விலங்குலகத்தில் இரண்டாவது பெரிய தொகுதியான மெல்லுடலிகள் தொகுதியைச் சேர்ந்தவைதாம் நத்தைகள். பெரும்பாலான சுற்றுச்சூழல் நிலப்பரப்புகளிலும் இந்த நத்தைகள் பரவிக் காணப்படுகின்றன. நத்தைகளைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள் இதோ:
நத்தைகளின் ஓடானது கால்சியம் கார்பனேட்டால் ஆனது; வயதிற்கு ஏற்ப ஓடானது வளரும்.
பாதுகாப்பற்ற நிலையில், நத்தைகள் தங்களின் பாதுகாப்பு கவசமான ஓட்டிற்குள் மறைந்து கொள்ளும். நத்தைகள் மெதுவாகத் தன் உடலை வளைத்து, நெளிந்து, சுருக்கி ஊர்ந்து செல்லக் கூடியவை.
மரப்பட்டைகள், ஈரமான சூழ்நிலை, வயல்வெளிகள், பொந்துகள் போன்றவை நத்தைகளுக்கு விருப்பமான இடங்களாக அமைகின்றன.
பொதுவாக இலைகள், பூக்கள், சிறிய தண்டுகள் மற்றும் மண்ணில் உள்ள கரிமப் பொருட்கள் போன்றவற்றை உணவாக உட்கொள்கின்றன.
ஒரு சராசரி நத்தையில் 80% நீர், 15% புரதம் மற்றும் 2.4% கொழுப்பு உள்ளது. அவை அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், கால்சியம், இரும்பு, செலினியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் E, A, K மற்றும் B12 ஆகியவற்றின் வளமான மூலமாகும்.
பல வண்ண கூம்பு வடிவ நத்தையானது (Conus marmoreus / marbled cone snail) வெளியேற்றும் அபாயகரமான நச்சானது பார்வை கோளாறையும், சுவாசத் தடையையும் ஏற்படுத்தி இறுதியில் மரணத்தையும் ஏற்படுத்துகிறது. இதனை குணப்படுத்த எதிர்மருந்து கிடையாது.
கடல் நத்தைகள், தரை நத்தைகள், நன்னீர் நத்தைகள் என்று பல வகைகள் உள்ளன. குளிர்காலங்களில், நத்தைகள் பெரும்பாலும் குளிர் உறக்கங்களை விரும்புகின்றன.
மிகப்பெரிய நன்னீர் நத்தைகளாக ஆப்பிள் நத்தைகள் விளங்குகின்றன. இதன் தோற்றம் ஆப்பிள் வடிவில் காணப்படும். இவை சற்று பெரியதாக இருக்கும்.
உலகம் முழுவதும் ஏறத்தாழ 18,000 நத்தை வகைகள் காணப்படுகின்றன. மேலும், அவை மலைகள், காடுகள், சதுப்பு நிலங்கள் போன்ற இடங்களில் வாழ்கின்றன.
ஓடில்லா அல்லது குறைந்த ஓடுகளைக் கொண்ட நத்தைகளும் காணப்படுகின்றன. இதனை ஆங்கிலத்தில் slugs என்றும் குறிப்பிடுவர்.
ஒரு சில மக்களால், நத்தைகள் இன்றுவரை உணவாக உண்ணப்படுகின்றன.