தெனாலிராமன் விகடக்கதை: குதிரையும் பூனையும் விற்பனை!

Tenali Raman Tales
Tenali Raman’s Clever BargainAI Image
Published on

தெனாலிராமனுக்கு எதிர்பாராமல் காய்ச்சல் ஏற்பட்டது. ஒரு வாரம் ஆகியும் மருந்து சாப்பிட்டும் குணமாகவில்லை. அவனுடைய மனைவி மிகவும் கவலைப்பட்டாள். புரோகிதரிடம் சென்று தன் கணவனின் நிலைமையைக் கூறி, "ஏதாவது சாந்தி செய்து குணமடையச் செய்ய வேண்டும்" என்று வேண்டிக்கொண்டாள்.

தெனாலிராமனிடம் ஏற்கனவே அவமானப்பட்டவர்களில் புரோகிதரும் ஒருவர். ஆகையால், வஞ்சம் தீர்த்துக்கொள்ள அவர் நல்ல சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார். "உன் கணவன் அந்தணர்களுக்குச் சூடு போட்டது மகாபாவம்! அந்த தோஷம் காரணமாகவே அவனுக்குக் காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. மருந்துகளால் இந்தக் காய்ச்சல் தீராது; தோஷ பரிகாரம் செய்ய வேண்டும். அதற்கு நூறு பவுன் செலவாகும்," என்றார் புரோகிதர்.

"எங்களிடம் இப்பொழுது நூறு பவுன் இல்லை. எங்களிடம் ஒரு குதிரை இருக்கிறது. அவர் குணமானதும் அந்த குதிரையை விற்கச் செய்து உங்களுக்குச் சேர வேண்டியதைத் தருகிறேன். இப்பொழுது நீங்கள் கருணை கூர்ந்து தோஷ பரிகாரம் செய்து என் கணவரைக் குணப்படுத்த வேண்டும்," என்று மன்றாடினாள் தெனாலிராமன் மனைவி.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: வசந்த வனத்தில் ஒரு போர்!
Tenali Raman Tales

"நீ ரொம்பவும் கேட்டுக்கொள்வதால் நான் பரிகாரம் செய்கிறேன். ஆனால், அந்த குதிரையை என்ன விலைக்கு விற்றாலும் அந்தத் தொகையை அப்படியே என்னிடம் தந்துவிட வேண்டும். சரியா?" என்று புரோகிதர் பேராசையோடு கேட்டார். தெனாலிராமன் மனைவி அதற்குச் சம்மதித்தாள். புரோகிதர் தோஷ பரிகாரம் செய்தார். அதன் பலனோ அல்லது இயற்கையின் விளைவோ, தெனாலிராமன் காய்ச்சல் குணமாகி எழுந்துவிட்டான்.

ஒரு வாரத்திற்குப் பிறகு புரோகிதர் வந்து, "குதிரையை விற்றுவிட்டாயா? என்ன விலைக்கு விற்றாய்? எனக்குச் சேர வேண்டியதைக் கொடு," என்று கேட்டார். "இன்னும் விற்கவில்லை, தருகிறேன்," என்று சமாதானம் சொன்னான் தெனாலிராமன். தான் நோயால் படுத்திருந்தபோது மனைவி செய்த முட்டாள்தனத்திற்கு வருத்தப்பட்டு அவன் யோசிக்கலானான். புரோகிதரோ தினமும் வந்து நச்சரிக்கலானார்.

புரோகிதர் தொந்தரவு பொறுக்காமல் குதிரையை விற்கப் புறப்பட்ட தெனாலிராமன், வீட்டில் இருந்த ஒரு பூனையையும் உடன் கொண்டு சென்றான். அந்தக் குதிரையோ கொழு கொழு என்று இருந்தது. அராபிய குதிரை என்பதால் நூறு பவுனுக்கு மேல் விலை போகும், அந்தத் தொகை பூராவும் தனக்கே சேரும் என்ற எண்ணம் புரோகிதருடைய பேராசையைத் தூண்டியது. "அவசரப்பட்டு விற்றுவிடாதே! பூனையை எதற்குப் பின்னாடியே கொண்டு வருகிறாய்?" என்றார் புரோகிதர்.

இதையும் படியுங்கள்:
அனுமன் என்கிற 'சூப்பர் ஹீரோ'!
Tenali Raman Tales

"உமக்குக் குதிரை விற்ற பணம் கிடைக்கும், பூனையைப் பற்றி உமக்கு ஏன் கவலை?" என்றான் தெனாலிராமன். சந்தையில் குதிரையை விலை கூறினான். "என்ன விலை?" என்று கேட்டனர் மக்கள். "என்னுடைய பூனையின் விலை இருநூறு பவுன், குதிரையின் விலை ஒரு காசு! இரண்டையும் சேர்த்தே விற்பேன்," என்றான். தெனாலிராமனுடைய பேரம் விசித்திரமாக இருந்தது. "பூனைக்கு இருநூறு பவுன் கொடுக்க முடியுமா?" என்று கேட்டுவிட்டுப் பலர் போய்விட்டனர். சிலர் இந்தப் பேரம் புரியாமல் திகைத்துக் கொண்டிருந்தனர். புரோகிதர் உள்ளூர மகிழ்ச்சியோடு இருந்தார்... குதிரை அதிக விலைக்குப் போகப்போகிறது என்று நினைத்தார்.

கடைசியில் துணிந்து ஒருவன் வந்து இருநூறு பவுனும் ஒரு காசும் தெனாலிராமனிடம் கொடுத்து பூனையையும் குதிரையையும் வாங்கிக்கொண்டு சென்றான். தெனாலிராமன் இருநூறு பவுனை எடுத்துத் தன் மடியில் வைத்துக்கொண்டு, ஒரு காசை மட்டும் எடுத்து புரோகிதரிடம் நீட்டினான். "இதோ, குதிரை விற்ற ஒரு காசு!" என்று சொல்லிக் கொடுத்தான். புரோகிதர் அதிர்ச்சி அடைந்தார்.

தெனாலிராமனின் தந்திரத்தை அறிந்து எல்லோரும் புகழ்ந்தனர். புரோகிதரோ ஏமாற்றத்தோடு வீட்டுக்குச் சென்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com