கண்ணைக் கவரும் 'கலைடாஸ்கோப்'
ஸ்கோப்புகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒரு விதம்.
டாக்டர்களின் கழுத்தில் தொங்கும் ஸ்கோப்: ஸ்டெதாஸ்கோப் (Stethoscope).
நுண்ணுயிர்களைப் பார்க்க உதவுவது: மைக்ரோஸ்கோப் (Microscope).
தூரத்து கிரகங்களையும் விண்மீன்களையும் நம் கண் முன் நிறுத்தும்: டெலஸ்கோப் (Telescope).
நம் விழிகளை ஊடுருவிப் பார்க்க: ஆப்தல்மஸ்கோப் (Ophthalmoscope).
காதினுள் இருப்பதைக் காட்டிக் கொடுக்கும் ஸ்கோப்: ஒடோஸ்கோப் (Otoscope).
நீர்மூழ்கிக் கப்பல்களில் நீர் மட்டத்திற்கு மேல் என்ன நடக்கிறது என்பதைக் வெளிச்சம் போட்டுக் காட்டுவது: பெரிஸ்கோப் (Periscope).
இன்னும் எத்தனையோ ஸ்கோப்புகள் இருக்கின்றன. இவைகள் எல்லாவற்றிலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது என்ன ஸ்கோப் சொல்லுங்க பார்ப்போம்?
அது வேறு எதுவும் இல்லை, நம்ம கலைடாஸ்கோப்! (Kaleidoscope)
கலைடாஸ்கோப் எனும் வண்ணக் குழல்
இது ஒரு குழல். அதனுள் கண்ணாடிகள் உள்ளன. அவைகள் பல்வேறு டிசைன்களில் பிரதிபலிக்கும் வண்ண வண்ண வானவில் துண்டுகள். கைகளில் வைத்து உருட்டினால் உருவங்கள் மாறி மாறி வரும். அப்படித் தோன்றும் வடிவங்கள் கணக்கற்றவை. ஒருமுறை வரும் பேட்டர்ன் மறுமுறை வராது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். முன்பெல்லாம் திருவிழாக்களில் இதை விற்காத பொம்மைக் கடைகளே இல்லை.
கலைடாஸ்கோப்பின் வரலாறு
இதை முதலில் செய்து அறிமுகப்படுத்திய பெருமை ஸ்காட்லாந்தைச் சேர்ந்த சர் டேவிட் ப்ரூஸ்ட்டர் என்ற கண்டுபிடிப்பாளரையே சேரும்.
Kaleidoscope என்ற இதன் பெயர் கிரேக்க மொழியில் இருந்து வந்ததாகும்.
Kalos என்றால் 'beautiful' (அழகு) என்றும்,
eidos என்றால் 'பார்க்கப்படும் பொருள்' என்றும்,
skopeo என்றால் 'தோற்றம்' என்றும் அர்த்தம்.
இந்த மூன்று கிரேக்க வார்த்தைகளைச் சேர்த்துதான் 'Kaleidoscope' என்ற பெயரை இந்தக் வண்ணக் குழலுக்கு வைத்தார் இதைக் கண்டுபிடித்தவர்.
இதில் எல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், குழந்தைகளைக் குஷிப்படுத்தும் விளையாட்டுப் பொருளாக மட்டுமல்லாமல், ஓவியங்கள் வரைபவர்களுக்கும் டிசைனர்களுக்கும் அவர்கள் கற்பனைகளைத் தூண்டும் தூண்டுகோலாகவும் இது பயன்படுகிறது.
கலைடாஸ்கோப் மட்டும் இருந்தால் போதும், உருட்டோ உருட்டென்று உருட்டலாம்!

