சிறுவர் சிறுகதை – தெளிவு!

World StoryTelling Day 2024
student watching television...
student watching television...

ர்ஷனுக்கு படுக்கையைவிட்டு எழவே சோம்பலாக இருந்தது. இரவு 12 மணி வரை மொபைலில் கேம் விளையாடிய அசதியால் கண்களையே திறக்க முடியவில்லை. அம்மாவின் குரல் காதுகளில் கேட்டது.

"தர்ஷன் சீக்கிரம் எழுந்திரு... ஸ்கூலுக்கு டைம் ஆகுது பாரு."

சமையலறையில் இருந்து அவனுக்குப் பிடித்த உருளைக்கிழங்கு கறி வாசம் மூக்கைத் துளைத்தது. மெதுவாக கண்களைத் திறந்து கடிகாரத்தைப் பார்த்தான். டைம் 7:30. சரியாக 8:25 மணிக்கு அவன் ஸ்கூல் பஸ் வந்துவிடும். அதற்குள் எழுந்து குளித்து சாப்பிட்டு ..."அடடா.."

அவனுக்குள் சலிப்பு வந்தது. "என்னடா வாழ்க்கை இது? எப்பப் பாரு படிப்பு படிப்புன்னு? தினமும் மொபைல்ல விளையாடிட்டு இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும். எதுக்குத்தான் இந்தப் படிப்பு ஸ்கூலுக்கு போற வேலை எல்லாம் வெச்சாங்களோ தெரியல. இப்ப என்ன படிக்காதவங்க எல்லாம் முன்னுக்கு வராமையா போய்ட்டாங்க. தாத்தாகூட அஞ்சாவதுதான் படிச்சாராம். கிராமத்துல அவர் வெச்சதுதான் சட்டம்..." அவனே அவனுக்குள் பேசிக்கொண்டு மெதுவாக எழுந்து காலைக் கடமைகளை முடித்தான்.

"தர்ஷன் ஹோம் ஒர்க் எல்லாம் முடிச்சிட்டியா இல்ல இன்னும் ஏதாவது பெண்டிங் இருக்கா? இன்னைக்கும் ஏதாவது பனிஷ்மென்ட் வாங்கிட்டு வராத..."அப்பா கணேசன் கால்களில் ஷூவை மாட்டி கூடவே அவனுக்கு அட்வைஸ் செய்தார்.

தர்ஷனுக்கு வெறுப்பாக இருந்தது. "எப்ப பாரு ஹோம் ஒர்க் டார்ச்சர். நானே படிப்புல இன்ட்ரஸ்ட் இல்லாம இருக்கேன். இதுல வேற ஹோம் ஒர்க் வேற இவங்களுக்கு செய்யணுமா?”

எட்டாவது படிக்கும் தர்ஷனுக்கு படிப்பு என்றாலே எட்டிக்காய்போல கசக்கும். அவனின் பெற்றோர் இருவருமே மெரிட்டால் படித்து ஒயிட் காலர் பணிக்குச் சென்று வருபவர்கள். தங்களைப்போல் தங்கள் மகனும் படிப்பில் சுட்டியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.

அம்மா அமுதா லஞ்ச் பாக்ஸ் எடுத்துக்கொண்டு வெளியே வந்தவள் தர்ஷன் இருந்த நிலையைப் பார்த்து டென்ஷனானாள்.

பின்ன இன்னும் கால் மணிநேரத்தில் ஸ்கூல் வேன் வந்துவிடும். இவன் கையில் ரிமோட்டுடன் டிவி முன்னால் இருந்தால்.. டென்ஷன் வராதா என்ன? ஆனால் அதை வெளிக்காட்டாமல்

"என்ன தர்ஷன் ஸ்கூலுக்குப் போகணும் இல்லையா? ஏன் இப்படி அழிச்சாட்டியம் பண்ற? தினம் உன்ன ஸ்கூலுக்குக் கிளம்ப வைக்கிறதுக்குள்ள எங்க உயிரே போகுது. ஏன் புரிஞ்சுக்கவே மாட்டேங்குற? படிப்புதான் முக்கியம். உனக்குப் புரியவே புரியாதா. எத்தனை தடவைதான் சொல்றது? என்னையும் அப்பாவையும் பார். நல்லா படிச்சோம். இப்ப நல்ல வேலையில இருக்கோம் இல்லையா? படிச்சாதான் இந்த உலகம் மதிப்பாங்க. உனக்குப் புரியாதா?”
மெதுவாக ஆரம்பித்து வேலைக்கு செல்லும் டென்ஷனுடன் குரலை உயர்த்திப் பேச ஆரம்பித்து விட்டாள் அமுதா.
"அமுதா, அவன் படிச்சா படிக்கட்டும். விடு. அவனுக்கு நாம சொல்லி ஒன்னும் புரியபோறது இல்ல."

