

குட்டீஸ்! கோடை வெயில் சுட்டெரிக்கையில், இதமாகத் தண்ணிக்குள்ளேயே இருக்கலாம் போல இருக்கிறது அல்லவா? குட்டை, குளம், ஏரி, ஆறு, கண்மாய், கிணறு என்று எங்கெல்லாம் தண்ணீர் இருக்கிறதோ, அங்கெல்லாம் போய் நீச்சலடிக்க ஆசையாக இருக்குமே!
இதில் இந்த ஆறு இருக்கிறதே, அதுதான் ரொம்ப முக்கியமானது! மழை அதிகமாகப் பெய்யும் இடத்திலிருந்து, மழை குறைவாகப் பெய்யும் இடங்களுக்குத் தண்ணீரைக் கொண்டு சேர்ப்பதோடு, அதிகமான தண்ணீரைக் கடலில் கொண்டு சேர்க்கும் வேலையையும் இந்த ஆறுகள்தான் செய்கின்றன.
நம் நாட்டில் கங்கை, காவிரி, பிரம்மபுத்ரா எனப் பல ஆறுகள் இருப்பது உங்களுக்குத் தெரியும்தானே? உலகத்திலேயே நீளமான ஆறுகள் எவை என்றும், அவை எங்கே ஓடுகின்றன என்றும் இப்போது நாம் தெரிந்துகொள்வோமா? ஆற்றுக்கு 'நதி' என்ற இன்னொரு பெயரும் உண்டு என்பது உங்கள் எல்லாருக்கும் தெரிந்ததுதானே!
பூமியில் ஓடும் மிக நீளமான 5 முக்கிய நதிகளைப் பற்றி இப்போது பார்ப்போம்:
நைல் (Nile): உலகத்திலேயே மிக நீளமான நதி 'நைல்'. இது ஆப்பிரிக்காவில் ஓடுகிறது. இதன் நீளம் எவ்வளவு தெரியுமா? 6,695 கிலோமீட்டர்! இதுதான் நீளத்தில் நம்பர் ஒன்!
அமேசான் (Amazon): இரண்டாவதாக வருவது 'அமேசான்' நதி. இதன் நீளம் 6,448 கி.மீ! இது தென் அமெரிக்காவில் ஓடுகிறது.
யாங்க்ட்சே (Yangtze): மூன்றாவது இடத்தைப் பிடிப்பது 'யாங்க்ட்சே' நதி! இது 6,378 கி.மீ நீளத்திற்கு ஓடுகிறது. இதன் ஓட்டம் முழுவதும் சீன நாட்டில்தான்!
மிசிசிபி - மிசௌரி (Mississippi - Missouri): நான்காவது இடத்திலுள்ளது மிசிசிபி/மிசௌரி. வட அமெரிக்காவில் ஓடும் இதன் நீளம் 6,228 கி.மீ!
ஓப் (Ob): 'ஓப்' நதிதான் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது! இதனோட நீளம் 5,570 கி.மீ! இந்த நதி ரஷ்ய நாட்டில் ஓடுகிறது.
யாங்க்ட்சேவும், ஓப்பும் ஆசியக் கண்டத்தில் ஓடுகின்றன. உலகத்திலுள்ள 5 நீளமான நதிகளில் இரண்டு நாம் வாழும் ஆசியக் கண்டத்திலேயே ஓடுகின்றன என்பது சிறப்பான விஷயம்!
இன்னொரு உண்மையைச் சொன்னால் உங்களால் நம்பவே முடியாது குட்டீஸ்! அதுவும் நதிகள் பற்றியதுதான். கனடா நாட்டில் ஓடும் 1,705 கி.மீ நீளமுள்ள ஒரு நதி, குளிர் காலத்தில் முழுவதுமாக உறைந்து பனிக்கட்டியாகி விடுமாம்!
சரி, அதிக நீளமுள்ள நதிகள் ஐந்தைப் பற்றிப் பார்த்தோம். மிகவும் குட்டையான, அதாவது உலகிலேயே நீளம் குறைந்த ஒரு நதி எது என்று இப்போது தெரிந்து கொள்வோமா? அந்த நதியின் பெயர் 'ரோ நதி' (Roe River)! (இதை 'ரோஸ் ரிவர்' என்றும் குறிப்பிடுவர்). அது அமெரிக்காவின் 'மொண்டானா'வில் ஓடுகிறது. அதன் நீளம் எவ்வளவு இருக்கும் என்று 'கெஸ்' பண்ணுங்க பார்க்கலாம்!
என்ன? ஒன்றும் ஐடியா இல்லையா? கவலைப்படாதீர்கள், நானே சொல்லிவிடுகிறேன்! அதன் நீளம் வெறும் 61 மீட்டர் தான்!
சரி, ஒரு கொசுறுச் செய்தியோடு இதை முடிப்போமா! ரஷ்ய நாட்டிலுள்ள 'பைகல்' (Baikal) ஏரிதான் உலகிலுள்ள ஏரிகளிலேயே மிகவும் ஆழமானது. 5 ஈபிள் டவர்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கினாலும், அது தண்ணீருக்கு மேல் தெரியாத அளவுக்கு அந்த ஏரியின் ஆழம் இருக்குமாம்! இதன் ஆழம் 1,741 மீட்டர், அதாவது சுமார் ஒன்றே முக்கால் கி.மீ!
குட்பை குட்டீஸ்! - டில் நெக்ஸ்ட்!
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here