
ஹாய் குட்டீஸ்! பூரம் திருவிழா பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? திருவிழா என்றாலே குட்டீஸுக்கு கும்மாளம் கொண்டாட்டம்தான். அதிலும் கோவில் திருவிழா என்றால்?
திருச்சூரில் உள்ள பிரபல வடக்கு நாநர் ஆலயத்தில் இது கொண்டாடப்படுகிறது. அங்கு மிகவும் சிறப்பாக போற்றப்படுவது யானைகளின் ஊர்வலம்தான். பூரம் திருவிழாவின்போது யானைகளின் ஊர்வலத்தைப் பார்க்க பார்க்க பரவசம் ஏற்படும்.
பல யானைகள் ஊர்வலமாக அசைந்து வருவது கண்கொள்ளாக் காட்சி. ஒவ்வொன்றின் நெற்றியிலும் அகலமான பதாகை இருக்கும். கொட்டு மேள இசையின் பின்னணியில் அவை நடந்து வரும் அழகே அழகு. இந்த ஊர்வலம் கணிமங்கலம் சாஸ்தா கோவிலிலிருந்து வடக்கு நாதர் ஆலயம்வரை நடைபெறுகிறது. யானையின் மீது வண்ண குடைகள் காணப்படுவதும் எழிலுக்கு எழிலூட்டுவதாக அமைந்துள்ளன.
நூற்றுக்கும் அதிகமான கலைஞர்கள் கலந்து கொள்ளும் இந்தத் திருவிழாவில் பஞ்ச வாத்திய கச்சேரி பட்டையைக் கிளப்பும் . கேரளாவில் திமிலம், மத்தளம், ட்ரம்பெட், சங்கு மற்றும் எடக்கா ஆகியவற்றை பஞ்ச வாத்தியங்கள் என்பார்கள். அவற்றின் இசையமைப்பில் இந்த திருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
திருவம்பாடி மற்றும் பரணக்காவு ஆலயங்களில் இருந்து எடுத்து வரப்படும் திருவுருவங்கள் வடக்கு நாதர் ஆலயத்தின் மேற்கு புற வாயிலில் பக்தர்களுக்கு அருள் புரிவது சிறப்பாக இருக்கும்.
பட்டாசுகளையும், வாணவெடிகளையும் எக்கச்சக்கமாக வெடித்தும், கொளுத்தியும் தூள் கிளப்புவார்கள். இது இந்து மதத் திருவிழாவாக கருதப்பட்டாலும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களும் இதில் உற்சாகமாக பங்கு கொள்கிறார்கள். இந்த கொண்டாட்டத்துக்கு ஒரு கிறிஸ்தவ பள்ளிக்கூடம் தனது கட்டடத்தையும் மைதானத்தையும் கொடுத்துதவி உற்சாகமூட்டுகிறது. பந்தல்கள் அமைப்பவர்கள் முஸ்லிம் சமூகத்தினர், மதநல்லிணக்கத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் இந்த திருவிழா விளங்குகிறது.
திருச்சூர் நகரத்தை நிர்மாணித்தவர் சக்தன் தம்புரான் என்ற மன்னர். அவரது ஆட்சி காலத்தில் வடக்கு ஆலய வளாகம் சீரமைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில்தான் அந்த ஆலயத்துக்கு பிரம்மாண்டமான கோபுரங்கள் எழுப்பப்பட்டன. ஆலயத்தின் நிர்வாகத்தையும் அவரே பார்த்துக் கொண்டார். ஆலயத்தின் அருகில் உள்ள மைதானத்தில்தான் பூரம் திருவிழா கொண்டாடப்படுகிறது.
தமிழ் நட்சத்திரங்களில் மகம் என்ற நட்சத்திரத்திற்கு அடுத்ததாக இடம்பெறுவது பூரம். அந்த நட்சத்திரத்தன்றுதான் இது கொண்டாடப்படுகிறது. அதனால் இதற்கு பூரம் திருவிழா என்று பெயர்.
நீங்கள் அப்பொழுது பள்ளி விடுமுறையில் இருப்பீர்கள். ஆதலால் சமயம் கிடைக்கும் பொழுது ஒருமுறை குடும்பத்தோடு சென்று பார்த்துவிட்டு வாருங்கள் குட்டீஸ்! இதனால் உவகை மேலிடும். அந்த வருடத்துக்கான அனைத்து வேலைகளையும் செய்ய இது போன்ற திருவிழாக்களை காண்பது உற்சாகமளித்து, ஊக்க டானிக்காக செயல்பட வைக்கும் என்பது உறுதி. அதை நீங்களே நேரில் பார்த்தால் அறிந்து கொள்வீர்கள்.