கங்காருவின் வால் வெறும் வால் அல்ல குட்டீஸ்! அது ஒரு 'ஐந்தாவது' கால்! மிரள வைக்கும் உண்மைகள்!

Amazing facts about kangaroo
KangarooCredits AI image
Published on

குட்டிகளைச் சுமக்க இயற்கையிலேயே வயிற்றில் பை வைத்திருக்கும் விலங்குகளில் கங்காருதான் மிகவும் பிரபலம். குட்டிகளைச் சுமக்க இப்படியான பைகளை வைத்திருக்கும் விலங்குகளை 'மார்சூபியல்' (Marsupial) என்று அழைப்பர். கங்காருகளில் பல வகை உண்டு; அவற்றுள் சிவப்பு கங்காருக்கள்தான் அளவில் பெரியவை. இவற்றின் உயரம் சுமார் 5 அடி, எடை 180 பவுண்டு வரை இருக்கும்.

ஐந்தாவது கால் - வால்!

மிகவும் வலிமை வாய்ந்த மூன்றடி நீளமுள்ள வால்தான் இதன் விசேஷமான உறுப்பாகும். கங்காரு தன் வாலை ஐந்தாவது காலாக உபயோகிக்கும் அளவுக்கு அது வலுவானது. சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய விஷயத்தைக் கண்டுபிடித்துள்ளனர்; அது, கங்காருகள் 'இடது கை பழக்கம்' (Left-handed) உள்ளவை என்பதுதான்! இவை சாப்பிடுவதற்கும், குட்டிகளைத் தடவிக் கொடுப்பதற்கும் பெரும்பாலும் இடது கையையே உபயோகிக்கின்றனவாம்.

குடும்ப அமைப்பும் பெயர்களும்:

ஆண் கங்காருகள் தங்களுக்குள் குத்துச்சண்டை வீரர்கள் போல் மோதிக்கொள்ளும். கங்காருகளின் கூட்டத்திற்கு 'மாப்' (MOB) என்று பெயர். அந்தக் கூட்டத்தில் பெரியதாக இருக்கும் ஆண் கங்காரு சொல்வதுதான் சட்டம்.

  • ஆண் கங்காரு: பூமர் (Boomer)

  • பெண் கங்காரு: ஜில்ஸ் (Jills)

  • குட்டிகள்: ஜோய் (Joey)

தாவுவதில் கில்லாடி!

கங்காருகளின் ஸ்பெஷாலிட்டியே அதன் குதியல்தான். இவை 6 அடி உயரம் வரை எழும்பி, ஒரே பாய்ச்சலில் 25 அடி தூரம் வரை தாண்டும் திறமை பெற்றவை. கங்காருவின் வால் அசாத்திய பலம் கொண்டது. இதன் முறுக்கேறிய தசைகள், கங்காருவின் மற்ற நான்கு கால்களின் ஒருமித்த சக்தியை விட அதிக பலம் கொண்டதாகும்.

பிறப்பும் வளர்ச்சியும்:

கங்காருவின் கர்ப்ப காலம் வெறும் 5 வாரங்கள் மட்டுமே. அதன் முடிவில் பிறக்கும் குட்டி ஒரு திராட்சையின் அளவுதான் இருக்கும். பிறந்தவுடன் இக்குட்டி தாயின் பைக்குள் ஊர்ந்து சென்று அமர்ந்துவிடும். பல மாதங்கள் நன்கு வளர்ச்சியடையும் வரை அங்கேயே தங்கும்.

தந்திரமான வேட்டையாடி:

மற்றொரு ருசிகரமான தகவல் என்னவென்றால், கங்காருகள் தன் எதிரிகளை ஆழமான நீர்நிலை இருக்கும் இடத்திற்குத் தந்திரமாக இழுத்துச் சென்று, கைகளால் அமுக்கி மூழ்கடித்துக் கொன்றுவிடும்.

ஒரு சோகமான உண்மை:

கங்காருவைப் பற்றிய ஒரு சோகமான விஷயமும் உண்டு. தன்னை விடப் பலசாலியான எதிரி துரத்தும்போது, அது தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தன் பையில் இருக்கும் குட்டியைக் கீழே போட்டுவிட்டு ஓட ஆரம்பித்துவிடும். குட்டிகளைப் பெற்றுக் கொள்வது கங்காருக்களுக்குப் பெரிய விஷயமல்ல என்பதால், தற்காப்புக்காகக் குட்டியை இழக்க இவை தயங்குவதில்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இதையும் படியுங்கள்:
தெனாலிராமன் விகடக்கதை: குதிரையும் பூனையும் விற்பனை!
Amazing facts about kangaroo

தற்போது ஆஸ்திரேலியாவில் அரசாங்க அனுமதியோடு கங்காருகள் கொல்லப்படுகின்றன. விவசாயிகளுக்கு அவை தரும் தொல்லைகளும், அவற்றின் அபரிமிதமான இனப்பெருக்கமுமே இதற்குக் காரணம்.

விலங்குகளில் கங்காரு ஒரு பிரத்யேகமான உயிரினம். அது தாவித் தாவி ஓடும் அழகே தனி அழகு! இரண்டு கங்காருகள் சண்டையிடும் காட்சி, இரண்டு 'கிக் பாக்ஸர்கள்' மோதிக்கொள்வது போலவே இருக்கும். தாவுவதில் கங்காருவைத் தோற்கடிக்க, கட்சிக்குக் கட்சி தாவும் நம்மூர் அரசியல்வாதிகளால் மட்டும்தான் முடியும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com