
பிள்ளையார் கோவிலுக்கு சென்றாலே, சாமியை தரிசித்து விட்டு நம்மை அறியாமலே நாமே இரண்டு அல்லது மூன்று தோப்புக் கரணங்களை போட்டு விடுகிறோம், இதற்கெல்லாம் காரணம் நம் முன்னோர்களும், நமது அம்மா அப்பாவும் தான். ஏனென்றால், அவர்கள் தான் தோப்புக்கரணம் போடுவதை சொல்லிக் கொடுத்தார்கள்.
அதுமட்டுமில்லாமல் நமது தாத்தா போடுவதைப் பார்த்து நாமும் கோவிலுக்குள் அப்படியே தோப்புக் கரணங்களை போட்டு பழகிவிட்டோம். வலது கை இடது காதை பிடித்தவாறும், இடது கை வலது காதை பிடித்தவாறும், கண்களை மூடிக்கொண்டு கீழே கால்களை மடக்கி குனிந்து எழுந்து இதுபோன்று நாம் தோப்புக்கரணங்களைப் போட்டு பழகி இருப்போம்.
தோப்புக்கரணம் போட்டால் நமக்கு பிள்ளையார் கஷ்டங்களை தீர்த்து விடுவார் என்று நமக்குள்ளே ஒரு புரியாத புதிருக்கான பதிலை ஒழித்து வைத்திருக்கிறோம்.
ஆனால் தோப்புக்கரணம் போடுவதை ஆன்மீக ரீதியில் பார்த்தாலும் கூட, அறிவியல் ரீதியில் பார்க்கும்போது நமது உடலுக்கும், மனதுக்கும் நல்ல ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் ஏற்படுத்துகிறது என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
அதாவது நாம் ஒவ்வொரு முறையும் குனிந்து எழும் பொழுது இரத்த ஓட்டமானது, கால் பாதத்தில் இருந்து மூளைக்கு விரைவாகவும், சீராகவும் அழுத்தப்படுகின்றன. இதனால் இரத்த ஓட்டமானது அதிகரிக்கிறது. அதேபோல் இரத்த ஓட்டத்தை உணர்வடையச் செய்யும் ஒரு பயிற்சியாகவும் விளங்குகிறது.
அதுமட்டுமில்லாமல் தோப்புக்கரணம் போடுவதால் புத்திக்கூர்மையும் மேம்படுகின்றன. ஆக மொத்தம் தோப்புக்கரணம் என்பது ஒரு நல்ல உடற்பயிற்சியே ஆகும். இதனை தினமும் கூட 5 இலிருந்து 10 என்ற எண்ணிக்கையில் போட்டு வரலாம். இந்த தோப்புக் கரணத்தை குழந்தைகளுக்கும் இப்போது நாம் சொல்லித் தர வேண்டும்.
இன்றைய டிஜிட்டல் உலகில் இருந்து மாறுபட்டு இதுபோன்ற செயல்களில் குழந்தைகளை ஈடுபட வைப்பது பெற்றோர்களாகிய உங்கள் கையில் தான் உள்ளது. தோப்புக்கரணத்தை ஆன்மீக நோக்கத்தில் போட்டாலும் சரி, உடற்பயிற்சி நோக்கத்தில் போட்டாலும் சரி இரண்டு நோக்கங்களும் நம் உடலுக்கு நன்மையை தான் தரப்போகிறது என்பதில் எந்த ஒரு ஐயமுமில்லை..!