‘மனிதர்களைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?’ என்றது வானம்பாடி.
‘மனிதன் என்றால்?...’ விழித்தது மைனா.
‘இரண்டு கால்களால் நடந்து செல்வார்களே... பார்த்ததில்லையா?’
‘ஓ, அவர்களா! என்னை அவர்கள் கவர்ந்ததே இல்லை.’
‘அடடா, மனிதர்கள் சுவாரஸ்யமானவர்கள் மைனா! அவர்களை நீ இன்னும் நன்றாகக் கவனிக்கவேண்டும்.’
‘அப்படி என்ன சுவாரஸ்யத்தை நீ கண்டுவிட்டாய்?’ என்று மெலிதாகக் கிண்டலடித்தது மைனா.
‘வண்ண வண்ணத் துணிகளைக் கொண்டு அழகாகத் தங்களை அலங்கரித்துக்கொள்கிறார்கள். மனிதர்களின் கூடுகள் அழகானவை. புதிது புதிதாகப் பொருள்களைக் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறார்கள். இன்னும்...இன்னும்... சொல்லிக்கொண்டே போகலாம்.’
மைனா தன் தலையைத் திருப்பிக்கொண்டது. ‘மனிதர்கள் மட்டுமல்ல... ஒவ்வொரு உயிரும் ஏதாவது புதிது புதிதாக கண்டு பிடித்துக்கொண்டுதான் இருக்கிறது, வானம்பாடி! சிலருக்கு இரண்டு கால், சிலருக்கு நான்கு கால். மற்றபடி பெரிய வித்தியாசம் எல்லாம் இல்லை.’
‘ஆம்! மைனா சொல்வது சரிதான்’ என்றபடி படபட வென்று தன் இறக்கைகளை அடித்துக்கொண்டே வந்து வானம்பாடியின் பக்கத்தில் வந்து அமர்ந்துகொண்டது தேன்சிட்டு.
‘தேன்சிட்டு! நீயும் மைனா பக்கம் சேர்ந்துவிட்டாயே. நீதான் அதிகம் ஊர் சுற்றியவள். நிறையப் படித்தவள். உனக்கும் மனிதர்களைப் பிடிக்கவில்லையா?’
‘வானம்பாடி! இன்று நேற்றல்ல... பல ஆண்டுகளாக மனிதர்களை நான் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறேன். என் தாத்தா, தாத்தாவின் தாத்தா என்று எங்கள் குடும்பமே மனிதர்களை ஆராய்ச்சி செய்திருக்கிறது. மைனாவின் வார்த்தைகளில் உண்மை இருக்கிறது. மனிதர்கள் நம் எல்லோரையும் போன்றவர்கள். அது மட்டுமல்ல.. அவர் களில் பலர் ஆபத்தானவர்கள்.’
வானம்பாடி அதிர்ச்சியுடன் தேன்சிட்டைப் பார்த்தது. ‘ஏன் அப்படிச் சொல்கிறாய்?’
தேன்சிட்டு தனது கீச்சுக் குரலில் தொடர்ந்தது. ‘மனிதர்களின் கணக்குப்படி இப்போது உலகம் 23ம் நூற்றாண்டில் நுழைந்திருக்கிறது. இந்த உலகம் இப்போது எப்படி மாறியிருக்கிறது பார்த்தாயா? பறவைகள், மிருகங் கள், மீன்கள், தாவரங்கள் என்று எத்தனையோ உயிரி னங்கள் அழிந்துவிட்டன; காடுகள் மாயமாக மறைந்துவிட் டன. நம்மைப் போன்றவர்கள் இயற்கையை நேசித்து, இயற்கையின் ஒரு பகுதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்கள் இயற்கையோடு சண்டையிட்டு, இயற்கையைத் தோற்கடித்துவிட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.’
மைனா துள்ளிக் குதித்தது. ‘ஆமாம்! இப்போது இந்த ஊரில் மொத்தம் பத்து மரங்கள்தான் இருக்கின்றன. அதில் ஒன்றில்தான் நாம் இப்படி நெருக்கியடித்து உட்கார்ந்திருக் கிறோம். வானத்தைக்கூட மனிதர்கள் விட்டுவைக்க வில்லை. பல கிரகங்களில் அவர்கள் குடியேறிவிட்டார்கள். இன்னும் ஒரு நூற்றாண்டு போனால் மனிதர்கள் மட்டும் தான் இங்கே இருப்பார்கள்.’
வானம்பாடி தலையைக் குனிந்துகொண்டது. ‘நான் இதையெல்லாம் யோசிக்கவேயில்லை. மனிதர்கள் இந்த உலகின் மன்னர்கள் என்று நினைத்துவிட்டேன்.’
