெருக்கத்திற்கு ஆதரவாய் இருக்கும்” என்றது.

இரண்டாவது எழுந்த கொசு ”மழைப் பெருகினால் மட்டும் போதாது, அங்காங்கே குண்டும் குழியுமாக இருந்தால்தான், அதில் தண்ணீர் தேங்க வாய்ப்பு ஏற்படும்.

ஆகையால், தொலைபேசி ஊழியர்கள், மின்சார ஊழியர்கள், கேபிள் புதைப்பவர்களுக்கு மற்றும் நெடுஞ்சாலை போடுபவர்கள் ஆகியோருக்கு ஆதரவாக அவர்களை கடிக்காமல், மற்றவரை கடிக்கலாம், ரத்தத்தைக் குடிக்கலாம்“ என்றது.

மூன்றாவது எழுந்த கொசு ”இப்போதுள்ள சூழ்நிலையில் யாரும் நம்மைக் கண்டுகொள்ள மாட்டார்கள். ஒரு பக்கம் அரசியல் பிரச்னை, வியாபாரிகளுக்கோ ஜி.எஸ்.டி பிரச்னை, இல்லத்தரசிகளுக்கோ, டி.வி சீரியல் பிரச்னை, சினிமாகாரர்களுக்கு விஜய் முதல்வரா தொடர்வாரா? இல்லை தனுஷ் பக்கம் சாயலாமா என்ற பிரச்னை, இன்ஸ்டா இளவரசிகளுக்கு வியூஸ் அள்ளுமா? அதை வைத்து அமைச்சர் ஆக முடியுமா? என்று… ஆண்களுக்கு எல்லாமே பிரச்னை, ஆதலால் நம்மை பெருக்கி கொள்ள, ”நம்மை ..நாமே” முன்னிறுத்தி முன்னேறுவோம், “வாழ்க கொசு ராஜ்யம்” என்று கோஷமிட்டு அமர்ந்தது.

இப்படி ஒவ்வொன்றாய் கருத்து கூற, கடைசியில் ஒரு கொசு எழுந்திருக்க முடியாமல் தள்ளாடியவாறே… மயக்க நிலையில்… “என்ன நியாயமிது? மண்ணென்னெய் தட்டுப்பாடு இருக்கும்போது அதை மருந்தில் கலந்து என்மீது அடிக்கிறார்கள்.

ஆதலால் என் மீது மண்ணென்னை தெளித்தவர்கள் மீது கொ.ஆ.பரிபாலன சட்டத்தின்படி அவர்களிடமிருந்து விளக்கம் பெற நோட்டிஸ் அனுப்ப வேண்டும்" என்றது.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த டெங்கு மன்னன் 64-ம் கொசு, "பலே, நீங்கள்தான் என் தளபதிகள், நம் ராஜ்யம் வளரட்டும், நமது எல்லைகளைப் பெருக்கி, நம் சந்ததியரை பெருக்குவோம்" என்று வீரமுழக்கப்பட்ட போது…

மாநகராட்சியின் டெங்கு ஒழிப்பு வாகனத்தின் மருந்து புகை அந்த அரங்கில் உள்ளே புகுந்ததில்… டெங்கு மன்னன் 64-ஆம் கொசு மயக்கமுற்றது.

மண்ணெண்ணெய்க்கு மயக்கமான கொசுவார் தெளிவாகி அரங்கத்தைவிட்டு பறந்து… மாநகராட்சி வாகன ஓட்டுநரின் இருக்கைக்குக் கீழே சாம்ராஜ்யத்தைத் துவங்கியது. இனிமேல் அதுதான்டெங்கு மன்னன்  65-ம் கொசு என்று தன்னை அறிவித்துக்கொண்டது.