
ஒருவனை ஒளிமயமான எதிர்காலத்துக்கு அழைத்துச்செல்ல ஆறுவழிகள் இருக்கின்றன. அந்த ஆறுவழிகள் இவைதாம். 1. உழைப்பு 2. உழைப்பு 3. உழைப்பு 4. உழைப்பு 5. உழைப்பு 6. உழைப்பு என்று ஓர் அறிஞர் குறிப்பிட்டிருக்கிறார்.
கடினமாக உழைக்கத் தயாராயிருப்பவர்கள்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதே இதன் பொருளாகும். வெற்றி பெறுவதற்கு நிறையப் பணம் தேவைப்படுவதில்லை; பெரிய மனிதர்களுடைய சிபாரிசுகள் தேவையில்லை; பெரிய பணக்காரக் குடும்பங்களில் பிறக்க வேண்டிய அவசியமும் இல்லை.
ஒருவன் குமாஸ்தாவாக வரவேண்டுமென்று ஆசைப்பட்டால். அதற்குக் கொஞ்சம் உழைப்புப் போதும். ஆனால் பெரிய தொழிற்சாலையின் அதிபராக அவன் வர ஆசைப்பட்டால் அவன் மிகப்பெரிய அளவில் பாடுபட்டு உழைக்கத் தயாராயிருக்க வேண்டும்.
நாம் போட்டி நிறைந்த உலகில் வாழ்ந்து வருகிறோம். மற்றவர்களை விட நம்முடைய உழைப்பு குறைவாக இருந்தால் கட்டாயம் வாழ்க்கையில் முன்னேற முடியாது.
சிலர் முயற்சி செய்ய ஆரம்பித்த சில நாட்களில் தங்களுக்குச் செல்வம். புகழ். உயர் பதவிகள் போன்றவைகள் கிடைக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள்.
அவைகள் உடனடியாகக் கிடைக்காவிட்டால் மனம் தளர்ந்து முயற்சி செய்வதையே விட்டு விடுகிறார்கள்; இது தவறு. தான் ஆசைப்பட்டதை அடையும் வரையில் ஒருவன் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அவனுக்குத்தான் ஒளிமயமான எதிர்காலம் அமையும்
தாமஸ் ஆல்வா எடிசன் மின்விளக்கை கண்டுபிடிப்பதற்கு முன் தொள்ளாயிரம் முறைகள் முயற்சிகள் செய்து தோல்வி கண்டிருக்கிறார்.
அப்படியிருந்தும் மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்து முடிவில் மின் விளக்கைக் கண்டுபிடித்து மனித வாழ்க்கையை ஒளிமயமானதாக மாற்றினார்.
பீத்தோவன் என்ற பியானோ கலைஞர் ஒரு பெரிய இசை விழாவில் அற்புதமாகப் பியானோவை வாசித்தார். விழா முடிந்தவுடன் மக்கள் வெள்ளம் அவரைச் சூழ்ந்து கொண்டு அவருடைய கலைத்திறமையைப் பாராட்டியது.
'ஐயா நீங்கள் சாதாரண மனிதர் அல்ல கடவுள் அருள் பெற்றவர் என்று அவரைப் பலர் பலவிதமாகப் புகழ்ந்தனர். அதற்கு அவர் சொன்னார்:
'நான் கடவுள் அருள் பெற்றவனோ இல்லையோ என்னிடம் மந்திரசக்தி எதுவும் இல்லை. கடந்த நாற்பது வருடங்களாக தினமும் எட்டுமணி நேரம் பயிற்சி செய்து வருகிறேன்' என்றார்.
எனவே உங்களுடைய ஒளிமயமான வாழ்க்கைக்குத் தேவை விடா முயற்சியும் உழைப்பும்தான்!