இப்படியே இவர்களுக்குள் வாக்குவாதம் போய்க்கொண்டிருந்தது . "இன்னும் பத்து நிமிஷத்துல நாம கிளம்பி ரெடி ஆகணும். என்னமோ பண்ணிட்டு போகட்டும்" அமுதாவுக்குள் பெரும் டென்ஷன் உட்கார்ந்துகொண்டது.

student watching mobile...
student watching mobile...

இத்தனை களேபரத்திலும்  தர்ஷன் நிதானமாக அமர்ந்து மொபைல் நோண்டிக்கொண்டிருந்தான். அதைப் பார்த்ததும் கணேசனுக்குள் கோபம் வந்து விட்டது. "நீ கேட்டனு போன் வாங்கித்தந்தேன் பாரு…"

அந்த நேரத்தில் "அம்மா" என்ற குரல் கேட்டது. மூவரும் அமைதியாக யார் என்று பார்த்தனர்.

அங்கு தினம் பேப்பர் போடும் சங்கர் நின்று கொண்டிருந்தான். அரசுப் பள்ளியில் படிக்கும் அவனுக்கும் தர்ஷன் வயதே என்பதாலும் இந்த வயதில் இப்படி உழைக்கிறானே என்று அவனை எப்போதும் அமுதாவுக்கு பிடிக்கும்.

"நீங்க கூப்பிட்டிங்கனு சொன்னாங்க..."

"வா சங்கர்.  இதோ உனக்கு புதுத்துணி வாங்கியிருக்கேன். வாங்கிக்கோ.."

சங்கர் தயங்கியபடி "இல்லைம்மா… வேண்டாம். என் அம்மா வீட்டு வேலைக்கும் அப்பா மில்லு வேலைக்கும் போறாங்க. யாரிடமும் எதையும் இலவசமாக வாங்கக்கூடாதுன்னு சொல்லி இருக்காங்க. அது மட்டும் இல்லாம நானும் பேப்பர் போட்டு என்னுடைய படிப்புக்காக சம்பாதிக்கிறேன். அம்மாவும் அப்பாவும் படிக்காததனால படிப்போட மதிப்பு எனக்கு புரியும். என்னோட அம்மாவும் அப்பாவும்கூட ஏன் இப்படி அலைகிறாய் என்று கேட்பாங்க. ஆனாலும் ஒரு நாள்கூட நீ படிச்சுதான் ஆகணும் அப்படின்னு சொன்னது கிடையாது. என் மேல அவ்வளவு நம்பிக்கை அவங்களுக்கு. நீங்களும் ஐயாவும் நல்ல வேலையில இருக்கறதுனாலதானே தர்ஷனுக்கு நல்ல படிப்பு கிடைக்குது. ஓகே ஓகே மா... உங்களுக்கெல்லாம் டைம் ஆச்சு எனக்கும் ஸ்கூலுக்கு போகணும். வரேன்மா." சிட்டாக பறந்து போனான் சங்கர்.

இதையும் படியுங்கள்:
அறியாமைக்கும் அப்பாவித்தனத்திற்கும் நூலிழையே வித்தியாசம்!
student watching television...

அவன் பேச்சைக் கேட்டு அங்கிருந்த மூவருமே வாயடைத்து நின்றனர்

அமுதாவும் கணேசனும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். அங்கு ஒரு குரல் கேட்டது:    

"அப்பா அம்மா ரொம்ப சாரி ..எனக்கு எல்லா வசதியும் இருந்தும் என்னோட சோம்பல்னால படிக்கக்கூடாதுன்னு நினைச்சேன். இனிமே இப்படி நடந்துக்க மாட்டேன். ஸ்கூல் வேன் வந்துருமா. நான் கிளம்புறேன்."

மகிழ்ந்த அமுதா, கணேசனிடம் சொன்னாள், "சங்கர்கிட்ட இருந்து நாமகூட ஒரு விஷயம் கத்துக்கிட்டோம். அவங்க அம்மா, அப்பா ஒரு நாள்கூட படின்னு சொன்னது இல்ல. ஆனா நாம தர்ஷனை ரொம்ப டார்ச்சர் பண்றமோ?"  கணேசன் மௌனமாக தலையாட்டினார்.

அன்று சங்கர் என்ற சிறுவனால் மூவர் மனங்களில் தெளிவுப் பிறந்தது. உற்சாகம் நிறைந்தது. தர்ஷனின்  மொபைல் கவனிப்பாரற்று சோபாவின் மேல் கிடந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com