

ஒரு மடாலயத்தில், பைத்தியக்காரன் ஒருவனை குருவிடம் அழைத்து வந்தான் ஒரு சீடன். குரு அந்தச் சீடனிடம் இப்படிக் கூறினார்:
“அழைத்து வந்தவனை ஒரு ஓரமாக, மூலையில் உட்கார வையுங்கள். உணவையும் நீரையும் அவன் அருகில் வையுங்கள்; ஆனால் உண்ணும்படி அவனிடம் கூற வேண்டாம். பசித்தால் அவனே எடுத்துச் சாப்பிடுவான். அவனுக்கு எந்த உதவியும் செய்ய வேண்டாம். நீங்கள் யாரும் அவனைக் கண்டுகொள்ளவும் வேண்டாம்.”
அவன் கத்துவான், கற்களை வீசுவான்; ஆனாலும் யாருமே அவனைக் கண்டுகொள்ளவில்லை. சீடர்கள் அனைவரும் அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால், அந்தப் பைத்தியக்காரனுக்கு மற்றவர்களிடம் எதிர்வினை ஆற்றுவதற்கான வாய்ப்பு இல்லாது போனது.
நாட்கள் நகர்ந்தன. ஒருநாள், அந்த மனிதன் குருவின் முன் அமைதியாக வந்து நின்று, “எனக்கும் தியானம் கற்றுத் தருவீர்களா?” என்று கேட்டான்.
இது இன்றும் திபெத்திய புத்த மடாலயங்களில் நடக்கும் ஒரு சிகிச்சை முறை. “எதிர்வினை ஆற்ற யாரும் இல்லை என்றால், அவர்கள் தானாகவே அமைதியாகி விடுகிறார்கள்” என்கிறார்கள் திபெத்திய லாமாக்கள்.
நம்முடைய பேச்சு, தர்க்கத்திற்குத் தீனி; நம் அமைதியே அதற்குப் பட்டினி.
அமைதியாக இருங்கள், எல்லாம் சரியாகும். ஒருவேளைச் சரியாகவில்லை என்றாலும் பரவாயில்லை, நீங்கள் சரியாக இருப்பீர்கள்!
குட்டீஸ்... தெரிந்து கொண்டீர்களா? எதிலும் நிதானமே அவசியம். கோபப்படாமல், எதையும் யோசித்துச் செய்யுங்கள்!
ஒரு நாட்டில் ஒரு அரசர் இருந்தார். அவரிடம் பத்து கொடிய காட்டு நாய்கள் இருந்தன. தவறு செய்யும் ஊழியர்களை அந்த நாய்களுக்கு இரையாக்குவதையே அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒருநாள், அங்கு வேலை செய்யும் ஊழியர் ஒருவர் ஏதோ ஒரு தவறான கருத்தைச் சொன்னார். இதனால் கோபமடைந்த அரசர், “இவனை நாய்களுக்கு முன் தூக்கி எறியுங்கள்!” என்று கட்டளையிட்டார்.
உடனே அந்த வேலைக்காரன் கெஞ்சினான்: “அரசே, நான் உங்களுக்குப் பத்து வருடங்களாக உண்மையாக வேலை செய்தேன். ஒரு சிறு தவறுக்காக இன்று இப்படி ஒரு தண்டனை எனக்குத் தரலாமா? தயவுசெய்து என்னை அந்த நாய்களுக்கு இரையாக்குவதற்கு முன், பத்து நாட்கள் மட்டும் அவகாசம் தாருங்கள்.” ராஜாவும் அதற்கு ஒப்புக்கொண்டார்.
இந்த பத்து நாட்களில் அந்த வேலைக்காரன் நாய்களைப் பராமரிக்கும் காவலரிடம் சென்று, “அடுத்த பத்து நாட்களுக்கு நான் இந்த நாய்களுக்குச் சேவை செய்ய விரும்புகிறேன்,” என்றான். காவலர் குழப்பமடைந்தாலும் சரி என்று ஒப்புக்கொண்டார். வேலைக்காரன் அந்த நாய்களுக்கு உணவளித்தான்; அவற்றைச் சுத்தம் செய்தான்; குளிப்பாட்டினான். அவற்றிற்கு அனைத்து விதமான வசதிகளையும் செய்து கொடுத்து, மிகுந்த அன்பு காட்டினான்.
பத்து நாட்கள் முடிந்தன. வேலைக்காரனை நாய்களிடம் தூக்கி எறியும்படி அரசர் உத்தரவிட்டார். அவன் நாய்களிடையே தூக்கி எறியப்பட்டபோது, அந்த நாய்கள் அவனைக் கடிக்காமல், ஓடி வந்து அவனது கால்களை நக்கத் தொடங்கின. இதைக் கண்டு அனைவரும் வியந்தனர்!
திகைத்த அரசன், “நாய்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டான். அதற்கு அந்த வேலைக்காரன் சொன்னான்:
“அரசே, நான் பத்து நாட்களுக்கு மட்டுமே இந்த நாய்களுக்குச் சேவை செய்தேன். அவை என் அன்பை மறக்கவில்லை. ஆனால், நான் உங்களுக்குப் பத்து வருடங்கள் சேவை செய்தும், எனது முதல் தவறைக்கூட மன்னிக்காமல், நான் செய்த நன்மைகள் அனைத்தையும் மறந்து என்னைத் தண்டிக்க உத்தரவிட்டீர்கள்.”
உடனே அரசர் தனது தவறை உணர்ந்து, அந்த வேலைக்காரனை விடுவித்தார்.
குட்டீஸ்... தெரிந்து கொண்டீர்களா? நம்மில் எத்தனையோ பேர் இப்படித்தான் இருக்கிறோம். ஒருவர் செய்த ஒரு சிறு தவறுக்காக, அவர் நமக்குச் செய்த உதவிகளை எல்லாம் மறந்து, அவர்களை வாழ்நாள் முழுவதும் ஒதுக்கி விடுகிறோம். தவறு செய்வது மனித இயல்பு; ஆனால், அதை உணர்ந்து மன்னிப்பதே உயரிய குணம். எனவே, மற்றவர் செய்த நன்மைகளை நினைவில் கொள்வோம்; தவறுகளை மறப்போம்... மன்னிப்போம்!