

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்!’ என்ற உயரிய தத்துவத்தை உலகுக்கு உணர்த்தியவர்கள் நம் முன்னோர்! அதாவது, எல்லா ஊரும் நமது சொந்த ஊர் போலவே என்றும், எல்லா மக்களும் நம் உறவினர்கள் போலவே என்றும் சொல்லிச் சென்றார்கள் குட்டீஸ்! ஆனாலும் மனிதர்களாகிய நமக்குள் பல பிரிவினைகள்; பல நாடுகளிடையே போர்கள்!
கடந்த 20-ஆம் நூற்றாண்டில்தான் உலகில் அதிகப் போர்கள் நிகழ்ந்துள்ளன. அந்த நூற்றாண்டின் ஒவ்வொரு ஆண்டும் உலகின் ஏதாவது ஒரு நாட்டில் ஒரு போர் நிகழ்ந்திருக்கிறது! 165 முறை பெரும் மோதல்கள் அரங்கேறின. சுமார் 4 கோடி (40 மில்லியன்) பேர் அந்த ஒரு நூற்றாண்டில் மட்டும் யுத்தங்கள் வாயிலாக இறந்து போயினர். அதில் 75 விழுக்காட்டினர், முதல் மற்றும் இரண்டாம் உலக யுத்தம் காரணமாகவே இறந்தனர்.
20-ஆம் நூற்றாண்டின் 10 பெரும் போர்கள்
உலக மகா யுத்தம் - I (1914 - 1918)
ரஷ்ய உள்நாட்டுப்போர் (1918 - 1921)
சீன உள்நாட்டுப் போர் (1927 - 1949)
ஸ்பானிஷ் உள்நாட்டுப்போர் (1936 - 1939)
இரண்டாம் உலக மகா யுத்தம் - II (1939 - 1945)
அரபு - இஸ்ரேலியப் போர்கள் (1948 - 1973)
கொரிய யுத்தம் (1950 - 1953)
வியட்னாம் போர் (1964 - 1973)
ஈரான் - ஈராக் சண்டை (1980 - 1988)
வளைகுடா போர் (1991)
காலத்தால் நீண்ட மற்றும் குறுகிய போர்கள்
சில போர்கள் நீண்ட காலம் தொடர்ந்து நடைபெறுவதுண்டு; சில மணிக்கணக்கில் முடிந்து விடுவதும் உண்டு!
நூறு ஆண்டுகள் போர்: இங்கிலாந்துக்கும், பிரான்சுக்கும் இடையே 1337-இல் தொடங்கி 1453 வரை (நூறு ஆண்டுகளுக்கும் மேலாக) நீடித்தது.
முப்பதாண்டு போர்: 1618 முதல் 1648 வரை பெரும்பாலும் ஜெர்மனியிலேயே நடந்தது.
ஏழாண்டு போர்: 1756 முதல் 1763 வரை ஐரோப்பிய நாடுகளிடையே நடைபெற்றது.
ஏழு வார போர்: 1866-இல் ஆஸ்திரியா மீது இத்தாலியின் உதவியுடன் புருஷியா தொடுத்த போர்.
ஆறு நாள் சண்டை: 1967-இல் இஸ்ரேல் ஆறே நாட்களில் எகிப்தையும், சிரியாவையும் பணிய வைத்தது.
நூறு மணி நேர யுத்தம்: 1969-இல் ஹொண்டுராசுக்கும் எல் சால்வடாருக்கும் இடையே நடந்தது. இதற்குக் காரணம் ஒரு கால்பந்தாட்டப் போட்டியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு!
யுத்த களத்தின் விசித்திரங்கள்!
போர்களில் சில வேடிக்கையான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களும் நடப்பதுண்டு:
கிருமி யுத்தம்: முன்பு 'பிளேக்' நோய் பாதிப்பு அதிகம் இருந்தபோது, எதிரிகளின் கூடாரங்களில் அந்த நோயால் இறந்தவர்களின் உடல்களை வீசிப் போர் நடத்துவார்களாம்.
இரசாயன ஆயுதங்கள்: முதல் உலகப்போரில் ஜெர்மன் படைகள் 'கடுகு வாயு' (Mustard Gas) என்ற நச்சுத் திரவத்தைப் பயன்படுத்தின. இது நுரையீரலைப் பாதிக்கும்.
கால்பந்துக்காக ஒரு போர் நிறுத்தம்: 1914-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று, போர்க்களத்தில் இருந்த ஜெர்மன் மற்றும் பிரிட்டிஷ் படைகள் ஒரு கால்பந்து போட்டி நடத்துவதற்காகத் தற்காலிகமாகப் போரை நிறுத்தி வைத்தனவாம்!
டாங்குகளை அழிக்க நாய்கள்: இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா, நாய்களின் உடலில் குண்டுகளைக் கட்டி அவற்றை எதிரிப் படை டாங்குகளின் அடியில் செல்லவிட்டு வெடிக்கச் செய்தது.
சமாதானமே சிறந்த வழி!
இப்பொழுதும் ரஷ்யா - உக்ரைன் இடையேயும், இஸ்ரேல் - பாலஸ்தீனம் மத்தியிலும் போர்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சரி குட்டீஸ்! உங்கள் காலத்திலாவது சண்டைகளை ஒழித்து விட்டுச் சமாதானமாக வாழுங்கள். இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பகையை ஒழித்து ஒன்றுபட்டால், உலகிலேயே முதன்மை நாடுகளாகத் திகழலாம்!
கொசுறுச் செய்தி: மாசிடோனியாவின் 'அலெக்சாண்டர் தி கிரேட்', தான் பங்கு கொண்ட அத்தனை போரிலும் வெற்றியையே தழுவினாராம்; ஒன்றில் கூட அவர் தோற்றதே இல்லையாம்! நமக்குப் போர் வேண்டாம், ஆனால் நீங்கள் அனைவரும் உங்களது தேர்வுகள் மற்றும் போட்டிகளில் அந்த அலெக்சாண்டரைப் போல் வெற்றி பெற வேண்டும். முயன்றால் அத்தனையும் சாத்தியமே!
குட்பை குட்டீஸ்!