எத்தனை விதமான கார்கள், பைக்குகள் வந்தாலும் சைக்கிளை விரும்பி ஓடும், ஓட்டும் கூட்டம் ஒன்று இன்றும் இருக்கத்தான் செய்கிறது. காரணம், அதனால் உடலுக்குக் கிடைக்கும் ஆரோக்கியம், எரிபொருள் செலவு இல்லாமை மற்றும் அதனை ஓட்டுவதால் கிடைக்கும் தனி சுகம். இந்தச் சைக்கிள் உருவான கதை சற்று சுவராசிய மானது. முன்பு நகரம், கிராமம் என்ற பாகுபாடின்றி உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து தரப்பு மக்களின் முதன்மையான போக்குவரத்து வாகனமாக விளங்கியது சைக்கிள். ‘இந்தச் சைக்கிளைக் கண்டுபிடித்தவர்கள் நாங்கள்’ என்று ஒரு சாரார் மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது.
17-ஆம் நூற்றாண்டில் பிரான்ஸில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் கோம்டி மீடி டீ ஷிவ்ராக் (Comte Mede De Sivrac). இவர் காய்ந்த மரத்துண்டுகளை எடுத்து வந்து செதுக்கி வீட்டிற்குத் தேவையான அலங்காரப் பொருட்களைச் செய்பவர். அப்படி அவர் மரத்துண்டுகளை வைத்து உருவாக்கியதுதான் மிதிவண்டி.
1791-ஆம் ஆண்டு மரத்துண்டுகளால் செய்யப்பட்ட சைக்கிள் ஒன்றை வடிவமைத்தார். இதில் பெடல், பிரேக், ஸ்டீயரிங் என்று எதுவுமே கிடையாது. 1794-ஆம் ஆண்டில் தனது கண்டுபிடிப்பை பொதுமக்கள் மற்றும் அறிஞர்கள் முன்னிலையில் விளக்கிக் காட்டினார். இந்த நிகழ்வுதான் சைக்கிள் உருவாவதற்குக் காரணமாக அமைந்தது. 1700களின் பிற்பகுதியில் கைப்பிடி இல்லாத ‘ஹேப்பி ஹார்ஸ்’ என்று காலால் தரையை உந்தித் தள்ளி ஓட்டினார்கள். இது ஓட்டுவதற்கு கஷ்டமாக இருந்தாலும் ஜாலியாக இருந்தது. இதற்கு பெயர் ‘டிரப்சினா’.
ஷிவ்ராக்கின் தொழில்நுட்பத்தை முன் மாதிரியாகக் கொண்டு ஜெர்மனியை சேர்ந்த கார்ல் வோன் ட்ராய்ஸ் (karl von Drais))1817-ஆம் ஆண்டு சைக்கிள் ஒன்றை வடிவமைத்தார். மரத்தினால் வடிவமைக்கப் பட்டிருந்த இவரது சைக்கிளில்தான் முதன்முதலாக திசைமாற்றி எனப்படும் ஸ்டீயரிங் வடிவமைக்கப் பட்டிருந்தது. முப்பது கிலோ வரை எடை கொண்டதாக இருந்த இந்தச் சைக்கிள் 1818-ஆம் ஆண்டு பாரிஸில் உள்ள புதிய கண்டுபிடிப்புகளைப் பாதுகாக்கும் நிறுவனம் ஒன்றில் பதிவு செய்யப்பட்டு காப்புரிமை பெறப்பட்டது. உலகிலேயே முதன்முதலில் காப்புரிமை பெறப்பட்ட சைக்கிள் இதுதான்.
1839-ஆம் ஆண்டு கிராங்க் மூலம் பின் சக்கரத்துடன் பெடல்கள் இணைக்கப்பட்ட சைக்கிளை கிர்க் பேட்ரிக் மெக்மில்லன் உருவாக்கினார். இதுதான் ஆரம்பக்கட்ட சைக்கிள்.
