
சிரிப்பு வருது சிரிப்பு வருது அன்றைக்கு நடந்ததை நினைத்து சிரிப்பு வருது. சுமார் ஐம்பத்து ஐந்து வருடங்களுக்கு முன் நான் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படிக்கையில் வரதாசாரி என்ற தமிழ் பண்டிட் எங்களுக்கு தமிழ் வகுப்பு எடுத்தார். பட் பட்டென்று வேடிக்கையாக பதில் சொல்வதில் கைத்தேர்ந்தவர். ஒரு நாள் புது மாணவன் ஒருவன் வகுப்பில் சேர்ந்தான்.
பார்ப்பதற்கு நெட்டையாக இருந்தான். எழுந்து நின்று தன்னை அறிமுக படுத்தி கொண்ட அவனை பார்த்து "உன் அப்பா என்ன செய்கிறார் ?" என்று கேட்டார் வரதாசாரி வாத்தியார். அதற்கு அவன் "என் அப்பா ஒரு வாத்தியார் சார்" என்றான்.
உடனே தமிழ் பண்டிட்,"வாத்தியார் பையன் மக்குன்னு தான் கேள்வி பட்டிருக்கேன் . உன் விஷயத்தில் வாத்தியார் பையன் கொக்கு ஆகி போச்சே!" என்றாரே பார்க்கலம் .
தமிழ் பண்டிட் வரதாச்சாரி அடித்த இன்ஸ்டன்ட் ஜோக்குகள் எத்தனையோ ஒன்றிரண்டு தவிர எல்லாம் மறந்து விட்டன. மேலே குறிப்பிட்டதை தவிர இன்னொரு நிகழ்ச்சியும் ஞாபகத்துக்கு வருகிறது. ஒருநாள் வரதாசாரி அவர்கள் திருக்குறளில் செவி செல்வம் பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது பாலு என்ற மாணவன் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் தன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த விசு என்ற மாணவனை காண்பித்து இவனால் காதை அசைக்க முடியும் சார் என்றான். உடனே விசுவும் எழுந்து பெருமையாக தன் காதை அசைத்து காட்டினான். தன்னை தமிழ் வாத்தியார் பாராட்டுவார் என்று எதிர்பார்த்த விசுவை பார்த்து வரதாச்சாரி சொன்னார், "காதை எது ஆட்டும்? மிருகம் தான் ஆட்டும்" வகுப்பில் இருந்த எல்லா மாணவர்களும் கொல்லென்று சிரித்து விட்டனர்!