யானைக்குட்டி செய்த தவறு : ஆபத்தில் உதவிய முதலைகள்!
அது ஒரு அடர்ந்த காடு. யானைகள் கூட்டமாக வாழும் பகுதி. ஒரு தாய் யானை தன் புதுக்குட்டியுடன் குதூகலமாக காட்டில் மரக்கிளைகளை ஒடித்தும், இலைகளை உண்டும் தானும் பசியாறி, தன் குட்டிக்கும் கொடுத்து அதை பசியாற வைத்தது.
குட்டி யானை மிகவும் துறுதுறுவென இருந்தது. சும்மாவே இருக்காது. அங்கு ஓடும், பிறகு இங்கு ஓடும். இப்படி எதையாவது சேட்டை செய்து கொண்டே இருக்கும். அதுவும் காட்டில் உள்ள குட்டி குட்டி விலங்குகள் மற்றும் பறவைகளை கண்டால் குட்டிக்கு அவ்வளவு மகிழ்வு. அதனுடன் விளையாட ஆர்வமாக செல்லும். ஆனால் அவை பயந்து ஓடும்போது குட்டி சிரித்து மகிழும்.
தாய் முன்னே சென்று கொண்டிருந்தது. இங்கே பின்னால் வந்த குட்டி, முயல்களை கூட்டமாக கண்டதும் ஆர்வத்தில் அதை காண ஓடியது. அப்போது அவை அஞ்சி ஓடின. அதே போல் அழகிய புள்ளி மான்கள் கூட்டம். “சரி, இதனுடனாவது நாம் விளையாடலாம்,” என்று நினைத்து அங்கு ஓடியபோது, அவை தலைதெறிக்க ஓட்டம் பிடித்ததை பார்த்ததும் யானைக்கு ஒரு பக்கம் சிரிப்பு; மறு பக்கம் வருத்தம். “என்ன இது, யாருமே நம்முடன் விளையாட வரமாட்டேங்கிறாங்களே?” என்று ஏங்கியது.
அப்போது பல வாத்துகள் கூட்டமாக வருவதை கண்டு குட்டி யானை மிகவும் மகிழ்ந்து, அவற்றுடன் விளையாட ஓடியது. ஆனால் வாத்துக்கள் அஞ்சி சிதறி ஓடின. யானைக்குட்டிக்கு அவ்வளவு வருத்தம்.
அதே சமயம் இரண்டு குட்டி வாத்துகள் அருகில் இருந்த செந்தாமரை குளத்தில் சென்று தப்பின. குட்டி அதை அதிசயத்துடன் பார்த்த போதுதான் அதற்கு அதிர்ச்சி. காரணம், அந்த இரண்டு வாத்து குட்டிகளும் இப்போது நீரில் இல்லை. “அவை எங்கே சென்றிருக்கும்? உடன் நாம் அதை கண்டுபிடித்து அதனுடன் நட்பாகி விளையாட வேண்டும்,” என்ற ஆர்வத்தில் அந்த செந்தாமரை குளத்தில் இறங்கியது குட்டியானை. அவ்வளவுதான்! கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே மூழ்க ஆரம்பித்தது. அதனால் வெளியிலும் வர முடியவில்லை. காரணம், இது பார்ப்பதற்கு அழகான செந்தாமரையால் மூடப்பட்டு இருந்தாலும், அது முழுக்க முழுக்க சேற்றால் நிறைந்த குளம். அதில் இறங்கியவர் யாரும் பிழைத்ததே இல்லை.
அதே சமயம், “குண்டு அண்ணா, குண்டு அண்ணா,” என்று குரல் கேட்டதையும் யானை குட்டி கவனித்தது. இரண்டு வாத்து குட்டிகளும் சேற்றில் பாதி புதைந்த நிலையில் இருந்தன. குட்டி வருந்தியது. “இவை கூட்டமாக ஒற்றுமையுடன் வந்தபோது, நாம்தானே விளையாடலாம் என்ற ஆர்வத்தில் சென்று அவைகளை கலைத்தோம். அதில் தப்பிக்க வேண்டி இந்த குளத்தில் விழுந்த இரண்டு வாத்து குட்டிகளும் இப்போது சேற்றில் மூழ்கிக் கொண்டிருக்கின்றன,” என்று வருந்தி, தன் முழு பலத்தையும் கொண்டு துதிக்கையை சேற்றில் விட்டு, அந்த குட்டிகளை ஒவ்வொன்றாக தூக்கி கரையில் எறிய, அவை மெல்ல பறந்து தப்பின.
ஆனால் குட்டி யானைக்கு தப்ப வழியில்லை. அதன் சரீரம் மிகவும் குண்டாக இருந்ததால், அது மிக சுலபமாக சேற்றில் மூழ்க ஆரம்பித்தது. இப்போது அச்சத்தில் அது பிளிறியது.
தாய் யானையின் காதில் குட்டியின் அழுகுரல் கேட்டது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. அப்போதுதான் இரண்டு குட்டி வாத்துகளும் குட்டி யானையின் நிலையை கூற, அலறி அடித்துக் கொண்டு தாய் யானை மற்ற யானைகள் கூட்டத்துடன் செந்தாமரை குளம் நோக்கி சென்றது.
