

கனடாவைச் சேர்ந்த சித்தார்த் படேலுக்கு வயது 12. டோரோண்டோவிற்கு மேற்கில் உள்ள ஒண்டாரியோவில் வசிக்கும் சித்தார்த் வானவியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவன். அவன் புதிதாக 2024RX69 மற்றும் 2024RH39 என்ற இரு புதிய குறுங்கோள்களைக் கண்டுபிடித்துள்ளான். இண்டர்நேஷனல் அஸ்ட்ரானமிகல் யூனியனின் ஒரு கிளையான மைனர் ப்ளானட் செண்டரில் அவனது கண்டுபிடிப்பு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
“சிறு வயதிலிருந்தே எனக்கு வானவியலில் ஆர்வம் உண்டு. ஒரு டெலஸ்கோப்பை வைத்து ஐந்து வயதிலிருந்தே வானத்தில் உள்ள கிரகங்களையும் நட்சத்திரங்களையும் பார்த்துக் கொண்டிருப்பேன். விண்வெளி பற்றி பள்ளிக்கூடத்தில் ஒன்றும் சொல்லித் தருவதில்லை. பள்ளியை விட்டு வந்தவுடன் எனது வேலையை ஆரம்பித்து விடுவேன்” என்கிறான் சித்தார்த்.
இந்த இரண்டு குறுங்கோள்களும் தங்கள் சுற்று வட்டப் பாதையில் பத்து வருடம் சுற்றும் என்பதால் சித்தார்த் இன்னொரு பெரிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளான். ஒரு விண்வெளி வீரராக ஆவது என்பது தான் அது! எப்படி விமானத்தை இயக்குவது என்பதைக் கற்க ராயல் கனடியன் ஏர் காடட்ஸ்- இல் அவன் சேர்ந்துள்ளான்.
இங்கு தான் ஜெர்மி ஹான்ஸன் என்ற விண்வெளி வீரர் உள்ளார். இவர் அடுத்த ஆண்டு நாஸாவின் ஆர்டிமிஸ் 2 திட்டத்தின் கீழ் சந்திரனைச் சுற்றிப் பறக்க இருக்கிறார். இன்னொரு வீரரன கிறிஸ் ஹட்ஃபீல்ட் என்பவர் தான் பன்னாட்டு விண்வெளி நிலையத்தை இயக்கும் முதல் கனடிய குடிமகன் ஆவார்.
இண்டர்நேஷனல் அஸ்ட்ரானமிகல் செர்ச் கொலாபரேஷன் திட்டத்தில் சேர்ந்து இந்த இரு குறுங்கோள்களை சித்தார்த் கண்டான். இந்த இரு குறுங்கோள்களும் செவ்வாய் கிரகத்திற்கும், வியாழ கிரகத்திற்கும் இடையே உள்ளன.
இந்தச் சாதனை தான் சித்தார்த்தின் முதல் சாதனை என்பதில்லை. இதற்கு முன்னமேயே பால் வீதி எனப்படும் மில்கி வே - இல் அவன் ஒரு வால்மீனைப் (காமட்) படம் பிடித்து புகைப்படப் போட்டியில் பரிசு பெற்றுள்ளான்.
“டெலஸ்கோப் மூலமாகப் போட்டொ பிடிப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. நிறைய நட்சத்திரங்களைப் பார்த்து விட்டால் எனது ஆச்சரியம் எல்லையைக் கடந்து விடும். விண்வெளி என்பது எவ்வளவு மர்மம் நிறைந்தது என்பதை நான் அறிந்து கொண்டேன்” என்கிறான் சித்தார்த்.
வாழ்த்துவோம். 12 வயது வானவியல் விஞ்ஞானியை... எதிர்கால விண்வெளி வீரரை!