

ஒருவர் தன் வாழ்க்கையின் முதல் அனுபவங்களை மறக்க முடியாது. பள்ளிக்கூடத்தில் முதல் நாள், கல்லூரியில் நுழைந்த முதல் நாள், வேலைக்குச் சேர்ந்த முதல் நாள், முதல் சம்பளம், முதல் ரயில் பயணம், முதல் விமானப் பயணம் எனப் பல முதல் அனுபவங்கள் நம் மனக் கண் முன் எப்போதுமே தங்கி விடுகின்றன. இந்த வகையில் நான் இப்போது சொல்ல விரும்புவது என்னுடைய முதல் பேனாவைப் பற்றி.
அப்போது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அதுவரை பேனா பிடிக்காத என்னைப் பார்த்த வகுப்பு ஆசிரியர், கடுங்கோபத்துடன் அழைத்துக் கடிந்து கொண்டார். "இன்னும் எவ்வளவு நாள்தான் இந்த புழுக்கைப் பென்சிலை வைத்து எழுதி என் பிராணனை எடுக்கப் போகிறாய்? எத்தனை முறை பேனாவுக்கு மாறு, பேனாவுக்கு மாறு என்று நான் சொல்வது? இனி என்னால் பொறுக்க முடியாது. என்ன செய்வாயோ தெரியாது, நாளையிலிருந்து நீ பேனாவுடன் தான் வகுப்புக்குள் நுழைய வேண்டும்," என்றார்.
என் அண்ணன் பெட்டி நிறைய பலவித பேனாக்கள் வைத்திருந்தும், அதில் ஒன்றைக் கூட எனக்குத் தர மனமில்லை அவனுக்கு. ஆசிரியர் விடுத்த வெஞ்சத்தையும் (அச்சுறுத்தல்), கெடு வைத்ததையும் சொல்லி கெஞ்சினதும்தான், ஒரு குண்டு பேனாவை வேண்டா வெறுப்பாக என்னிடம் கொடுத்தான். என்ன ஒரு பேனா அது! பட்டை பட்டையாக அடிக்கும், கொட்டை கொட்டையாக எழுதும்.
இப்படி இருந்தும், எனக்கும் அந்தப் பேனாவுக்கும் ஒரு பந்தம் ஏற்பட்டு விட்டது. அதற்கு பீமன் என்ற பெயர் கூட வைத்து அழைக்க ஆரம்பித்தேன். அது தவிர, அந்தப் பேனாவைப் பற்றி எனக்குள் ஒரு நம்பிக்கையும் வேறு இருந்தது. அதை மூடநம்பிக்கை என்று கூட பகுத்தறிவுவாதிகள் சொல்லலாம். அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. அந்தப் பேனாவைப் பிடித்துப் பரீட்சை எழுதினால் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற எண்ணம் என்னுள் வந்துவிட்டது. அதற்கு ஏற்றார் போல, பதினெட்டாம் ரேங்க்கில் இருந்த நான் எட்டாம் ரேங்க்கிற்கு முன்னேறினேன்.
எனது வகுப்பில் என் பேனாவைப் பற்றி ஒரு வதந்தியும் பரவியது. "இந்த மக்குப் பிளாஸ்திரி திடீரென்று எப்படி இப்படி மார்க்குகள் வாங்குகிறான்? அந்தப் பேனாவில் ஏதோ மந்திர சக்தி இருக்கிறது," என்று பேசிக் கொண்டார்கள். அதைப் திருட முயற்சியும் நடந்தது. வகுப்பில் இருந்த ஒரு பணக்காரப் பையன் அதற்காகப் பத்து ரூபாய் தரவும் முன் வந்தான். நான் அதை மறுத்துவிட்டேன்.
இப்படி இருக்கையில் ஒரு நாள், பீமன் குடிக்கும் இங்க்கினைப் பற்றிய சண்டையில், என் அண்ணன் அதை என் கையிலிருந்து பிடுங்கி, ஜன்னல் வழியே வெளியே எறிந்து விட்டான். அதை எடுத்து வர ஓட்டமாய் வெளியே ஓடினேன். பாவம், அது ஒரு மூக்கு உடைந்த காக்காவைப் போல நிப் வளைந்து, புல் தரையில் கிடந்தது. அதன் வாயிலிருந்து நீல ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த என் நெஞ்சில் சிவப்பு ரத்தம் வடிந்தது.
ஒரு அடிபட்ட குழந்தையை எடுப்பது போல, அதை எடுத்துக் கொண்டு பாண்டி பஜாரில் இருந்த ஒரு மரத்தடி பேனா மருத்துவரிடம் கொண்டு சென்றேன். பீமனின் நிப்பை நிமிர்த்திச் சரி செய்து கொடுத்தார். கூலி முழுதாக ரூபாய் ஒன்று. அப்போது ஒரு ரூபாய்க்கு ஒரு புதிய பேனாவை வாங்கியிருக்க முடியும். ஆனால் அதை நான் செய்யவில்லை.
ஆண்டுகள் அறுபது போய் விட்டன. ஆனால் அந்தக் குண்டுப் பேனா நண்பனை இன்றும் பாதுகாத்து வைத்துள்ளேன். அது மற்ற என் பழைய பள்ளிப் பருவப் பொருள்களுடன் ஆழமான தூக்கத்தில் கிடக்கிறது. இப்போது அதைத் தட்டி எழுப்பினாலும் என் பள்ளி நாட்களைப் பற்றி பட்டை பட்டையாய் எழுதிப் பட்டையைக் கிளப்பும். ஆனால் நான் அதைச் செய்யப் போவதில்லை. அது எழுந்துவிட்டால் யார் அதற்கு இங்க் ஊற்றுவது?