

அடுத்த பாட வேளைக்கு கணக்கு வாத்தியார் வரப்போவதை நினைத்து, கௌதமிற்கு பயத்தோடு சேர்ந்து வயிறும் கலக்க ஆரம்பித்தது.
இந்தப் பாட வேளையில் தமிழாசிரியர் பாடம் எடுப்பதற்கு ஆர்வம் காட்டாமல், “நானும் உங்கள மாதிரி சின்ன பிள்ளையா இருக்கும் போது…” என்று தனது சொந்த கதையை பேச ஆரம்பித்தார்.
எல்லா மாணவர்களும் ஆசிரியர் பேசுவதை ஆர்வமாக கேட்டார்கள். சொந்தக் கதையில் ஆரம்பித்து படிப்படியாக ஆசிரியரின் பேச்சானது, சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளை எப்படி பெற வேண்டும் என்ற விழிப்புணர்வுக்கும் கதைக்கு போனது.
கணக்கு வாத்தியாரை நினைத்து, கௌதமிருக்கு தமிழாசிரியரின் பேச்சு காதில் விழவில்லை.
இருந்தாலும் கவனிப்பது போல் ஆசிரியரையே பார்த்தான்.
கௌதம் தனது பக்கத்தில் உட்கார்ந்திருந்த நண்பனான மனோவிடம் மெதுவாக, “டேய் மனோ... கணக்கு வாத்தியாரு கொடுத்த வீட்டு பாடத்த போடலடா... இப்ப என்ன பண்றது?”
மனோ பேசத் தொடங்கியதும், தமிழ் ஆசிரியர் அவனை கவனித்தார். பிறகு மனோவை முட்டி போட சொன்னார்.