
டும்.. டும்.. டும்.. டும்..!
“இதனால் சகலவிதமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், அட்டப்பாடி காட்டிலிருந்து, புலி ஒன்று ஊர்களுக்குள் புகுந்துவிட்டது. வனத்துறையினர் தேடுதல் வேட்டையை மேற்கொண்டுள்ளார்கள். ஊர் மக்கள் கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”
"கணேசா புலி..ய பாத்திருக்கியா..டா?"
“பாட புத்தகத்தில் பார்த்ததுதான்"
"நானும் கண்டதில்லை; போய் பார்ப்போமா?"
"எப்போ.. எங்க.. எப்படி?"
"நாளைக்கு.. காட்டுக்குள்ள போயி"
அதற்குள் இரண்டு பெண்மணிகள் குடத்துடன் கடந்து போனார்கள்.
"ஏய் பசங்களா, பள்ளியூடம் போகலையா? இப்ப எத்தனாம் வகுப்பு?"
“ஆறாம் வகுப்பு..க்கா”
"சும்மானாச்சும் ஜோடி போட்டுக்கிட்டு திரியாதீங்க..டா. சீக்கிரம் வீட்டுக்கு போங்க”
இரவு படுத்துக் கொண்டிருந்த போது கணேசன், அம்மாவிடம் கேட்டான், "புலி ஏம்மா ஊருக்குள்ள வருது?"
"நாம பேராசையால மரங்களை வெட்டிப்புட்டோம். பெரிய காடா இருந்தபோது, மிருகங்கள் அதோட தேவைகளையெல்லாம் அங்கேயே பார்த்துகிச்சு. இப்ப மனுஷ மனம்போல, காடும் சுருங்கி போச்சு.
அதனால தண்ணியைத் தேடி, இரையைத் தேடி இங்க வருது. சமூகம் வளமா இருக்கணும்னா, நிலம் மட்டும் நல்லா இருந்தா போதாது கண்ணு, வனமும் நல்லா இருக்கணும்"