குழந்தைகளே! ரோடில், ரயில் ஓடிய விஷயம் தெரியுமா உங்களுக்கு?
சாலையில் பதிக்கப்பட்ட இரட்டை தண்டவாளங்கள். அதன்மேல் ஒவ்வொன்றும் இருபதடி நீளம் கொண்ட இரண்டு ரயில் பெட்டிகள். மேலே தொங்கிக் கொண்டிருக்கும் கம்பியை, வண்டியின் கூரையிலிருந்து நீண்ட ஒரு கொக்கி தொட்டபடி, மின்சாரத்தைப் பெற்று இரும்புச் சக்கரங்களுடன் கூடிய அந்த வண்டியை இயக்கும். இந்த ரயில் வண்டிக்கு ‘ட்ராம்’ என்று பெயர்.
சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை நகரில் போக்குவரத்து சாதனமாக இயங்கி வந்தது இந்த 'ட்ராம்'. உலகிலேயே, கொல்கத்தாவிற்கு அடுத்து டிராம் ரயில் ஓடியது நம் சென்னையில்தான் என்பது நமக்குப் பெருமையளிக்கும் விஷயம்.
ஆமாம், 1895ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி இந்த எலக்ட்ரிக் டிராம்கள் ஓடத் தொடங்கின. இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டனில்கூட இந்தப் போக்குவரத்து சாதனம் அறிமுகப் படுத்தப்படவில்லை!
அதோடு, நம் சென்னையில் புழக்கத்துக்கு வந்து பத்து வருடங்கள் கழித்துதான் அமெரிக்காவிலும் இந்த டிராம் ரயில்கள் ஓடின!
ரொம்பவும் நிதானமாக இயங்கிய ரயில் இது. மணிக்கு 7 மைல் வேகம்! கட்டணமும் அப்படியே - ஒரு மைலுக்கு 6 பைசா! தினசரி டிக்கட் தவிர, மாதாந்திர சீசன் டிக்கட்டும் உண்டு. மொத்தம் 24 கிலோமீட்டர் தூரம்வரை டிராம் ரயில்கள் பயணம் செய்ய தண்டவாளங்கள் சாலைகளில் பதிக்கப்பட்டிருந்தன. மொத்தம் 97 டிராம் வண்டிகள் தினமும் ஒவ்வொன்றிலும் 150 பயணிகள் வீதம் ஏற்றிக் கொண்டு செல்லும்.
சாலை நடுவிலேயே ‘ஸ்டேஷன்கள்‘ இருக்கும். ஸ்டேஷன் என்றால் பிளாட்பாரம், மேற்கூரை வகையறா எல்லாம் கிடையாது. நடுச்சாலைதான். 'டிராம் நிறுத்தம்' என்று அறிவிக்க ஒரு கம்பத்தில் வட்டமாக டிராம் படம் வரையப்பட்டு நட்டு வைக்கப்பட்டிருக்கும்.
பல பயணிகள் டிராம் நிற்பதற்கு முன்னாலேயே இறங்குவதும், ஏறுவதும் செய்வார்கள். அதனால் டிராம் ஸ்டேஷன் ரொம்பவும் அவமானத்துக்குள்ளாகும். ஆமாம், டிராம் வேகம் அத்தனை ஸ்லோ! சைக்கிள் ஓட்டிகளும், ஏன் நடந்து செல்பவர்களுகூட ஓடிக்கொண்டிருக்கும் டிராமைவிட வேகமாகப் போவார்கள்! டிராம் வந்து கொண்டிருந்தாலும் பாதசாரிகள் எதிர்ச்சாரிக்குப் போக, இந்த தண்டவாளத்தைக் குறுக்காகக் கடந்து செல்வார்கள்! டிராம்களில் ஹாரன் உண்டு – தண்டவாளத்தில் உட்கார்ந்து கொண்டு நகராமல் அழிசாட்டியம் செய்யும் கால்நடைகளை விரட்ட!
சிலசமயம் இந்த ரயிலும் தடம் புரளுவதுண்டு. அப்போது சிறிய அளவிலான கிரேன் வரவழைக்கப்பட்டு தடம் இறங்கிய பெட்டியைத் தூக்கி தண்டவாளத்தின் மேல் நிறுத்தி வைத்துப் போக்குவரத்தைத் தொடர்வார்கள்.
சென்னையில் பாரீஸ் கார்னர், சென்டிரல் ரயில் நிலையம், மவுண்ட் ரோடு, ராயப்பேட்டை, லஸ், மயிலாப்பூர், சாந்தோம் மற்றும் புரசைவாக்கம் ஆகிய தடங்களில் டிராம் இயங்கியது. பின்னாளில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் 1953 ஏப்ரல் 11ம் தேதியுடன் இந்த சேவை முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டது.
ஆனால் கொல்கத்தாவில் இந்த டிராம் சேவை 150 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. அங்கே 1873ம் ஆண்டு இந்த சேவை தொடங்கப்பட்டது. 1902ம் ஆண்டுவரை டிராம் வண்டிகளை முதலில் குதிரைகள், பிறகு நீராவி எஞ்சின் இழுத்துச் சென்றன. பிறகு மின்மய பாதையாக டிராம் ஓடு தளம் அமைக்கப்பட்டது.
ஆனால் 1992ம் ஆண்டு முதல் கொல்கத்தாவிலும் கொஞ்சம் கொஞ்சமாக டிராம் சேவைகள் குறைந்தன. புதுமையான பெட்டி அமைப்பு, இருக்கைகள், புதுப்புது வழித்தடங்கள் என்று மாற்றங்கள் கண்டாலும், 2022க்குப் பிறகு மேலும் டிராம் சேவை குறைந்து இந்த ஆண்டு (2024), அக்டோபர் மாதம் 15ம் நாள், பிற்பகல் 3 மணியோடு ஒட்டு மொத்தமாக டிராம் கொல்கத்தாவிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு விட்டது.
டிராம் பற்றி அறியாத இன்றைய இளைஞர்கள், சுமார் இருபது வருடங்களுக்குப் பிறகு, தம் குழந்தைகளிடம் மெட்ரோ ரயில், வந்தே பாரத் என்றெல்லாம் சொல்லி பெருமை பட்டுக் கொள்ளலாம், இல்லையா?