
ரகு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன். அவன் வீட்டில் ஒரு குடும்பம் குடியிருந்தது; அதில் எழுபது வயது முதியவரும் இருந்தார்.
ரகுவின் தந்தை மிகவும் கண்டிப்பானவர். விளையாடிவிட்டு, தினமும் ஏழு மணிக்கு படிக்க உட்கார்ந்துவிட வேண்டும் என்பது ரகுவின் தந்தையின் கட்டளை.
அவனும் அப்பாவிற்குப் பயந்து சரியாக ஏழு மணிக்கு படிக்க உட்கார்ந்துவிடுவான். அப்பா அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வர இரவு பத்து மணி ஆகிவிடும். ரகுவின் அம்மா, "ரகு! சாப்பிட்டு படி" என்று கெஞ்சுவாள். பின் அவளே அருகில் வந்து பார்க்கும்போதுதான், அவன் நன்கு குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருப்பது தெரியும். 'சரி, ரொம்ப விளையாடி இருப்பான். அதான் களைப்பாக இருந்திருக்கும்' என்று அந்தத் தாய் மனம் நினைத்து, அவனை கைத்தாங்கலாக அணைத்து அழைத்துப்போய் இரவு சாப்பாடு போடுவாள். தினம் தினம் நிகழும் நிகழ்வு.
அன்றும் அவன் சரியாக ஏழு மணிக்கு படிக்க உட்கார்ந்தான். தாத்தா வந்தார்.
"என்ன வேணும் தாத்தா?" என்றான் ரகு.
"உன் புத்தகத்தைத் தர்றியா?"
"ஏன் தாத்தா? இந்த வயசுல நீங்க என்னத்த படிக்கப் போறீங்க?"
"நீயும் தான் என்னத்த படிக்கிறே? நானும் தினமும் பார்த்துட்டுதான் கேக்கறேன்" என்றார் தாத்தா.
"விவரமா சொல்லுங்க தாத்தா" என்றான் ரகு.
"தம்பி ரகு, நானும் தூக்க மாத்திரை ஒண்ணு போட்டேன். இப்ப இரண்டும் போட்டுக்கறேன். ஆனாலும் தூக்கமே வரமாட்டேங்குது. ஆனா நீ இந்த புத்தகத்தை கையில் எடுத்த பத்து நிமிடத்துல அப்படி குறட்டை விட்டுத் தூங்கறியே. அந்த காரணத்துக்காகத்தான்டா கேட்டேன். எனக்காகக் கொடு ரகு. நான் படித்தவுடன் பத்து நிமிடத்தில் தூங்கிடுவேன். அப்ப எடுத்துட்டுப் போயிடு."
குறிப்பு: சிறார்களே, கதையை எப்படி முடிக்கலாம்?
1. புத்தகத்தைக் கொடுத்து தாத்தாவைத் தூங்கச் செய்யலாமா?
2. தாத்தாவின் பேச்சில் வெட்கப்பட்டு ரகு திருந்தியவனாக ஒழுங்காகப் படிக்கச் செய்யலாமா?