‘அவர்களும் அப்படி நினைத்துக்கொண்டதுதான் பிரச்னையே!’ என்றது தேன்சிட்டு. ‘ஆரம்பத்தில் அவர்கள் நம்மைப் போல்தான் இருந்தார்கள். பறவைகளையும் விலங்குகளையும் நேசித்தார்கள். காடுகளைக் கண்டு பிரமித்தார்கள். கவிதை, கதை எழுதினார்கள். காலம் மாற மாற, மனிதர்களும் மாறினார்கள். கருவிகள் செய்யத் தொடங்கினார்கள். இயற்கையிடம் இருந்து தங்களைக் காத்துக்கொள்கிறோம் என்றார்கள். இன்று இயற்கைதான் அவர்களிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.’
‘இப்போது என்ன செய்கிறார்கள்?’ என்றது வானம்பாடி.
‘மீண்டும் புதிய கருவிகள் செய்ய ஆரம்பித்துவிட் டார்கள். நாய் வளர்த்தார்கள்; அது ஓடிவிட்டது. பறவை களைக் கூண்டில் வைத்து வளர்த்தார்கள்; அவை பறந்து விட்டன. வீட்டுக்குள் செடி வளர்த்தும் பார்த்தார்கள்; வளரவில்லை! இயற்கைக்கு அவர்கள்மீது கோபம் வந்துவிட்டதா என்று தெரியவில்லை. ஆனால் அவர் களுக்கு இயற்கை மீது கோபம் வந்துவிட்டது. ரோபோக்களை உருவாக்கத் தொடங்கிவிட்டார்கள். ரோபோ நாய், ரோபோ பறவை, ரோபோ செடி.’
வானம்பாடியின் உடல் நடுங்கியது. ‘கேட்கவே பயமாக இருக்கிறதே.’
மைனா வானம்பாடியை நெருங்கி வந்தது. ‘நீ பார்த்து ரசித்துக்கொண்டிருப்பது ரோபோக்களை. ரோபோவும் அச்சு அசலாக மனிதர் களைப் போலவே சிந்திக்கிறது.’
வானம்பாடி விழித்தது. ‘எது மனிதன், எது ரோபோ என்று எப்படிக் கண்டுபிடிப்பது?’
‘அதற்கொரு வழி இருக்கிறது’ என்றது தேன்சிட்டு. ‘ஒரு பூவைப் பார்த்தவுடன் மலர்ந்தால் மனிதன்; ஒரு ரோபோவுக்கு எதையுமே ரசிக்கத் தெரியாது. ‘ஓ! பூ மலர்ந்தால் எனக்கென்ன?’ என்று அது தன் வேலையைப் பார்க்கப் போய்விடும்.’
‘இதையெல்லாம் ஏன் நீ மனிதர்களிடம் சொல்வதில்லை? யாராவது சொன்னால்தானே அவர்களுக்குத் தெரியும்?’
தேன்சிட்டு புன்னகைத்தது. ‘ஆயிரம் ஆண்டுகளாக இதைத்தான் நாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம். பறவைகள் கத்துகின்றன என்று அவர்கள் காதுகளை மூடிக்கொள்கிறார்கள். அல்லது நம்மை விரட்டிவிடு கிறார்கள்.’
‘மனிதர்கள் மீண்டும் பழையபடி எப்போது மாறுவார்கள்?’ வானம்பாடி ஏக்கத்துடன் கேட்டது. மைனா, தேன்சிட்டு இரண்டும் அமைதியாக இருந்தன. வானம்பாடி கிளையை விட்டு சோகத்துடன் பறந்துபோனது.
மைனா, தேன்சிட்டு பக்கம் திரும்பியது. ‘இந்த வானம் பாடி ஏன் மனிதர்களை ரசித்துக்கொண்டிருக்கிறது?’
தேன்சிட்டு கிறீச்சிட்டது. நாம் இப்போது பேசிக்கொண் டிருந்தது, பறவையிடம் அல்ல. வானம்பாடி ரோபோ விடம். ஆனால் தான் ஒரு ரோபோ என்று அதற்குத் தெரியாது.’
‘ஆ!’ என்று தன் சின்ன வாயை அகலமாகத் திறந்தது மைனா.
தேன்சிட்டு சிரித்தது. ‘பயப்படாதே. ரோபோவுக்கு உயிர் கொடுப்பதுதான் நம் வேலை. இந்த வானம்பாடியை நிஜ வானம்பாடியாக நாம் மாற்றவேண்டும். அதை மட்டும் செய்துவிட்டால் ரோபோவை நம்மால் மனிதனாக மாற்றமுடியும். இயற்கையை மீண்டும் அழைத்து வரவும் முடியும். அதற்கு உன் உதவி தேவை.’
மைனா தலையசைத்தது. தேன்சிட்டு மைனாவை நெருங்கித் தன் சிறகுகளால் மூடிக்கொண்டது. ‘ஒரு போதும் வானம்பாடியிடம் உண்மையைச் சொல்லி விடாதே. அது பறவையாகவே இருக்கட்டும்.’