
சீனப் பேரரசர் சியாங் மியாங் அவர்களுக்கு, அவரது நண்பர் ஒருவர் சயாம் பூனை ஒன்றை அன்பளித்தார். உலக அளவில், பூனைகளில் மிக அழகானவை பெர்ஷியன் மற்றும் சயாமி நாடுகளின் பூனைகள்தான்.
பேரரசருக்கு அன்பளிக்கப்பட்டிருந்த, தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த அந்த சயாமிய பூனையும் மிக அழகாக இருந்தது. அவர் அதன் மீது ராஜ அன்போடும், ராஜ பாசத்தோடும் இருந்தார். அரண்மனையில் அதற்கு ராஜ உபசாரமும், ராஜ மரியாதையும் கிடைத்தது. பேரரசர் எங்கு சென்றாலும், அந்தப் பூனையைக் கூடவே எடுத்துச் செல்வார்.
அப்படி செல்லும்போது மக்கள் அவரிடம், அந்தப் பூனையின் பெயர் என்ன என்று கேட்பார்கள்.
பேரரசர் அதற்கு இன்னும் பெயர் வைத்திருக்கவில்லை. தக்க பெயர் ஒன்றை அவரால் தேர்ந்தெடுக்க முடியாததால், ஏழு பேர் அடங்கிய தனது அமைச்சரவையைக் கூட்டி, ஏழு நாட்களுக்குள் தனது பூனைக்கு சிறந்த பெயர் ஒன்றை சொல்லும்படி கட்டளையிட்டார்.
ஏழாவது நாள் வரைக்கும் தமது குருவி மூளையைக் குடைந்து யோசித்தும், அமைச்சர்களுக்கு நல்ல பெயர் எதுவும் கிடைக்கவில்லை. பேரரசர் கொடுத்த கெடு முடிவடைவதால், ஏதாவது சொல்லி சமாளிக்கலாம் என அவரிடம் வந்தனர்.
முதலாவது அமைச்சர் சொன்னார்... "மாட்சிமை மிக்க பேரரசே...! மாண்புமிகு அரண்மனைப் பூனையார் அவர்களுக்கு, வீரம் மிக்க பெயர் வைப்பதே கௌரவம். எனவே, 'புலி' என்று பெயர் வைத்தால் மிகப்பொருத்தமாக இருக்கும். மேலும், பூனைகளும் புலிகளும் ஒரே வம்சம் அல்லவா!"
இரண்டாவது அமைச்சர் அதை ஆட்சேபித்தார். "புலி, வீரமான மிருகம்தான். ஆனால், ட்ராகனோடு ஒப்பிடும்போது, புலி அவ்வளவு வீரமானதல்ல. புலியால் ட்ராகனை வெல்ல முடியாது. மேலும், ட்ராகன் ஆகாயத்திலும் கூட பறக்கக் கூடியது. எனவே, நமது வீரப் பூனையாருக்கு ட்ராகன் என்று பெயர் சூட்டுவதே மெய்யான கௌரவம்."
மூன்றாவது அமைச்சர் அதை ஏற்கவில்லை. "ட்ராகன் ஆகாயத்தில் பறக்கக் கூடியதுதான். ஆனால், மேகம் அதை விடவும் உயரத்தில் செல்லக் கூடியது. எனவே, ட்ராகனை விட மேகம்தான் மேலானது. அந்தப் பெயரையே, உயர்திரு. பூனையார் அவர்களுக்கு சூட்டலாம்."
நான்காவது அமைச்சர் அதை மறுத்தார்: "மேகம் உயரத்தில் செல்லக் கூடியதுதான்! ஆனால், காற்று அதைத் தன் போக்கில் அசைக்கும். எனவே, மேகத்தை விட உயர்ந்தது காற்றுதான். ஆகையினால், மேதகு பூனையார் அவர்களுக்கு 'காற்று' என்று பெயர் வைப்பதுதான் சரியானது."
ஐந்தாவது அமைச்சர் அதை எதிர்த்தார்: "காற்று, மேகத்தை நகர்த்தக் கூடிய அளவுக்கு வலுவானதுதான். ஆனால், செங்கல் சுவர், காற்றைத் தடுத்து நிறுத்திவிடும். எனவே, நமது பேரரசப் பூனையாருக்கு, செங்கல் சுவர் என்று பெயர் வைப்பதே சாலச் சிறந்தது."
"செங்கல் சுவர் வலுவானதுதான்! ஆனால் பெயர் நீளமாக இருக்கிறதே...!" என்றார் பேரரசர்.
உடனே ஆறாவது அமைச்சர் எதார்த்தமாக சொன்னார்: "அப்படியானால் 'எலி' என்று வைக்கலாம். சுருக்கமான பெயராகவும் இருக்கும்; எலி, செங்கல் சுவரையே துளைத்துச் சென்றுவிடக் கூடியதும் அல்லவா!"
பேரரசர், முதலில் அசந்துவிட்டார்; பிறகு குழம்பினார். சிந்திக்கும் வழக்கமே இல்லாத அவர், சிறிது நேரம் சிந்திக்க முயற்சி செய்தும் பார்த்தார். "நீங்கள் சொல்லும் மேன்மையான கருத்து எனக்குப் புரிகிறது. ஆனால், பூனைக்கு எலி என்று பெயர் வைப்பது பொருத்தமாக இராதே...!"
ஏழாவது அமைச்சர் தத்துவார்த்தமாக சொன்னார்: "பூனைக்கு நீங்கள் எந்தப் பெயர் வைத்து அழைத்தாலும் பூனை, பூனைதான்! ஆகவே, அதற்கு பூனை என்றே பெயர் சூட்டிவிடலாம்.”
பேரரசரும் மற்றவர்களும் அதை ஏற்றுக்கொண்டனர். பூனைக்கு பெயர் தேடும் படலம் ஒருவாறாக முடிவுக்கு வந்தது. அவ்வாறாக, மாண்புமிகு அரண்மனைப் பூனைக்கு, பூனை என்றே பெயர் சூட்டப்பட்டது.