“அம்மா” என்று குட்டி அழுதபடி மூழ்கிக் கொண்டிருப்பதை பார்த்து தாயும் அழுதபடி அதை காக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. காரணம், இப்போது குட்டி மூழ்கிக் கொண்டிருக்கும் பகுதி குளத்தின் நடுப்பகுதி. அந்த குளத்தின் ஆபத்தை கருதி யாரும் நீர் அருந்த கூட இறங்க மாட்டார்கள். அதனால் யானை கூட்டமும் அந்த குளத்தில் இறங்க அஞ்சி கரையில் வருத்தத்துடன் நின்று கொண்டிருந்தன. தாய் இறங்க முயற்சித்தும், ஆனால் அஞ்சி இறங்காமல் பிளிறியபடி கரையின் முன் கண்ணீருடன் நின்று கொண்டிருந்தது.
நடுக்குளத்தில் ஒரு சுழற்சி. ஏதோ ஒரு பெரிய பொருள் சிக்கிவிட்டது என்று எண்ணி நான்கு பெரிய முதலைகள் அந்த இடம் வந்தன. அவற்றுக்கு ஆச்சரியம்! இது குண்டு யானைக்குட்டி. தலைவன் முதலை ஒரு யோசனை செய்தது. குட்டி துதிக்கையை மட்டும் நீருக்கு மேலே நீட்டி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக குட்டி யானை சேற்றில் புதைய புதைய துதிக்கையும் நீருக்குள் சென்றது. குட்டிக்கு மூச்சு முட்ட ஆரம்பித்தது.
உடன் சுறுசுறுப்புடன் வேலை செய்தது முதலைகளின் தலைவன். மற்ற மூன்று முதலைகளுக்கும் கட்டளை கொடுத்தது. உடன் நான்கும் சேற்றின் அடிவரை சென்று குட்டி யானையின் நான்கு கால்களையும் தங்கள் முதுகில் வைத்து தூக்கி மெல்ல மெல்ல மேலே எழும்பின. யானையின் எடை நீரின் அடியில் குறைந்துவிடும். அதே போல், நீரில் முதலையின் பலம் அதிகரித்து காணப்படும். எனவே, அவற்றுக்கு இந்த குட்டி யானையின் கால்களை தூக்கி மேலே கொண்டு வருவதில் எந்த சிரமமும் இல்லை.
இப்போது ஒரு தெப்பத்தில் இருப்பது போல் யானை நின்றிருக்க, அதன் நான்கு கால்களையும் தூக்கியபடி நீரின் அடியிலேயே பயணித்து பின் கரை வந்ததும், நான்கு முதலைகளும் குட்டியை கரையை நோக்கி தள்ளின.
அவ்வளவுதான்! கண்ணீருடன் இருந்த தாய் யானையும் மற்ற யானை கூட்டமும், அந்த குட்டி யானையை தங்கள் துதிக்கையின் பலத்தால் கரையின் ஆரம்ப சேற்றில் சிக்கி இருந்த குட்டி யானையை பெருத்த பலம் கொண்டு அலக்காக தூக்கி அதை காப்பாற்றின. முதலைகள் பின் நீருக்குள் சென்றுவிட்டன.
தாய் யானை முதலைகளுக்கு தன் நன்றியை தெரிவித்துவிட்டு பின் குட்டியை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றது. பின் தாய் குட்டியை கண்டித்தது. “ஒன்று, என்னுடன் சேர்ந்து வா. இல்லை, எனக்கு முன்னால் போ. அப்போதுதான் நடப்பது எனக்கு தெரியும். இனியும் மற்ற விலங்கு குட்டிகளுடன் விளையாடுகிறேன் என்று சேட்டை செய்தால் அவ்வளவுதான்,” என்று கண்டிக்கவும், குட்டி சாதுவாக தலை அசைத்து அதனுடன் சென்றது.
பிறகு தாய், ஒரு நீரோடையில் இறங்கி தன் குட்டியை நன்கு குளிக்க வைத்து அதன் முழு சேற்றையும் நீக்கி தன் கூட்டத்துடன் சேர்ந்து கொண்டது.
“ஏன் தலைவா, இந்த குட்டியை நாம் இரையாக்கி இருந்தால் ஒரு வார உணவு நமக்கு கிடைத்திருக்குமே? அப்படி இருக்க, அந்த குட்டியை ஏன் காப்பாற்றினீர்கள்?” என்று ஒரு முதலை கேட்டது.
“நீ கேட்பது சரிதான். நம் முன்னோர்களில் ஒருவர் யானைகளின் தலைவன் கஜேந்திரன் என்ற பெரும் யானையின் கால்களை கவ்வி அதை இரையாக்கிக்கொள்ள முயன்றது. உயிருக்கு போராடிய யானையோ இந்த செந்தாமரை மலரை கொய்து வானில் எறிந்து ‘ஆதிமூலமே’ என்று சரணாகதி அடைய, நாராயணன் தோன்றி நம் முன்னோர் முதலையை சக்கரத்தால் கொன்று யானையை காப்பாற்றினாராம். அதுவே நமக்கு ஒரு சாபமாக இருந்தது. எப்படியோ ஒரு யானை குட்டியை காப்பாற்றி நம் முன்னோர்கள் நமக்கு சேமித்து வைத்திருந்த சாபத்தை இன்று போக்கிக்கொண்டோம்,” என்றது தலைவர் முதலை.
நீதி: ஆழம் தெரியாமல் காலை விடாதே. ஆபத்தை உணராமல் விளையாடாதே.