
காட்டில் பலவகையான பறவைகள் வசித்து வந்தன. மயில், அணில், குருவி, வான்கோழி, சிட்டுக்குருவி, மைனா, கிளி மற்றும் பல வண்ணமயமான பறவைகள் வசித்து வந்தன. பெரும்பாலான பறவைகள் மரங்களில் கூடு கட்டி வாழ்ந்தன.
சில பறவைகள் புதர்களிலும் கூடு கட்டி வாழ்ந்து வந்தன. இவை காட்டில் கிடைக்கும் பழங்கள், விதைகள், பூச்சிகள், புழுக்கள் போன்றவற்றை உண்டு மகிழ்ந்திருந்தன. சில பறவைகளோ பூக்களிலிருந்து தேனை உண்டு மகிழ்ந்தன.
ஆண் மயில்கள் அழகான தோகையைக் கொண்டு மழை பெய்யும் சமயங்களில் தோகையை விரித்து நடனமாடின. தோகை உள்ள மயில்கள் காட்டில் அதிகம் காணப்பட்டதால், அவை நடனம் ஆடுவதைக் காண மற்ற பறவைகள் ஆவல் கொண்டு அவற்றைச் சுற்றி வந்தன.
அவை நடனமாடும் சமயத்தில் கைதட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்து ஊக்கப்படுத்தின. அவை நடனமாடும் பொழுது ஒவ்வொரு பறவைகளும் ஓடி வந்து அதன் வண்ணமயமான பீலியை, அதாவது தோகையைத் தொட்டுத் தடவிப் பார்த்து மகிழ்ந்தன.
காட்டில் மற்ற பறவைகளுடன் வான்கோழிகளும் கூட்டமாக வசித்து வந்தன. எல்லாப் பறவைகளும் மயிலைப் பாராட்டிப் புகழ்வதைக் கண்டு, தானும் நடனம் ஆடினால் நம்மையும் இவர்கள் கைதட்டிப் பாராட்டுவார்கள் என்று எண்ணின.
மயிலின் ஆட்டத்தைக் கண்டு பொறாமை கொண்ட வான்கோழி, தன்னுடைய சிறகையும் விரித்து ஆட்டம் போட்டது. ஆனால் ஒரு பறவைகளும் இதன் ஆட்டத்தைக் கண்டுகொள்ளவில்லை. 'நம்மை மட்டும் இந்தப் பறவைகள் கைதட்டிப் புகழ மாட்டேன் என்கிறதே!' என்று எண்ணி மனம் புழுங்கின.
ஒரு நாள் காட்டிலுள்ள பறவைகள் எல்லாம் ஒன்றுகூடி மாநாடு நடத்தின. அதில் பறவைகளின் எதிர்கால வளர்ச்சி குறித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டின் முடிவில் கலை நிகழ்ச்சி தொடங்கியது.
அதில் முதல் நிகழ்ச்சியாக மயில் தோகை விரித்து ஆடியது. வண்ணமயமான கண் போன்ற புள்ளிகள் கொண்ட இறக்கைகளாலான பெரிய தோகையை விரித்து ஆடும் பொழுது, எல்லாப் பறவைகளும் ஒன்றுகூடி கைதட்டி ஆரவாரம் செய்தன.
அதன் திறமையைப் பாராட்டிப் பேசிப் பரிசுகளும் வழங்கின. இதைக் கண்ட வான்கோழி தனக்கும் வாய்ப்பு தருமாறு கேட்க, மற்ற பறவைகளும் சம்மதித்தன. ஆட விரும்பிய வான்கோழியோ மேடையில் ஏறிச் சிறகை விரித்தது. வான்கோழி ஆட ஆரம்பித்ததும், அதைக் கண்ட மற்ற பறவைகள் எல்லாம் கேலியாகக் கைதட்டிச் சிரித்தன. அவமானம் தாங்க முடியாமல் வான்கோழி அங்கிருந்து ஓடியது.
ஆசைப்படுவது தவறல்ல. ஆனால் ஆசைக்கேற்ப நம் திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், நான்கு பேர் எதிரில் அவமானப்பட வேண்டி வரும்.
நீதி: இதிலிருந்து என்ன தெரிந்துகொண்டீர்கள் குட்டீஸ்? வெறும் ஆசை மட்டும் இருந்தால் போதாது. அதற்கேற்ப திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.