1861-ல் பிரான்ஸ் நாட்டின் எர்னெஸ்ட் மிக்காவ்ஸ் இன்னும் சுலபமாக பயன்படுத்தக்கூடிய சைக்கிள்களாக அதை மேம்படுத்தினார். அதன் பெடல்கள் முன்சக்கரத்தோடு இணைக்கப்பட்டிருந்தன. தனது கடின உழைப்பின் பயனாக 1863-ஆம் ஆண்டு கிராங்க் (Crank) மற்றும் பால் பியரிங் (Ball Bearing) கொண்டு வடிவமைக்கப்பட்டப் பெடல் ஒன்றைத் தயாரிப்பதில் வெற்றி பெற்றார். காலப் போக்கில் இது முன் சக்கரம் பெரிதாக மாறி 'பென்னி பார்த்திங்' என்று அழைக்கப்பட்டது.
1870-ஆம் ஆண்டு வரை சைக்கிளின் முக்கியப் பாகங்கள் அனைத்தும் உலோகத்தைப் பயன்படுத்தி தயாரித்திருந்தாலும் கூட சைக்கிளின் சக்கரம் மட்டும் மரத்தினால் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ஸ்டெர்லி (James Starley) என்ற கொல்லருடன் இணைந்து இரும்பினாலான சைக்கிள் சக்கரத்தைத் தயாரிக்கும் பணியில் இறங்கினார். 1871-ஆம் ஆண்டு சக்கரத்தின் முக்கியப் பாகங்களைத் தயாரிப்பதில் வெற்றி கண்டார். இவர் 1872-ஆம் ஆண்டு தயாரித்து வெளியிட்ட சைக்கிள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனை பெண்களும் பயன்படுத்தத் தொடங்கினர்.
சைக்கிள் தயாரிக்கும் தொழில் நுட்பத்தில் ஒரு மைல்கல்லாக 1876-ஆம் ஆண்டு ஹென்றி லாசன் (Henry Lawson) என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியாளர் பல்சக்கரம் (Sprocket) மற்றும் சங்கிலி (Chain) ஆகிய இரண்டு முக்கிய பொருட்களை கண்டறிந்து அறிமுகப் படுத்தினார். இந்தக் கண்டுபிடிப்பு வாகனத் தொழில்நுட்பத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தியது.
இன்றைய நவீன சைக்கிளின் தந்தை என்று அழைக்கப்படும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் கெம்ப் ஸ்டேர்லி (John Kemp Starley) என்பவர் 1885-ஆம் ஆண்டு புதிய சைக்கிள் ஒன்றை வடிவமைத்து வெளியிட்டார். அவர் வடிவமைத்த சைக்கிள்தான் இன்று நாம் பயன்படுத்துவது.
1885-ஆம் ஆண்டில்தான் இன்றைய சைக்கிள் அறிமுகமானது. ஜான் ஸ்டெர்லிங் என்பவர் தயாரித்த ‘ரோவர் சேப்டி’ சைக்கிள்தான் அது. 1888ம் ஆண்டில் பிரிட்டன் சாலைகளில் சைக்கிள் பயணம் அனுமதிக்கப் பட்டது. ஆனால், ஓட்டுபவர் தொடர்ந்து மணி அடித்துக்கொண்டே செல்ல வேண்டும் என்ற விதி இருந்தது.
1888-ஆம் ஆண்டு ஜான் பாய்ட் டன் லப் (John Boyd Dunlop) என்ற ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர் மிதிவண்டிக்குத் தேவையான ரப்பர் டயர் மற்றும் டியூப் ஆகியவற்றை தயாரிக்கும் தொழில்நுட்பத்தினைக் கண்டறிந்தார். இதனைத் தொடர்ந்து சர் எட்முன்ட் கிரேன் (Sir Edmund Crane) என்பவர் ஜான் கெம்ப் ஸ்டேர்லி மற்றும் ஜான் பாய்ட் டன் லப் ஆகியோருடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு 1910-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிலுள்ள அஸ்டன் நகரில் 'ஹெர்குலிஸ்' என்ற சைக்கிள் கம்பெனியை ஆரம்பித்தார். சைக்கிள் கம்பெனி உற்பத்தி தொடங்கிய பத்து ஆண்டுகளில் உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சாலைகளில் சைக்கிள் ஓட ஆரம்பித்தன.